Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, February 11, 2010

களத்துமேட்டில் ஒரு கருப்பு இட்லி...!!



களத்து மேட்டில் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பு இட்லியகாத்தான் பார்த்ததும் நினைக்க தூண்டியது. அளவு மட்டும் கொஞ்சம் பெரிது. பெரிது என்றால் இரண்டு பேர் உட்காரக்கூடிய அளவு இருக்கும்.

குட்டைகாலன் தான் முதல்ல பார்த்து, பயந்து அரக்க பரக்க ஓடி வந்து பண்ணைக்கு தகவல் சொல்லியிருந்தான் .

"காலம்பர வெளிக்கு ஒதுங்க வந்தேன். என்னமோ கருப்ப கிடக்கேன்னு தொட்டேன், கைய சுட்டுபுடுச்சு ஆத்தா, இங்க பாரேன்.." புதிதாக வரும் ஒவ்வொருவரிடமும் சொல்லிகொண்டிருந்தான். இதையே கேட்டு கேட்டு காதில் ரத்தம் வர தொடங்கியது...ஏலே சித்த நிறுத்துடா...சும்மா லோ லோ - ன்னுகிட்டு.

மணியகாருக்கு தகவல் போயாச்சா...பண்ணை உரத்த குரலில் கூடியிருந்தவர்களை பார்த்து கேட்டார். தகவல் சொல்லியாசுங்க, அவரும் போலிசுக்கு தகவல் சொல்லி அப்படியே கூட்டியாரக்கு போயிருக்கிராருங்க...சொல்ல சொல்லவே ஜீப்பின் ஹாரன் சத்தம் கேட்டது.

வெறும் 100 தலைக்கட்டு உள்ள சாதாரண கிராமம் இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் இங்கு தான்.

எம்ஜியாரு தான் இங்க முத முதல்ல வந்தாரு. தண்ணி குழா எல்லாம் அவரு போட்டது தான். இப்ப யார் யாரெல்லாமோ வரபோராவுகலாம் ஊரே தடா புடலாக இருந்தது. பண்ணைக்கு இருப்பு கொள்ளவில்லை. இரண்டு நாளாக வரும் போனிற்கு பதில் சொல்லி நாவே வறண்டு போய்விட்டது.

அவர்கள் வாழும் கிராமத்தின் தோற்றமே மாறிபோய்விட்டதில் மணியகாரர் ராமசாமி கவுண்டருக்கு ரொம்பவே வருத்தம். எப்போதும் ஒரு அமைதியான தோற்றத்தை கொண்டிருக்கும் கிராமம் இந்த இரண்டு நான்கு நாட்களாக அல்லோல பட்டுகொண்டிருக்கிறது. பெரிய பெரிய கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. புதிய புதிய முகங்கள். யாருக்கும் மரியாதை தெரியவில்லை. பூட்சு போட்டுகிட்டு தான் எல்லா பக்கமும் போறானுங்க... கையில் ஒரு முழத்துக்கு சிகரெட் வேற...அவரின் தோட்டத்துக்கு மத்தியில் தான் அந்த சனியன் வந்து உட்கார்ந்திருக்கு...அவரால் கூட அந்த பக்கம் போக முடியவில்லை. கிராமத்து ஆள் யாரும் அந்த பக்கம் வரகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவரின் மூத்த மகன் சுரேஷ் மட்டும் அவர்களுக்கு உதவியாக அங்கே வைத்து கொண்டார்கள். பட்டினத்துக்கு படிக்க அனுபினதுக்கு இது தான் கண்ட பலன். அவர்கள் கூட சேர்ந்து எங்கே பையன் கெட்டுவிடுவானோ என்று பயம் வேறு. அவன் அப்போ அப்போ வந்து தகவல் சொன்னால் தான் உண்டு.

