Saturday, January 30, 2010

விலங்குகளின் பலான மேட்டர்...!!!


இப்போது டிஸ்கவரி சேனல் தமிழில் வருகிறது. விலங்குகளின் பலான மேட்டர் என்ற விஷயத்தையும் தாண்டி பல நல்ல விஷயங்களை பார்க்க முடிகிறது. (நாங்கெல்லாம் மாநகராட்சி பள்ளி தான் என்ன செய்ய...) வெள்ளைகாரனின் ஆராய்ச்சிக்குரிய விஷயம் கூட புதிது புதிதாக இருக்கிறது. பனிமலை, நீள்கடல், அடர்ந்த காடு என அவனின் காலடி படாத இடமே இல்லை போலிருக்கிறது உலகில். அது சரி வேறோர் கிரகத்தில் வாழும்
உயிரினங்களுக்கே ஆப்பு வைக்க துடிப்பவர்கள் ஆயிற்றே (அவதார் காண்க)

100 கோடி வருடங்களாக பல உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்கிறதாம். இந்த பூமிக்கு இறுதியாக வந்த விருந்தாளிகள் யார் தெரியுமா (நாம் தான்) 10 மில்லியன் வருடங்கள். ஆனால் இன்று எல்லா உயிரினங்களையும் அடிமை படுத்தி அவர்களின் வாழ்வாதரங்களை அழித்து நாம் செழித்து கொண்டிருக்கிறோம். (survival of life)

ஆதிவாசிகளின் சில பழக்க வழக்கங்கள் பிரம்மிக்க வைக்கிறது. ஸ்கை டைவிங் - உலகின் காஸ்ட்லியான திரில்லிங்கான விளையாட்டு ஹவாய் தீவுகூட்ட ஆதிவாசிகளிடமிருந்து சுட்டது தான். (குஷி படத்தில் விஜய் மேலிருந்து விழுவாரே) அழிந்து போன பல நாகரீகங்கள், மன்னர் காலத்திய வாழ்க்கை முறை, பிரம்மனடாம கட்டுமானங்கள் என வியக்க வைக்கும் பல விஷயங்களை தமிழில் அறிந்து கொள்ளமுடிகிறது.விலங்குகளின் வாழ்க்கைமுறை, தங்களை பாதுகாத்து கொள்ள அவைகளின் தற்காப்பு திட்டங்கள், அதை புரிந்து கொண்டு ஆராய்ச்சியாளர்கள் விளக்கும் விதம் அருமை. நோஞ்சானாக இறந்தாலும் சிங்கத்தின் தோற்றம் ஒரு வித பயத்தை தருவது ஆச்சர்யம். பல நாடுகளில் பாம்புகளின் வகைகள் ஆயிரத்தில் இருந்தும், இந்தியாவில் மற்றும் அதற்கு இருக்கும் மரியாதையே தனி தான். குறிப்பாக ராஜநாகங்கள் இவை இந்திய காடுகளில் தான் அதிகம் உண்டாம்.நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். டிஸ்கவரி சேனல் நிர்வாகத்தினருக்கு - தமிழில் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நன்றி

டிஸ்கி: தலைப்பை பார்த்து உள்ளே வந்தவர்களுக்கு நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா....
சரி சரி தள்ளி நில்லு காத்து வரட்டும்....

கொம்பு முளைத்த சில பதிவர்கள்...பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் என எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு டைரிகுறிப்பின் காதலோடு. டைரி எழுத இப்பொழுதெல்லாம் யாருக்கும் நேரமோ, மனமோ இருப்பதில்லை. கணினியில் நாள் பூராவும் உட்கார்ந்து பழகி விட்டபின் படிக்கும் பழக்கம் குறைந்து போனமாதிரி எழுதும் பழக்கமும் குறைந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தில் தன் மனதில் தோன்றியதை மிக எளிமையாக இறக்கி வைக்க முடிகிறது. அவற்றுள் சில மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெறுவதும் உண்மைதான். பெரும்பாலும் குப்பைகள் தான் பதிவேற்றபடுகிறது என்றாலும் நம் எல்லோரின் மனங்களும் குப்பைகளால் நிரம்பியது தான் என்பதை யார் மறுக்க கூடும். பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் கூட முதலில் மறுதலிக்கப்பட்டு பின் எல்லோராலும் கொண்டாடப்பட்ட சம்பவங்கள் இறந்தகாலங்களில் நிறைய உண்டு.

பாராட்டுதலுக்காகவோ, அங்கீகரிபிற்கோ எல்லோரும் ஏங்கிக்கொண்டு தானிருகின்றனர். மிகசிலர் தான் பின்னூட்ட வலைகளில் சிக்கி கொள்ளாமல் பதிவிடுவதை வெறும் டைரி குறிப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். இலக்கிய சர்ச்சை என்பது தமிழிற்கு மிக மிக பழைய சமாசாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் சர்ச்சை என்பது கன்றுகுட்டிக்கு காயடிப்பது போன்றது தான். தங்களின் மேதாவி தனத்தை காட்டி கொள்ள அழையா விருந்தாளிகளாக சில பதிவர்கள் பின்னூட்டமிடுவதும், தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பதும் வேதனையளிக்கிறது. இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ள ரத்தம் குடிக்க எல்லா நரிகளும் கூடி கூத்தடிப்பதும் சகஜமாகிவிட்டது.

திறமைக்கு மதிபளிக்க இது ஒபாமா பூமியல்ல. நாமும் அமெரிக்கர்களல்ல என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நீங்கள் கொம்பு சீவிக்கொள்ள உங்கள் முன் பதிவோடு போட்டியிடுங்கள் அல்லது குறைந்த பட்சம் உங்களைவிட பெரிய எழுத்தாளர்களோடு. மேல் மாடியில் நின்று கொண்டு எச்சிலை காறி உமிழ்வது நாகரீகமல்ல. மேல் மாடி என்பது எல்லோருக்கும் எப்போதும் சாச்வதமானதும் அல்ல.

தானாக சேர்த்த கூட்டமோ, எதை கொடுத்து சேர்த்த கூட்டமோ எழுத்தின் தரத்தை தீர்மானிப்பது பின்னூட்டங்கள் மட்டுமல்ல. ஒருபதிவர் (பெயர் தேவையில்லை) தன் படைப்பு தமிழ்மண விருதிற்கு தேர்ந்தேடுக்கபட்டது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். காரணம் தாம் அதிகம் உழைத்து பார்த்து பார்த்து செதுக்கிய தன் முந்தய படைப்புகள் எல்லாம் விருதிற்காக கூட தேர்ந்தெடுக்காமல் புறகணிக்க பட்டிருக்கையில், வெறும் நகைசுவைக்காக புனையப்பட்ட படைப்பு விருது பெறுவதில் அவருக்கே உடன்பாடு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருந்தார்.