மஞ்சகாடு அறுவைக்கு தயார நிக்குது...அங்கனே போக முடியல.." ரொம்ப சலித்துகொண்டாள் கவுண்டச்சி. என்னபுள்ள பன்றது...கெடக்கட்டும் விடு..நஷ்டஈடு தந்திடுவாங்கலாமில்ல. கவுண்டர் சமதானபடுதிகொண்டார். சுரேஷ் தான் வந்து தகவல் சொல்லி இருந்தான். சுத்துபாட்டு ஒரு கிலோமீட்டர் அவங்க கண்ட்ரோல்ல எடுத்துக்குவான்கலாம். நஷ்டத்தை ஈடு கட்டிருவான்கலாம். அங்கனே யாரும் வரக்கூடாதாம்.

பணப்புழக்கம் இந்த நாட்களில் தாரளமாக இருந்தது. ஊரில் இருந்த ஒரே மளிகைக்கடைக்கு ஜெனியின் அப்பா சுப்பையா டேவிட் தான் முதலாளி. சுப்பையா தான் அவர் பெயர். சென்னையிலிருந்து வந்திருந்த கத்தோலிக்க பாதிரியாரால் மதம் மாறி டேவிட் என்று வைத்து கொண்டார். அந்த பெயருக்கும் அவருக்கும் எந்த தொடர்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. பின் அவரே சுப்பையா டேவிட் மளிகை என்று கடைக்கும் மதம் மாற்றம் செய்து ஞானஸ்தானம் செய்வித்து விட்டார். ஜெனியும் இப்போது அங்கு தான் விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருந்தாள். ஜெனி அருகிலிருந்த டவுனுக்கு சென்று 12 - வது வரை படித்திருந்தால். 17 வயதின் செழுமையுடனும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் இருப்பவள். ஏனோ துரு துரு என்றிருக்கும் சுரேஷும் ஜெனியும் மாணிக்கம் பிள்ளைக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் கிராமத்தை பற்றி இரண்டு பேரும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார்கள்.

நடக்க போகும் விபரீதம் யாருக்கும் புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------
ஒரு மலரின் நறுமணம் தீடிரென்று தன்னை தாண்டி செல்வதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் அது எந்த மலரின் நறுமணம் என்று வகைபடுத்த முடியவில்லை.

ரோஜா...இல்லையில்லை மல்லிகை - சுரேஷ்
நோ நோ இட்ஸ் ஜாஸ்மின் என்றாள் ஜெனி. தாமரை மாதிரி இருக்கு என்றார் மாணிக்கம்.

எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து வந்தது என்று ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். அது ஒரு 20க்கு 20 அடி அளவுள்ள அறை. வருவதற்கு ஒரு வழி தான். ஒரே குழப்பமாக இருந்தது. இரண்டு நாட்களாகவே குழம்பி கொண்டுதான் இருந்தார்கள். அதற்க்கு காரணம் இருந்தது.

நல்லாம்பாளையம் கிராமத்தில் வந்திறங்கிய பறக்கும் தட்டு பல பேரின் தூக்கத்தை கெடுத்ததோடில்லாமல், யோசித்து யோசித்து மண்டை காய வைத்து கொண்டிருந்தது. விடை தான் கிடைத்த பாடில்லை.

வந்திரங்கியிருப்பது பறக்கும் தட்டு தான். - எங்கிருந்து வந்தார்கள்...?
யாரும் வெளியே இறங்கி வந்தார்களா..? வந்திருந்தால் எங்கே போனார்கள்...? மண்ணில் வந்திறங்கி இரண்டு நாள் ஆகியும் அதை தொட முடியவில்லை, தொட்டால் பயங்கரமாக சுடுகிறது. இரண்டடி தொலைவில் நின்று தான் பார்க்கமுடிகிறது. அருகில் நெருங்க முடியவில்லை. அப்படியென்ன ஒரு மெக்கானிசம் இது..? வந்தவர்களின் நோக்கமென்ன...? தானியங்கி விமானம் போன்றதா இல்லை ஆட்கள் அல்லது உயிரினங்கள் ஏதாவது வந்திருக்குமா..எண்ணற்ற கேள்விகள்... யாருக்கு பதில் தான் தெரியவில்லை.


அவசரமாக ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டம். மாவட்ட காவல்துறை அதிகாரி முதல் உள்துறை அமைச்சர் முதல் கொண்டு இறுகிய முகங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். சில வெள்ளைகார முகங்களும் அடக்கம். மந்திரி தான் பேச்சை துவக்கினார். தெளிவான ஆங்கிலத்தில் அமைதியாக பேசினாலும், அவர் கோபத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் விசாரணையிலும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியிலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் நம்மை இந்த விஷயத்தில் எதிர்நோக்கி இருக்கிறது. பிரதமரும் இரெண்டொரு நாளின் வரக்கூடும் என எதிர்பார்கிறேன். சொல்லுங்கள் அந்த வஸ்துவின் நிலை குறித்து உங்கள் கருத்தென்ன..அது பறக்கும் தட்டு என்பதும், அதில் அயல்கிரக உயிரினங்கள் வந்திருக்க கூடும் என்பது உண்மை தானா. ஏன் அதன் அருகில் நெருங்க முடியவில்லை...?

60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர் எழுந்தார். காதோரம் ஒரு சில நரை முடிகளை தவிர அரைவட்ட நிலவை கவிழ்த்தது போல் இருந்தது அவரின் "பள பள" தலை. மாணிக்கம் பிள்ளையின் சொந்த ஊர் சென்னை. வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான்.
"செவ்வாயில் மனிதனின் காலடி" என்ற அவரின் ஆராய்சிக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்டவர். பழுத்த விஞ்ஞானி, கணீரென்ற குரலில் அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார்.

சார்...நடந்த, நடக்கின்ற, நடக்கபோகின்ற எந்த ஒரு விஷயமும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. ஒரு மிகபெரும் அசம்பாவிதமும் நடக்கலாம். எதுவும் நடக்காமலும் போகலாம். பறக்கும் தட்டை நெருங்க தகுதியான எந்த ஒரு கவச உடையோ, கருவியோ கூட நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே மனித அறிவின் இயலாமையை, அறியாமையை உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன். அதில் இருந்து வெளியாகும் வெப்பம் மிக அதிகம், இரண்டடி வரை தள்ளி நிற்க வேண்டிய நிலைமை. அப்படியே நெருங்கினாலும் அதை திறக்கவோ, கழட்டி ஆய்வு நடத்தவோ முடியும் என்று தோன்றவில்லை.

எங்களுக்கு கிடைத்த சில குறிப்புகள் என்ன என்பதை இஸ்ரேலில் இருந்து வந்திருக்கும் ஸ்டீவ் ராபர்ட்சன் உங்களுக்கு விளக்குவார்.

நெடு நெடுவென்று ஆறரை அடி வளர்ந்திருந்த வெண்ணிற தாடியுடன், பளீர் என்ற புன்னகையுடன் எல்லோருக்கும் காலை வணக்கத்தை சொல்லி ஆரம்பித்தார் ஸ்டீவ்.

அது வந்து இறங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டது. எந்த ரேடாரிலும் பதிவானதாக தகவல் இல்லை. யாரும் நெருங்கமுடியாத அளவிற்கு அதிலிருந்து வெப்பம் வெளியாகிறது. ஆனால் அதன் கீழிருக்கும் செடிகள் கருகவில்லை. அதன் மேல் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள் அவர்கள் கிரகத்திலிருந்து தகவல்களை பெறுவதற்காக இருக்கலாம். அல்லது அதிலிருந்து வெளிய வந்தவர்களுக்கு அதிலிருந்து தகவல் செல்வதோ பெறுவதோ நடக்கலாம். எல்லாம் உத்தேசம்தான். கிராமத்தின் எல்லா பக்கத்திலும் ஆட்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு சிறு அசைவையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். சடிலைட் மூலமாகவும் கண்காணிக்கபடுகிறது. இதுவரை எந்த ஒரு சிறு வித்தியாசமான சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை.