ஒரு படைப்பின் அங்கீகாரம் என்பது கூடி நிற்போரின் கைதட்டகளில் மட்டுமல்ல. எழுதியவனின் ஆத்ம திருப்தியிலும் இருக்கிறது. உங்கள் விமர்சனம் ஒரு கைகுலுக்குதளோடு இருந்தால் மட்டுமே படைப்பவனின் ஆத்மா நிறையும். புதிய படைப்புகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறும்.

Saturday, January 23, 2010

கடவுளை காணலாம் - 1

ஏறாத மலையில்லை. போகாத கோவில் இல்லை. வணங்காத தெய்வமில்லை. ஆனால் எங்கும் மனம் ஒட்டவில்லை. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பது போல் அவனே மனமிரங்கி தன்னை காட்டி நின்றான். என்னுடனே பிறந்து என்னுடனே வளர்த்த அவனை நான் கண்டுகொண்டேன். அவனே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும் கண்டேன்.
நம்முள் அவனை காணமல் வேறு எங்கும் அவனை கண்டடைய முடியாது என்பதுவும் புரிந்தது.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
- திருமந்திரம்

உங்களுக்குள் இருக்கும் ஒரு விளக்கை ஏற்றி, வெட்டவெளியின் மகத்துவம் அறியலாம்.
அந்த விளக்கின் முன் நின்றால் வேதனை மாறும். நம் உடலில் அந்த விளக்கு எங்கிருக்கிறது
என்பதை அறிந்து கொண்டால் நீங்களே அந்த விளக்காக விளங்குவீர்கள்.சித்தர்கள் பாடல்கள் எல்லாமே, பெரும்பாலும் எளிய தமிழில் இருந்தாலும் ஒரு மறைபொருளாகவே சொல்ல வந்த விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் விளங்குகிறது நாம் எங்கோ வெளியின் தேடிகொண்டிருக்கும் ஒரு விஷயம் நம்முள் தான் இருக்கிறது என்பது. அது எங்கேயென்று தேடி கண்டடைவது தான் உண்மையான ஆன்மிகம். இதே செய்தியை இன்னுமொரு பாடல் நன்கு உறைக்கும்படி
நமக்கு சொல்கிறது.

வானுக்குள் ஈசனைத் தேடும் மருளர்கள்
தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
தேனுக்குள் இன்பம் சிறந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.
- திருமந்திரம்

எவ்வளவு எளிமையான பாடல் பாருங்கள். நம்முள் ஒளிந்திருக்கும் ஈசனை எங்கோ வானில்
வாழ்ந்து கொண்டிருப்பதாய் நம்புகிறோம். தேனின் சுவை எத்தகையது அது சிவப்பென்றோ கறுப்பென்றோ நம்மால் வகைபடுத்த முடியுமா..? தேனின் சுவை எவ்வளவு நிஜமோ, எவ்வளவு இயற்கையான விஷயமோ அவ்வளவு உண்மை நம்முள் ஈசன் வாழ்ந்து கொண்டிருப்பது.

அவர் எங்கிருக்கிறார்..? எப்படி அறிந்து கொள்வது..? எப்படி உணர்வது...?

(தொடரும்)

ஆயிரத்தில் ஒருவன் - இது வெறும் விமர்சனமல்ல..!!


எந்த படத்திற்கும் இல்லாத அளவில் மிகபெரும் அலசல் இந்த படத்திற்கு ( கிட்டத்தட்ட 80 % பதிவர்கள் ) கொடுத்தாகி விட்டது. நான் கொடுக்காமல் விட்டால் எப்படி. அதனால் என் பங்கிற்கும் இந்த ஒரு பதிவு. ஆனால் என்ன ஒரு பிரச்னை என்றால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் என்ன ஒவ்வொரு பதிவரும் பார்த்து கொடுத்த அலசலை நான் அதையெல்லாம் படித்து கொடுக்கிறேன். எல்லாம் ஒன்று தானே.

செல்வராகவன் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். கல்கி முதல் பாலகுமாரன் வரை நமக்குள் கொடுத்திருந்த சோழர்களின் பொற்கால முகத்திரை, காட்டு மிராண்டிகளாக கறிதுண்டுகளுக்காக வெட்டி சாகும் பஞ்ச பராரிகளாக காட்சி படுத்தியிருப்பதற்கு. வெள்ளைகாரர்களை - காரிகளை பார்த்து இனி வாய்பிளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் இரண்டு காரணங்களுக்காக.

ஒன்று பிரம்மாண்டம் என்பது அவர்களக்கு மட்டுமே சொந்தமல்ல. நம்மளும் எடுக்க முடியும் என்று நிருபித்து இருப்பதற்கு. இரண்டு ஆபாச நெளிவு சுளிவுகளை தாண்டி, வார்த்தைகளில் ஆபாசத்தை ஆபாசம் என்று தெரியாத வகையில் இயல்பான யதார்த்தமான வசனங்களாக தமிழிலும் கொடுக்க முடியும் என்று காட்டியதற்கு. இதன் பரிணாம வளர்ச்சியாக படுக்கையறை காட்சிகள் கூட இனி இங்கு இயல்பான விஷயங்களாகி போகும் ஒரு நாள். எதிர்காலத்தில் பதினோரு மணி காட்சிகென்று மூன்றாதர மலையாள, ஆங்கில படங்களை தேட வேண்டியதில்லை.

பார்த்திபன், ரீமா, கார்த்தி கதாபாத்திரம் எல்லோராலும் சிலாகிக்கபடுகிறது.

வாழ்த்துக்கள் பார்த்திபன் கதாநாயக வட்டத்திலிருந்து வெளி வந்து சாதித்து இருக்கிறீர்கள். அடுத்த பிரபு.

வாடி என் செல்லம் ரீமா. எங்கு ஒளிந்து கிடந்தது இவ்வளவு திறமை. உன் நாடி நரம்பெல்லாம் நடிக்கிறது. உன் உடை கூட ஒரு கவர்ச்சி சாயம் பூசி இருப்பது உனக்கு கிடைத்த வெற்றியா..இல்லை இந்த செல்வராகவனக்குள் எவ்வளவு நம்பிக்கை அந்த உடை மேல்.

இரண்டாவது படத்திருக்கு இவ்வளவு நாள் காத்திருக்கும் போதே நினைத்தேன் எதோ ஒன்று இருக்கு என்று. கார்த்தி அதை நிருபித்து இருக்கிறார். ஆனால் பருத்தி வீரன் சாயல் (அந்த தெனாவெட்டு) அடுத்த படத்தில் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.