கோர்வையாக அவர் பேசி நிறுத்தியதும் ஒரு அமைதி நிலவியது. சட்டென்று ஒரு நறுமணத்தை அங்கிருந்த எல்லோரும் உணர தொடங்கினர். எந்த மலரின் வாசனஎன்று உணர முடியவில்லை. ஒரு கலவையாக இருந்தது. ஒருவரையொருவர் முகத்தை பார்த்து கொண்டு ஏதோ...ஸ்மெல் என்று ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பிள்ளை "சைலென்ட்" என்று அலறினார். கூர்மையாக கவனிக்க தொடங்கினார்.

இன்று இரண்டாம் முறையாக இந்த வாசனையை உணர்கிறேன். எந்த முகாந்திரமும் இல்லாமல் வரும் வாசனை. ஒருவேளை அவைகள் இங்கு நடமாட கூடும். மாணிக்கம் சொல்லி நிறுத்தியதும் எல்லோர் முகத்திலும் ஒரு கணம் பயம் வந்து போனது.

-------------------------------------------------------------------------------------

எஷ்னோ..எஷ்னோ..நாம சரியாய் லேன்ட் பண்ணிவிட்டோமா... டார்கெட் இது தானே. .நிச்சயம் இது தான்...நாம் சரியாய் வந்து விட்டோம் தநோயக்.

பூமியின் கால கணக்குப்படி நமக்கு சரியாய் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நாம் வந்த வேலை முடிய வேண்டும். யாரும் டிஸ்கை (பறக்கும் தட்டு ) நெருங்க முடியாதபடி fire alarm ஆன் செய்துவிடு. எல்லா சாம்பிள்களையும் கலக்ட் பண்ணவேண்டும். பட்டியலை சரி பாதியாக பிரித்து ஒரு பகுதியை நீ வைத்து கொள். அதன்படி பொருட்களை சேகரி. மீதி என் பொறுப்பு.

சரியாக 5000 மீட்டர் வரை நீ போகலாம். அதற்கு பின் உன் தொடர்பு அறுந்துபோகும். ஜாக்கிரதை...டிஸ்கின் தொடர்ப்பு போய்விட்டால் உன் உருவம் மனிதாகளின் கண்ணுக்கு தெரிந்து விடும்.

இரண்டு உருவங்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கி அந்த கிராமத்தின் இரு வேறு திசைகளை நோக்கி நடக்க தொடங்கியது. ஆனால் யார் கண்ணிலும் அது படவில்லை. அவை தங்களை தாண்டி செல்லும் போது ஒருவித மலரின் வாசனையை மனிதர்கள் உணர்ந்தார்கள். அதற்கு காரணம் தெரியவில்லை.

இரண்டு உருவங்களும் மனித உடலமைப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒரு உருளையை போல் இருந்தது. அந்த உருளையிலிருந்து எண்ணற்ற கை போன்ற, கால் போன்ற அமைப்புகள் வெளியே நீட்டிகொண்டிருந்தது. அவை தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. மனிதன் ஒரு காபி கோப்பையை எப்படி கை நீட்டி எடுகின்றானோ அது போல். ஆனால் ஒரு வித்யாசம். மனிதனுக்கு கை நிரந்தரமாக தொங்கி கொண்டிருக்கிறது. இந்த உருவங்கள் வேண்டும் போது அதை உபயோகபடுதிகொண்டன. தேவை இல்லாத போது அவைகளை உள்ளிழுத்து கொண்டது. அவை தரையில் உருண்டன...நின்றபடியும் அவைகளால் நடக்க முடிந்தது. உருளையின் உச்சியில் மனித தலையை போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் முடியோ, கண், காத்து, மூக்கு எதையும் காணமுடியவில்லை. உச்சியின் மத்தியில் ஒரு சிறிய பல்பை போன்று தெரிந்தது. ஒருவேளை அது கண்ணாக இருக்கலாம். நான்கு அடி வரை உயரம் இருந்தது. ஆனால் தேவைபட்டால் அவற்றால் உயரமாக முடியும் போல் தெரிந்தது. அவைகளின் குரல் மிக மெதுவாக ஒரு தாள லயத்தில் இருந்தது. ஒன்றின் பெயர் எஷ்னோ, மற்றொன்று தநோயக்.

அவற்றின் உருவம் மனித கண்களுக்கு புலப்படவில்லை.

-------------------------------------------------------------------------------------

காலை முதலே சுரேஷிற்கு எதோ விபரீதம் நடக்க போவதாக புரிந்தது. விஞ்ஞானிகளுக்கான கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க பட்டதாக தெரியவில்லை. நமது விஞ்ஞான அறிவிற்கும் மேற்பட்ட ஏதோவொன்று, நம்மை ஆளுமை செய்ய தயாராகிவிட்டதன் அறிகுறி என்று எல்லோரும் பேசி கொண்டார்கள். எப்படி அதன் தாக்குதல் இருக்கும் என்றும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில் ஒரே குழப்பம் தான் நிலவியது. கோவையிலிருந்து எந்நேரமும் இராணுவம் வரல்லம் என்றும் எதற்கும் தயாராக இருக்கும்படி இந்திய இராணுவம் அறிவுருத்தபட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.

மதியம் 03 :00 மணி.

மதிய உணவை முடித்துவிட்டு ஆராயசிகூடதிற்கு சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் கரும்பும் மற்றொருபுறம் வாழையும் பயிரிட்டிருந்தார்கள். காற்றின் அசைவினால் ஏற்பட்ட சலசலப்பை தவிர எந்தவொரு ஓசையும் இல்லை. ஒற்றை நாரையொன்று வடக்காக கத்திக்கொண்டு சென்றது. காலையில் உணர்ந்த அதே வாசனை காற்றில் உணரமுடிந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தான். மனதை ஒருமுகபடுதி ஏதாவது அருகில் தென்படுகிறதா என்று பார்த்தான்.

தனக்கு மிக அருகில் ஏதோவொன்று நிற்பதாக உணரமுடிந்தது...ஆனால் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. இதயம் வேகமாக அடித்துகொண்டது. இதய படபடப்பு வெளியே கேட்கதொடங்கியது.

திடீரென்று நெற்றியில் மின்சாரம் தாக்கியதை உணர்ந்தான். அம்மா...என்றலரளோடு மயங்கி சரிந்தான்...

மதியம் 05 : 00 மணி

இரண்டு மணி நேரமாக சுரேஷை காணவில்லை என்றதும் மாணிக்கம் பிள்ளை முதல்முறையாக விபரீதத்தை உணர்ந்தார். ஒருவேளை வீட்டில் இருப்பானோ..? ஆளனுப்பி விசாரிக்க முடிவு செய்தார். நம்மாட்களை அனுப்பி விசாரிக்க செய்தால் ஒருவேளை கிராமத்தார் பதற்றமடைய கூடும். யாரை அனுப்பலாம்...சட்டென்று ஜெனியின் ஞாபகம் வந்தது. ஆம்...அவள் தான் சரியான ஆள்.

ஜெனி..உனக்கொரு அவசர வேலை. சுரேஷ் மதிய உணவிற்கு சென்றவன் இன்னும் வரவில்லை. கொஞ்சம் அழைத்து வருகிறாயா...அவசரம். ஓகே...சார். ஒரு வேளை தூங்கியிருந்தாலும் இருப்பார். நான் போய் அழைத்து வருகிறேன்.

புள்ளிமானாய் விரைந்தாள் ஜெனி.