அப்பாடா...!! ஒரு படம் பார்க்கமலேய விமர்சனம் எழுதியாகிவிட்டது. படம் பார்த்தவர்கள் யாரவது இந்த விமர்சனத்தை காரசாரமாக விமர்சனம் செய்யுங்கள் பார்க்கலாம்.

Friday, January 22, 2010

"பசை" இல்லை என்றால்

எத்தனை முறை கோர்த்தும்
வார்த்தைகள் சிதறியோடுகின்றன...
பதிவில் பதிவு செய்யமுடியாத
துரோகங்கள்
தினம் தினம் அரங்கேறுகிறது வாழ்வில்.

முகம் அறியாதவனோ...
எதிரியின் துரோகமோ... ஒரு பொருட்டில்லை.

வளையவரும் சுற்றம்,
உலகை காட்டிய தகப்பன்,
கட்டிய மனைவியின்
துரோகங்கள் மீளமுடியாதவை.

எண்ணிக்கையில் அடங்கும் சில
காகிதங்களே
எண்ணங்களை கொல்கிறது.
"பசை" இல்லை என்றால்
உறவு கோட்டைகள் உதிர்த்து போய்விடுகிறது.

Monday, January 18, 2010

நீயும் சிவமாவாய்....!!!

நூலிழை காற்று
நூறாயிரம் மைல் உள்ளோடி
ஆடுது பொம்மலாட்டம்...!

அது
உச்சந்தலை மயிர்க்கால் வழியோட...
பிறவி இனியில்லை - இனி
தெய்வம் வேறில்லை

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...ஆயிரம் மந்திரம் தின்று
தினம் தினம் துப்பி
அவதொன்றுமில்லை

கிழக்கென்ன மேற்கென்ன எண்திசை
சுழன்றாலும் கைலாயம் கண்டாலும்
மரணத்தின் வாசலுக்கு
ஒற்றை பயணம்

உள்ளாடும் காற்றின் தாளலயம்
கைகொள்..
கைகொள் மகனே - நீயும் சிவமாவாய்...

Friday, January 15, 2010

அவதார் - ஒரு புதிய பார்வை...!!

சினிமா பார்ப்பதை நான் விரும்புவதில்லை. காரணம் 2 மணி நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து அந்த இழவை பார்க்கும் பொறுமை இல்லை. அதை விட முக்கிய காரணம். குடும்பம். மனைவியை தனியே விட்டு சினிமா பார்க்க விரும்பவில்லை. மனைவிக்கு சினிமா பிடிக்கும் தான். ஆனால் ஒன்றரை வயது குழந்தையை கையில் வைத்து கொண்டு படம் பார்ப்பது என்பது பக்கத்து சீட்டுகாரனின் பொறுமைக்கு வேலை வைக்கும் விஷயம் என்பதால் சினிமா பார்பதையே விட்டாகிவிட்டது. மட்டுமில்லாமல் இப்போது வெளிவரும் படங்களின் தரம் இரண்டாம் ஷோ ஆரம்பிபதற்குள் கிழித்து தொங்கவிட படுகிறது பதிவுகளில். அதை நான் வேறு பார்த்து அவஸ்தை படவேண்டுமா...!!

ஆனால் நேற்று படம் பார்க்கவேண்டிய ஒரு நிர்பந்தம். மனைவி குழந்தைகள் வீட்டில் இல்லை. சேலம் போய் அழைத்து வரவேண்டும். ஒரு இரண்டு மூன்று மணி நேரம் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவதார் ஓடிகொண்டிருந்த தியேட்டருக்குள் நுழைந்தேன்.ஒரு படைப்பு அது எழுத்தோ, நாடகமோ, இசையோ, திரைப்படமோ, எதுவாக இருந்தாலும் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் ஒரு சில மணி நேரங்களுக்காவது அதன் அழுத்தத்தில் இருந்து, பின் விடுபட நேருமானால் அது சிறந்த படைப்பு என்பது என் தனிப்பட்ட கருத்து. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு படம் பார்த்த திருப்தி.

பல மணி நேரம் அந்த படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. விமரிசனத்திற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் அதன் பிரம்மாண்டம், காட்சி படுத்திய விதம், அயல் கிரகம் குறித்த மனித சிந்தனைக்கு எவ்வளவு எட்டுமோ அத்தனையும் படத்தில் கொண்டு வந்திருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. மனிதன் அயல்கிரகத்தில் காலடி எடுத்துவைக்க இன்னும் குறைந்தது ஒரு 500 வருடங்கள் ஆவது ஆகும். கதையில் சொல்லப்பட்ட அன்டோரா கிரகம் என்பது மிக மிக தொலைவு இன்றைய விஞ்ஞான அறிவை பொறுத்த வரையில். அப்படியானால் இன்னும் 500 வருடங்கள் போன பின்னும் மனிதன் திருந்தவே மாட்டனா..? ஈராக்கின் பெட்ரோலுக்காக அமெரிக்கன் அத்து மீறி நுழைந்து ஒரு தேசத்தின் முகவரியை கிழித்து தொங்கவிட்ட குணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கிறது..இந்த படத்தின் கதை கருவும்.. கதாநாயகன் ஒரு சீனில் சொல்லும் வசனம் " உங்களுக்கு தேவை பட்டது கிடைக்கணும் என்பதற்காக அவர்கள் தங்கள் தேசத்தை இழக்கனுமா...அதை அவர்களை அழித்துதான் பெறனுமா.." வெடித்து கிளம்பும் அவனின் கோபம் அவன் ஒரு நொண்டி என்பதற்காக பரிகசிக்க படுகிறது..

நாம் எதற்காக இவ்வளவு வேகமாய் வளர்கிறோம்..ஒரு எல்லையில் துன்பமே இல்லாத ஒரு நிலையை மனித சமுதாயம் கண்டு விடும் என்ற நம்பிக்கையில் தானே...? அப்பறம் எதற்கு அடுத்தவன் பொக்கிஷம்.. அடுத்தவன் பொக்கிஷம் நமக்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனித இயல்பாக இருக்குமென்றால் மனிதன் வளரவே போவதில்லை என்று தான் அர்த்தம். வளரவே முடியாத ஒரு சீக்கு பிடித்த சமுதாயத்தில் நானும் ஒரு அங்கம் என்பதே நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது...

இந்த படத்தில் நான் விரும்பாத ஒரே விஷயம் 500 (அ) 1000 வருடங்களுக்கு பின் நடக்க போகும் ஒரு கதை களத்தில், இன்றைய மனிதர்களின் கற்பனை எல்லைக்குள் தான் எல்லாமே அடங்கி போயிருக்கிறது. கதை களம் கூட புதுமை என்று சொல்வதற்கில்லை. காட்சி படுத்திய விதம் மட்டுமே புதுமை.