வரப்பில் நடந்து வந்தவள் மாலை நேர வெயில் பட்டு, தொலைவில் ஏதோவொன்று மின்னுவதை கண்டு அங்கே ஓடினாள். குனிந்து எடுத்தவள் இது..சுரேஷ் சார் வாட்ச் ஆச்சே...ஒருவேளை இந்த வழிய போகும்போது தவற விட்டாரோ..? எடுத்து மடியில் சொருகுகி கொண்டு ஒரு அடி எடுத்துவைக்க தொடங்கியவள் ஒரு கணம் நின்றாள்...அதே மணம்...இது என்று யோசிக்க...தன்னை யாரோ இழுப்பது தெரிந்தது..கையை உதறிக்கொண்டு ஒரு அடி பின் நகர்ந்தாள்...யாரும் தென்படவில்லை. மனப்ரந்தியா..இல்லை தான் இழுக்கப்பட்டது உண்மையா... லேபிற்கே போய் விடலாமா..? மாணிக்கம் சார்க்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே நெற்றியில் சூடாக ஏதோ பட்டது போல் இருந்தது..கையை கொண்டு தேய்க்கும் வினாடி நேரத்திற்குள் மயங்கி விழுந்தாள்.

(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

Monday, February 1, 2010

அவன் தொழில் கொலை செய்வது..!

அவன் தொழில் கொலை செய்வது. இதுவரை 2000 - ற்கும் மேற்பட்ட உயிரை பரலோகம் அனுப்பியாயிற்று. தினம் தினம் கொலை தொழில். விடுமுறை தினங்களில் அவன் கைகள் இரத்தத்தால் குளிப்பாட்டபட்டிருக்கும். முகம் உடை என எங்கு நோக்கினும் ரத்த சிதறல்களாக தானிருக்கும். தலையா, காலா எதுவென்றாலும் அவனிடம் தனி ரேட் தான்.

இரத்தத்தை கண்டு அவனுக்கு பயமில்லை. அவன் தோற்றம் கண்டால் எல்லோருக்கும் ஒரு கிலி பிறக்கும். அவன் ஓய்ந்து இங்கு யாரும் பார்த்ததில்லை. அவனுக்கு விடுமுறையும் கிடையாது.

ஆனால் இந்த ஒரு வாரமாக அவனை பார்க்க முடியவில்லை. செய்த பாவத்திற்கு அவனக்கு என்ன கதி கிடைத்ததோ..

பெரும் தொல்லை. இனி கோழிக்கறி வாங்க வேண்டுமென்றால் மெயின் ரோட்டை தாண்டி ரொம்ப தூரம் போகணும். இந்த கோழிக்கடை சண்முகம் எங்கே பொய் தொலைந்தானோ...?!!

Tuesday, January 12, 2010

நடந்தது என்ன ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

காலை பேங்க் வாசலில் நின்று கொண்டிருந்தபொழுது (ஏன் என்பது அடுத்த பதிவில்) எதேட்சையாக கண்ணில் பட்ட காட்சி. எதிரில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தடியில் ஒரு வயதான பெரியவர் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து கொண்டிருந்தார். (" ர் " விகுதி ஏன் என்று தெரியவில்லை) அருகில் ஒரு அழுக்கு பை, தாங்கி நடக்க ஒரு கட்டை, ரோட்டில் போவோர் யாரை பற்றியும் எந்த கவலையும் இல்லாமல். ரோட்டில் போவோர் யாரும் அவரை பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அழுக்குபிடித்த தேகம், பல வருடங்களாக வாரப்படவோ, எண்ணெயையோ கண்டிராத கேசம், இரண்டாம் உலகபோரை நினைவு படுத்தும் கால்சட்டையும், பூட்சும் அணிந்து யாராலும் விரும்பப்பட்ட முடியாத தோற்றம் உடையவராய் இருந்தார். எதோ ஒன்று என்னை அவர்பால்
இழுத்தது. அவரையே பார்த்து கொண்டிருந்தேன்.