சில சாம்பிள்கள்:

1 . மனித உருவத்திற்கும் செயலுக்கும் 95 சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கிறது அயல்கிரக வாசிகளின் தோற்றமும் செயலும்.

2 . விலங்குகளின் தோற்றமும் செயலும் அப்படியே.

3 . அன்டோரா வாசிகள் தங்களது கூந்தல் வழியாக பறவை, மரங்களின் மனதை அறிகிறார்கள். அது கிட்டத்தட்ட ஒரு கூடல். இரு மனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலின் வெளிப்பாடு. இது புதியது. ஆனால் கதாநாயகனும், கதாநாயகியும் ஒரு தடவை கூட இம்மாதிரி தங்களுக்குள் மனதளவில் இணைவதில்லை. இருவரின் உடல் கலப்பு ஏற்படுவதாக சொல்லப்பட்ட காட்சிக்கு முன்பாகவாவது இம்மாதிரி ஒரு சீனை வைத்திருக்கலாம். ஆனால் இக்கால மனிதர்களை போல் உதட்டை கவ்வுவது மனதை நெருடுகிறது...

4. வில், அம்பு, ஈட்டி இதை தாண்டி வேறு எதையாவது சிந்தித்திருக்கலாம். அயல்கிரவாசிகளின் ஆயுதமாக.

மற்றபடி இந்த படம் சொல்லி சென்றிருக்கும் விஷயம் இன்னும் பல வருடங்கள் அலச படப்போகும் ஆராய்ச்சிக்கான பாலபாடம். இயக்குனர் காமரூனுக்கு ஒரு ராயல் சல்யுட்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!!!

Tuesday, January 12, 2010

நடந்தது என்ன ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

காலை பேங்க் வாசலில் நின்று கொண்டிருந்தபொழுது (ஏன் என்பது அடுத்த பதிவில்) எதேட்சையாக கண்ணில் பட்ட காட்சி. எதிரில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தடியில் ஒரு வயதான பெரியவர் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து கொண்டிருந்தார். (" ர் " விகுதி ஏன் என்று தெரியவில்லை) அருகில் ஒரு அழுக்கு பை, தாங்கி நடக்க ஒரு கட்டை, ரோட்டில் போவோர் யாரை பற்றியும் எந்த கவலையும் இல்லாமல். ரோட்டில் போவோர் யாரும் அவரை பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அழுக்குபிடித்த தேகம், பல வருடங்களாக வாரப்படவோ, எண்ணெயையோ கண்டிராத கேசம், இரண்டாம் உலகபோரை நினைவு படுத்தும் கால்சட்டையும், பூட்சும் அணிந்து யாராலும் விரும்பப்பட்ட முடியாத தோற்றம் உடையவராய் இருந்தார். எதோ ஒன்று என்னை அவர்பால்
இழுத்தது. அவரையே பார்த்து கொண்டிருந்தேன்.அருகிலிருந்த பெட்டி கடையிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் ஒரு ரொட்டியை வாங்கி அவர் இருந்த பக்கம் வீசி விட்டு போனான். அவன் போன திக்கையே பார்த்த அந்த பெரியவர் என்ன நினைத்தாரோ அந்த ரொட்டியை அவன் போன திசையை நோக்கி வீசினார். நான் ஒரு கணம் ஆடிபோனேன். ஏதோ பாவம் பிச்சைக்காரன், சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்றோ என்ற நல்ல எண்ணத்தில் ஒருவர் ரொட்டியை வாங்கி வீசினால் அவனை நோக்கி திருப்பி எறிகிறாரே, சரியான திமிர் பிடித்த பிட்சைக்கார கிழம் போலிருகிறது என்று நினைத்தேன். பிட்சைகாரர்களில் சிலர் இந்த மாதிரி போக்கிரிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பது உண்மைதான், சில நேரங்களில் வழிபறிகளில் கூட இவர்கள் ஈடுபடுவதுண்டு. அப்படிதான் நானும் நினைத்தேன். ஆனால் அடுத்து நடந்தது மிக மிக அதிசயமான காட்சிகள்.

அதிசயம் 1

அது ஒரு 40 அடி ரோடு. ரோடின் ஒரு மூலையில் நின்று கொண்டுதான் (பேங்க் வாசலில்) எதிர் முனையில் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். என்னை பார்த்து மிக நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார். நக்கலாக என்றால் நமுட்டு சிரிப்பு அல்ல வாய் விட்டு சிரித்தார். பெரிதாக சத்தம் போட்டு சிரித்து விட்டு என்னை பார்த்தார். ஏனோ நான் தலை குனிந்து கொண்டேன். ஒருவேளை நான் மனதில் போக்கிரி, பொறுக்கி, பிட்சைக்கார கிழம் என்றெல்லாம் நினைத்தோமே அதை உணர்ந்து சிரிதாரோ...குற்ற உணர்ச்சியில் தான் தலை தானாக கவிழ்ந்துவிட்டதோ..

அதிசயம் 2

என்ன நினைத்தாரோ வீசி எறிந்த ரொட்டியை மீண்டும் நடந்து போய் எடுத்து வந்தார். "அப்படி வா வழிக்கு...பெரிய புடுங்கி மாதிரி வீசினே...இப்ப பசிக்குதோ.." நான் தான் மனதில் நினைத்துகொண்டேன். ஆனால் சாவதானமாக நடந்து வந்த அவர் ரோடை ஒட்டி இருந்த சாக்கடைக்குள் இறங்கினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை ரோட்டில் வீசியதை எடுத்து சாக்கடைக்குள் போடுகிறாரோ..நான் நின்று கொண்டிருந்த இடத்தில இருந்து அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க முடியவில்லை. அதனால் ரோடை கிராஸ் செய்து அந்த பக்கமாக போனேன். என்னை எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால் கண்டுகொள்ளாதது போல் வாயை குவித்து ஒரு மாதிரி சத்தத்தை எழுப்பினார். என்ன அதியசம் எங்கிருந்து தான் அத்தனை எலிகள் அந்த சாக்கடைக்குள் வந்ததென்று தெரியவில்லை. சிறிதும் பெரிதுமாக அவரை சுற்றி சுற்றி வந்தது...கையில் இருந்த ரொட்டியை பிய்த்து பிய்த்து எலிகளை நோக்கி எரிந்து கொண்டிருந்தார். ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் தான் அவர் கையிலும் ஒன்றும் இல்லை, அங்கு எலிகளும் இல்லை. என்னால் நம்பவே முடியவில்லை. கண்கட்டு வித்தை மாதிரி இருந்தது.

அவர் வித்தியாசமான ஒரு ஒலி எழுப்பியது, எலிகள் திரண்டு வந்தது, அவர் ஒவ்வொன்றாக ரொட்டியை பிய்த்து எரிந்தது..எல்லாம் ஞாபகம் இருக்கிறது...ஆனால் இரண்டு நிமிடத்தில் எப்படி எல்லாம் மாயமாகும்...அவரிடம் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு...இம்முறை எனக்கு பயம் வந்துவிட்டது. அங்கிருந்து மீண்டும் கிராஸ் செய்து பேங்கிற்குள் சென்றுவிட்டேன். ஆனால் மனம் மீண்டும் மீண்டும் அவரிடமே சென்றது. ஒருவேளை சூனியகரனாக இருப்பானோ..அப்படிஎன்றால் ஏன் பிச்சைக்கார வேஷம்..

அதிசயம் 3

பேங்க் வேலையை முடித்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன்...கண் அனிச்சையாக அந்த பக்கத்தை நோட்டமிட்டது. அங்கு யாரும் இல்லை. மரத்தடியே இருந்த அந்த கிழிந்த பை, தங்கு கட்டை எதுவும் காணோம். அப்படியொரு பிச்சைகாரன் இருந்ததற்கான அடையாளத்தையே அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் அந்த மரத்தடிக்கு சென்றேன். ஒரு வித்தியாசத்தையும் என்னால் உணர முடியவில்லை. அந்த சாக்கடைக்குள் எட்டி பார்த்தேன்.. அத்தனை எலிகள் இதனுள் வசிக்கின்றதா..நம்ப முடியவில்லை. அருகில் இருந்த பெட்டி கடையில் சென்று இங்கே ஒரு பிட்சைக்கார பெரியவர் இருந்தாரே.. எங்கே போனார் தெரியுமா..? கடைக்காரன் சொன்னதை கேட்டு மயக்கம் வராத குறை தான் போங்கள்...பிச்சைகாரனா அப்படி யாரும் இங்கே இல்லையே...எப்ப பார்த்திங்க..என்றான்.

Friday, January 8, 2010

வாழ்ந்து பழகு. இல்லையா போய் சாவு.!

சில விஷயங்களை எவ்வளவு பேசினாலும் ஊசி முனையளவு கூட மாற்றம் பெற்று விட போவதில்லை. அதுவே ஒரு சிலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாக இருந்து விட்டால் அந்த கடவுளே வந்து கைவிட சொன்னாலும் எதை கொடுத்து கடவுளை சரிகட்ட முடியும் என்று தான் பார்ப்பார்கள். நம்ம கடவுள்களும் கோபுரத்தின் சைஸை பொறுத்து உண்டியல்களை வைத்து கொண்டிருப்பது இவர்களுக்கு சௌகர்யமாகிவிட்டது.

அரசியல், சினிமா, சீட்டு கம்பனி, விபசாரம், அப்பறம் காவல் துறை (இன்றய தேதியில் பணம் கொழிக்கும் துறைகளில் முக்கியமானது) இந்த பதிவு முழுவதையுமே பட்டியலிட்டாலும் தீராது...சரி விஷயத்துக்கு வருவோம்.. நேற்று யதேச்சையாக கடைதெரு பக்கம் போனேன் மனைவியோடு தான். (ஷாப்பிங்காம்..)

ஒரு துணிக்கடையில் குழந்தைக்கு டிரஸ் வாங்கலாமென்று உள்ளே நுழைந்தோம். வழக்கம் போல் துணைவி துணியை பார்க்க...நம் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. அப்போதுதான் இந்த பதிவின் கதாநாயகியை கண்கள் கண்டது... அவளுக்கு வயதொன்னவோ பத்திற்குள் தான் இருக்கும். பிறந்த நாளுக்கு துணி எடுக்க வந்திருப்பார்கள் போலிருக்கிறது அம்மாவும் மகளும். கூடவே மகளின் தோழிகளாக இருவர்..(ஒரே ப்ளாட்டாக இருக்கலாம்)

விஷயம் இது தான். நாங்கள் உள் நுழைவதற்கு 1 மணி நேரம் முன்பிருந்தே அவர்கள் துணியை தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. அந்த குழந்தையோ அந்த துணி தான் வேண்டுமென்று ஒரே அடம். என்னவென்று காதை அங்கே கொடுத்தப்ப தான் தெரிந்தது விஷயம். அந்த குழந்தைக்கு, அதாவது 10 வயது பெண் குழந்தைக்கு ஆதவன் படத்தில் நயன்தார அணிந்துவரும் ஒரு மிடி வேண்டுமாம். (மிடியோ, ப்ராக்கோ) கடைக்காரரும், அந்த அம்மாவும் என்ன சொல்லியும் கேட்கவில்லை. வேறு எதை கொடுத்தும் டபாய்க்க முடியவில்லை...

இதனால் அறியபடுவது யாதெனில் என்றெல்லாம் எழுதினால் அடிக்க வந்துவிடுவீர்கள் என்று தெரியும். கொஞ்சம் காரசாரமாக பேசுவோமா..

சினிமாவில் தலைவிரித்து ஆடும் ஆபாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆடையின் அளவு குறைய குறைய வக்கிர எண்ணங்கள் இளைஞர்கள் முதல் பெரிசுகள் வரை அரிக்க ஆரம்பித்துவிட்டது. 3 வயது 4 வயது குழந்தைகளிடம் கூட இவர்களின் பாலியல் வக்கிரங்களை தீர்த்து கொள்ள நேர்கிறது..நாளுக்கு நாள் மனிதம் செத்து போய் மிருகம் வாழவும் வளரவும் ஆரம்பித்து விட்டது...

என்ன செய்து கொண்டிருக்கின்றன இந்த மாதர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் எல்லாம். வரதட்சணை கொடுமையா வரிந்து கட்டிக்கொண்டு கணவனையும், மாமியாரையும் கைது செய்ய போர்க்கொடி உயர்த்துவார்கள். தங்களின் சௌகர்யத்துக்காக ஆடம்பர வாழ்க்கைகாக உடம்பை வெள்ளிச்சமிட்டு காட்டும் நடிகைகளும் தாங்கள் ஒரு பெண் என்பதை நினைத்து பார்ப்பதில்லை.

ஆடம்பர பங்களா, கார், ஏவிய வேலைக்கு வேலையாள், பச்சை நோட்டு கட்டுகள் நிரம்பிய பெட்டியின் முன் சமூக கோட்பாடுகள் காற்றில் பறந்து விடுகின்றன..இவர்கள் எல்லோருக்கும் தங்கள் பங்கை நியாயபடுத்த ஒரு நல்ல வாசகம் வேறு கிடைத்துவிட்டது..."கலையை கலையாக பார்க்காமல் காம கண்ணோட்டத்தோடு பார்கிறவர்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்பது" கலைக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் மட்டுமே நிரம்பிய சமுதாயம் அல்ல இது என்பது நிதர்சனம். வித்தியாசம் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில் மிகவும் குறைவு என்பது தான் நிஜமும் கூட.

பெருகி வரும் வன்முறை காட்சிகளால் தான் பள்ளியில் படிக்கும் சிரார்கள் கூட பழிவாங்கும் உணர்வோடு வளர்கிறார்கள்.. ஒரு துறையின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தின் வீழ்ச்சியாக மாறிவிட கூடாது. வெற்றி பெரும் குதிரை மீது தான் எல்லோரும் பணம் கட்டுகிறார்கள் என்பதும், ஓடுகிற படத்தை தான் எடுக்க முடியும் என்பதும் சுயநல வாதம். ஆபாசம் + அததீத கவர்ச்சி + ரத்தம் சொட்டும் வீச்சரிவாள் தான் வெற்றிக்கான பார்முலாவாக இருக்கிறது.. நல்ல கதையம்த்தோடு எப்போதாவது தான் படங்கள் வருகிறது...அப்போது அதையெல்லாம் Trend Set - ஆக ஆக்கமுடியாதவர்கள் அல்லது அத்தகைய திறமையை வளர்த்துக்கொள்ள திராணி இல்லாதவர்கள் தான் மிக எளிதாக யாராலும் காப்பி அடிக்க முடிகிற மசாலா படங்களுக்கு Trend Set படம் என்று சொல்லி வன்முறையையும், காமத்தையும் மாங்கு மாங்கு என்று எடுக்கிறார்கள்.

சினிமாவால் ஆட்சியே மாறிய கதை தமிழர்கள் நன்கு அறிவார்கள். எனவே தான் சொல்கிறேன் சினிமா என்பது மிக பெரிய ஊடகம்.. மக்களை எளிதில் ஈர்க்ககூடிய, உணர்வேற்ற கூடிய சக்தி வாய்ந்த சினிமா என்பது. இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி. உங்களின் கல்லா பெட்டியை மட்டும் நிரப்பிக்கொள்ளும் நோக்கத்தோடு படமெடுக்காதிர்கள். இங்கு தான் நீங்களும் வாழ்கிறீர்கள். உங்கள் சந்ததியும் இங்கு தான் வாழ போகிறது..

"அட போடா...இவரு பெரிய புடுங்கி...காசை பார்க்கிற வரைக்கும் தான் எல்லா தத்துவமும்...." "மரத்தை நடுங்க, மரத்தை நடுங்க" ன்னு தான் கவர்மெண்டு சொல்லுது..இப்ப செம்மொழி மாநாட்டுக்காக திருச்சி ரோட்ல இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டி ரோடு பெரிசு பண்ணலுயா... அது மாதிரி தான் இதுவும். இங்க எதுவும் மாறாது.. எல்லாம் இப்படிதான் இருக்கும்.. சகிச்சிக்கிட்டு வாழ்ந்து பழகு. இல்லையா போய் சாவு.!

மேல இருக்கிற பேரா என் மனசாட்சி சொன்னது...இந்த பதிவை எழுதும் போது எனக்குள் எழுந்த ஆவேசம் அடங்கி போய்விட்டது.. காலம் காலமாக நம்மால் இதை தானே செய்ய முடிகிறது...

இந்த பதிவுக்கு என்ன படம் போடலாம் என்று யோசித்தேன்...நல்ல மாடர்ன் ஆர்ட் ஓன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது..ரத்தத்தின் பினனனியில்..ஆடை குறைந்த பெண்ணின் நிழலுருவம்..வீச்சரிவாள் ஓரத்தில்..

"போடா மயிறு..நயன் படம் போடாமே..." நல்ல வாயில வருது..

மீண்டும் என் மனசாட்சி தான்...

நான் என்ன செய்ய....நான் இப்ப என்ன செய்ய..(உருண்டை விழிகள் மிரட்ட மாதவன் தம்பி படத்தில் கத்துவாரே..)

Wednesday, January 6, 2010

செவிசாய்க்க யாருமில்லை....

சில்க்கு சட்டை, மைனர் செயின்,
டை கட்டிய வெள்ளை சட்டை,
பட்டைபோட்ட காவி வேட்டி,
எல்லாம் நகர்கிறது...வேகவேகமாய்

சிவப்புக்கு நிதானித்து
வேகமாய் நகரும் வாகனங்கள்

உயிர் வலிக்க
மன்றாடிவிட்டேன்..
செவிசாய்க்க யாருமில்லை....
பசிக்கிறது
சோறு கிடைக்குமா....

Saturday, January 2, 2010

அடபாவிகளா..அப்பட்டமான காப்பி

தமிழகத்தின் பிரதான சேனலுக்கு கொஞ்ச நாளாக கற்பனை வறட்சி ஏற்பட்டுவிட்டது போல்
தெரிகிறது...ஒரு காலத்தில் முன்னோடியாக இருந்தவர்கள் இன்று எதைவேண்டுமானாலும்
காப்பி அடிக்க தாயரகிவிட்டார்கள் போல் தெரிகிறது.

டீலா நோ டீலா - அவர்களின் அப்பட்டமான காப்பி என்று நேற்று தான் தெரிந்தது. நேற்று இரவு ஸ்டார் மூவிஸில் (Meet the Spartans ) படம் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு காட்சி தான் டீலா நோ டீலா.

அப்பட்டமாக font முதல் அந்த பெண்கள், அவர்களின் உடை, அதே பெட்டி, அதே நிற backround இவ்வளவு வறட்சியாக போய்விட்டது தமிழனின் கற்பனை திறன். காப்பி அடித்தீர்கள் சரி அந்த Font லெட்டர் முதல் அப்படியேவா....!! வியாபார தந்திரம் நிறைந்த சன் டிவிக்கு இது ஒரு பெரிய இழுக்கு தான். அது சரி யானைக்கும் அடி சறுக்கும்..

எழுத்தாளன் கோடிஸ்வரனாக முடியுமா...

சாருவின் வலைதளத்தில் அவரது புத்தகத்திற்கு அவரே விளம்பரம் தருகிறார். விலையோ ரூ.௦௦1000 நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க ஆகும் செலவு தான். அருமையான இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயன் பெற வேண்டுமென்று.

ஒரு எழுத்தாளராக, தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளராக அறியப்பட்ட சாரு நிவேதிதாவின் நிலையே இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது...

50 வருட பாரம்பரியம் கொண்ட வார இதழ்களே இன்று நடிகைகளின் கலர் போடோக்களை நம்பி தான் ஓடிகொண்டிருக்கிறது..6 லட்சமோ, 3 லட்சமோ பிரதிகளை முடிவு செய்வது முன் பக்க நடிகையின் உடையளவு தான். (சில நடுப்பக்க பத்திரிக்கைகளும் உண்டு)

தமிழனின் ரசனையை என்னவென்று சொல்வது...

பெரியார், காமராசர் பற்றிய படங்கள் வந்தவுடன் பெவிலியன் திரும்புகின்றன..காமராசர் படம்
ஓடிய தியேட்டரில் என்னுடன் சேர்த்து ஒரு 100 பேர் தான் இருந்தனர்.. ஆனால் அருந்ததி புகழ் அனுஷ்காவின் தெலுங்கு படம் (டப் செய்யபடமாலேய..) கூட்டம் அலை மோத ஓடுகிறது..

தமிழனுக்கு காசு முக்கியமில்லை கவர்ச்சி தான்..

தமிழ் எழுத்தாளன் காசு பார்க்க ஒன்று தான் வழி...

மேல்மட்டதிலிருப்பவர்களை பற்றிய வண்டவாளங்களை கிசுகிசு எழுத வேண்டும். நடிகைகளின் அந்தரங்ககளை பட்டியலிடவேண்டும்... குறைந்த பட்சம் தரமான உங்கள்
படைப்புக்கு ரஜினியோ கமலோ முன்னுரை வழங்க வேண்டும்...அதை டபுள் டம்மி போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுக்க ஓட்டினால் உங்கள் புத்தகம் குறைந்தது ஒரு 25000 விற்பதற்கு வாய்ப்புண்டு....

மற்றபடி எழுதி கோடிஸ்வரனவது என்பது....குதிரைகொம்பு தான்.

விஜய் அன்டனி சரித்திர சாதனை...!

நேற்று தமிழ் சானலில் வேட்டைக்காரன் படம் பற்றி விஜய் மற்றும் நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் பேட்டி இடம் பெற்று இருந்தது.

விஜய் அன்டனியிடம் கேட்கப்பட்ட கேள்வி
"நான் அடிச்ச தாங்கமாட்டே..." பாடல் உருவாகிய விதம் குறித்து...?

பாடல் கம்போசிங்கிற்க்கு உட்காரும் போதே வித்யாசமாக எதாவது செய்ய நினைத்தோம்..
அதனால் ந.முத்துகுமாரிடம் பாடல் எழுதி தருமாறு சொல்லிவிட்டு பாடல் வரிகள் வந்தபின்
அதற்கு மெட்டு அமைத்தோம். எங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல பலன்
கிடைத்தது.

தமிழ் கூறும் நல்லுலகமே உனக்கே வெளிச்சம்...பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து
இது வரை யாருமே செய்யாத சரித்திர சாதனை செய்த விஜய் அண்டனியின் முயற்சியை
வாழ்த்துவோம்....

Friday, January 1, 2010

இனி கடவுளென்று ஒன்றுமில்லை...!!

ஆலமரதடியே பெரும் கூட்டம். சாரி சாரியாக வந்த வண்ணம் இருந்தன எறும்புகள். வரும் போதே ஒன்றோடு ஒன்று எதையோ முனுமுனுத்தபடி வந்து கொண்டிருந்தன. கூட்டத்திடையே தங்களின் நீண்ட கால நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில் தனி தனியாக கூடத்திலிருந்து விலகி சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன... நல விசாரிப்புகள்... குடும்ப அறிமுகங்கள் ஒரு பக்கம்.

குட்டி எறும்புகள் சில வரிசையிலிருந்து விலகி செல்ல, வயதானவர்கள் அவர்களை பிடித்து தங்களின் குல பழக்கத்தை கை விடகூடாது என்று பாடம் எடுத்தார்கள். வரிசை போய்க்கொண்டே இருந்தது..

கூட்டத்திடையே சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன...கடவுளின் கோபம் பற்றி...இந்த கூட்டம் எதற்காக கூட்டபட்டிருக்கும் என்பதை பற்றி...
நான்கு திசைகளில் இருந்தும் கூட்டம் வந்தவாறு இருந்தது..தலை பெருத்து, நீண்ட உடலுடன் அசைந்து வந்த தலைமை எறும்பை பார்க்க பயங்கரமாக இருந்தது...சில குட்டி எறும்புகள் பயத்தில் அங்கும் இங்கும் அல்லடி கொண்டிருந்தன..

நாலா புறமும் நோக்கியபின் மெல்ல பேச ஆரம்பித்தது தலைமை எறும்பு. இன்று ஒரு முக்கியமான நாள். பல்லாயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் நம் இனத்தவரில் யாரும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியதில்லை. மிக மிக அவசர அவசியமான கூட்டம் இது.
நாம் இதுவரை கடவுளாக நினைத்திருந்த, நம்மை விட நூறு முதல் இரநூறு மடங்கு பெரிதான ஒரு ஜந்து கடவுள் இல்லையென்று உறுதியாக தமது நீண்ட கால தபஸின் பயனால் தாம் அறிந்ததாக தலைமை குரு தெரிவித்திருக்கிறார்..

ஆஆஆ....அபசாரம். கடவுளை மறுத்து பேசுவது.., தவறு..அப்படி இருக்க முடியாது...எறும்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கூச்சலிட ஆரம்பித்தது...பின்னக்காலை உந்தி நேராக எழுந்த தலைமை எறும்பு அமைதியா இருக்கும்படி கர்ஜித்தது..

முட்டாள்களே...யோசித்து பாருங்கள்...

காடு, மரம், நதி, விளைச்சல் எல்லாம் அவனால் தோன்றி அவனாலேயே அளிக்கபடுகிறது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் இன்று என்ன ஆயிற்று...எல்லாம் அவனாலேய அழிக்கபடுகிறது. நம்மை விட வேகமாக அவைகள் பெருகி கொண்டிருக்கின்றன. அதனாலேய நம் வளங்கள் எல்லாம் அழிக்கபடுகிறது. அவைகளின் பேராசையால் நம் இனமே அழிந்து விடும் போல் தெரிகிறது. ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி சென்ற பல வித்தியாசமான உயிரினகள் நம் இளைய தலைமுறை பார்த்தது கிடையாது...

எல்லாம் யாரால்...

"கடவுளை முழுவதுமாக அளந்தவர் யாருமில்லை. யாரவது முயற்சித்தால் ராட்சசன் கைகள் அழித்திடும் நம்மை, அவன் எல்லை இல்லாதவன்" - இப்படி சொல்லி நம் முன்னோர்கள் ஏமாற்றி விட்டார்கள். அந்த ஜந்துவிற்கு மேலெல்லாம் உணர்வுகள் உண்டாம். உணவிருக்கும் இடத்தை நாம் காற்றின் உதவி கொண்டு வாசனையால் அறிவது போல. அதனால் நாம் மேலே ஏறும் பொழுது அவைகள் நம்மை கொன்று விட முயற்சிகின்றன..வேறு எந்த தனிப்பட்ட சக்தியும் அதற்கில்லை.

எறும்புகள் ஒன்றையொன்று நோக்கி திரு திருவென முழித்தன.

அவரகளால் நம்பமுடியவில்லை. நம்பமலூம் இருக்கமுடியவில்லை. இதுவரை சொல்லபட்டு, உண்மையென்ரு நம்ப்பட்டு வந்தவிஷயங்கள் பொய்யென்று ஆனபின் ஒரு மிக பெரிய ஏமாற்றுதலுக்கு தாங்கள் உள்ளனதாக அவைகள் நம்பின.

சொல்வது நமது தலைவரல்லவா...இது பொய்யாக இருக்காது. இனி நமக்கென்று யாருமில்லை. எல்லோர் மனதிலும் பயம் சூழ்ந்தது. ஒரு வெறுமையை உணர்ந்த்தன. உலகமே இருண்டு போய் விட்ட்தாய் பதற தொடங்கின.

காற்றில் சருகுகளாய் கலையதொடங்கின.

காலையில் கண் விழித்ததும் சிதறி கிடக்கும் நம் உணவு நமக்காக இறைவன் படைத்த்தல்ல. அவை அந்த ஜந்துகள் உண்டது போக மிச்சம். அதன் வாயிலிருந்தும் கையிலிருந்தும் தெறித்து விழுந்தவை. கணீரென்ற தலைவனின் குரல் கேட்டு நின்று திரும்பின...எரும்புகளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவைகளின் கைபட்டும், காலடியிலும் சிக்கி தான் நம் முன்னோர்கள் பலர் உயிரை இழந்திருகின்றனர். கடவுளின் கோபம் என்றும் சாபம் என்றும் பல தலைமுறைகாளக ஏமாற்றபட்டிருக்கிறோம். நம் கூடுகள் தீடிர் தீடிரென்று அழிக்கப்பட்டது அவைகளின் சுயநலத்திற்காக. ஆனால் நாமோ அழிக்கவே முடியாத கூடுகள் கடவுளால் நமக்காக உருவாக்கபடுகிறது என்று ஏமாந்துவிட்டிருக்கிறோம்.

நீண்ட தவத்திலிருந்த குரு நிஷ்ட கலைந்து, தான் கண்டதை அக்னி குழம்புகளாய் கக்கி கொண்டிருந்தார். நிதர்ஷ்ன்ங்களை தாங்கி கொள்ளமுடியாமல் போதும் போதும் என்று குமுறின. இனி யார் நம்மை காப்பார்...இந்த உலகில் கடவுளே இல்லையா...கடவுள் உண்டென்றால் அது எங்கிருக்கிறது..?

கரடுமுரடான பாறை இடுக்குகளிலிருந்தும், சூரிய ஒளியே தெரியாத காடுகளிலிருந்தும் நம்மை காத்தது கடவுள் இல்லை. அந்த ஜந்துகளின் சூழ்ச்சிக்கு நாம் இறையாகி விட்டோம்...

கண்களை துடைத்துக்கொண்டு மெதுவாக கேட்டன...

இனி நாம் செய்ய வேண்டியது என்ன...

கண்ணை மூடிய மூத்த எரும்பு...நீண்ட மொளணத்திற்க்கு பின், உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது...அந்த ஜந்துகள் பெருகிவிட்டன..இந்த பூமியே அவைகளின் கட்டுக்குள் போய்விட்டது போல் தெரிகிறது. நாம் நாமாக வாழ்வோம். அதை தவிர நம்மால் செய்வதற்க்கு ஒன்றுமில்லை... இனி கடவுளென்று ஒன்றுமில்லை. அப்படியே கடவுள் என்று ஒன்று இருந்தால் அவன் நம் வடிவில் வரட்டும்.. நம் மொழியில் பேசட்டும்..

யுக யுகமாக, காலம் காலமாக நமப்பட்டு வந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து போனபின் ஏற்படும் வெறுமை ரொம்ப கொடுமை...செத்த பிணங்களாய் எரும்புகள் நகர்ந்தன..

காலம் எப்போதும் போல் வேகமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது....

அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

தமிழ் இலக்கியவதிகள் சில பேருக்குள் கருத்து மோதல்கள், சர்ச்சைகள் கொடி கட்டி பறக்கிறது என்பது தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் இணையதள பதிவுகளை படித்தாலே தெரிந்து விடும்.

யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை. அவரவர்கென்று எப்போதும் சுய மதிப்பீடுகள் இருக்கும். தான் தான் சரி என்று ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம்.

பர்தா விஷயத்தில் இருந்து மனுஷ்ய புத்திரன் ஜெயமோகன் விவகாரம் வரை ஒரு நிமிடத்தில் சரி செய்து விடக்கூடிய விஷயம் தான். ஆனால் தொடர்ந்து வளர்ந்து வரும் சர்ச்சைகள், பிரச்சனைகளை மறுத்து தங்களை முன்னிறுத்தி கொள்ள மேற்கொள்பவை.

ஏதாவது ஒரு நிமிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன நமது கண்ணோட்டத்திலும், செயல்களிலும். விலகி போனவர்கள் திரும்பி வரக்கூடும். திரும்பி வரும்பொழுது...காயங்களுக்கு மருந்திடலாம். அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

சாருவின் ஆன்மிக பக்கங்கள் மிக பெரிய ஆச்சர்யம்... சாருவை நேரிடையாக எனக்கு பரிச்சயமில்லை. ஆனால் அவரின் எழுத்துக்களின் நிதர்சனம் கண்டு பல சமயம் ஆச்சர்யபட்டிருகிறேன்...இப்படி கூட பட்டவர்த்தனமாக எழுத முடியுமா என்று. நித்யாவின் தரிசனத்திற்கு பிறகு அவருள் சில ஆச்சர்யமான மாற்றங்களை உணர முடிகிறது. அவை அவரின் எழுத்துகளிலும் பிரதிபலிக்கலாம்...

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...