அருகிலிருந்த பெட்டி கடையிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் ஒரு ரொட்டியை வாங்கி அவர் இருந்த பக்கம் வீசி விட்டு போனான். அவன் போன திக்கையே பார்த்த அந்த பெரியவர் என்ன நினைத்தாரோ அந்த ரொட்டியை அவன் போன திசையை நோக்கி வீசினார். நான் ஒரு கணம் ஆடிபோனேன். ஏதோ பாவம் பிச்சைக்காரன், சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்றோ என்ற நல்ல எண்ணத்தில் ஒருவர் ரொட்டியை வாங்கி வீசினால் அவனை நோக்கி திருப்பி எறிகிறாரே, சரியான திமிர் பிடித்த பிட்சைக்கார கிழம் போலிருகிறது என்று நினைத்தேன். பிட்சைகாரர்களில் சிலர் இந்த மாதிரி போக்கிரிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பது உண்மைதான், சில நேரங்களில் வழிபறிகளில் கூட இவர்கள் ஈடுபடுவதுண்டு. அப்படிதான் நானும் நினைத்தேன். ஆனால் அடுத்து நடந்தது மிக மிக அதிசயமான காட்சிகள்.

அதிசயம் 1

அது ஒரு 40 அடி ரோடு. ரோடின் ஒரு மூலையில் நின்று கொண்டுதான் (பேங்க் வாசலில்) எதிர் முனையில் நடப்பதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். என்னை பார்த்து மிக நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார். நக்கலாக என்றால் நமுட்டு சிரிப்பு அல்ல வாய் விட்டு சிரித்தார். பெரிதாக சத்தம் போட்டு சிரித்து விட்டு என்னை பார்த்தார். ஏனோ நான் தலை குனிந்து கொண்டேன். ஒருவேளை நான் மனதில் போக்கிரி, பொறுக்கி, பிட்சைக்கார கிழம் என்றெல்லாம் நினைத்தோமே அதை உணர்ந்து சிரிதாரோ...குற்ற உணர்ச்சியில் தான் தலை தானாக கவிழ்ந்துவிட்டதோ..

அதிசயம் 2

என்ன நினைத்தாரோ வீசி எறிந்த ரொட்டியை மீண்டும் நடந்து போய் எடுத்து வந்தார். "அப்படி வா வழிக்கு...பெரிய புடுங்கி மாதிரி வீசினே...இப்ப பசிக்குதோ.." நான் தான் மனதில் நினைத்துகொண்டேன். ஆனால் சாவதானமாக நடந்து வந்த அவர் ரோடை ஒட்டி இருந்த சாக்கடைக்குள் இறங்கினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை ரோட்டில் வீசியதை எடுத்து சாக்கடைக்குள் போடுகிறாரோ..நான் நின்று கொண்டிருந்த இடத்தில இருந்து அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க முடியவில்லை. அதனால் ரோடை கிராஸ் செய்து அந்த பக்கமாக போனேன். என்னை எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால் கண்டுகொள்ளாதது போல் வாயை குவித்து ஒரு மாதிரி சத்தத்தை எழுப்பினார். என்ன அதியசம் எங்கிருந்து தான் அத்தனை எலிகள் அந்த சாக்கடைக்குள் வந்ததென்று தெரியவில்லை. சிறிதும் பெரிதுமாக அவரை சுற்றி சுற்றி வந்தது...கையில் இருந்த ரொட்டியை பிய்த்து பிய்த்து எலிகளை நோக்கி எரிந்து கொண்டிருந்தார். ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் தான் அவர் கையிலும் ஒன்றும் இல்லை, அங்கு எலிகளும் இல்லை. என்னால் நம்பவே முடியவில்லை. கண்கட்டு வித்தை மாதிரி இருந்தது.

அவர் வித்தியாசமான ஒரு ஒலி எழுப்பியது, எலிகள் திரண்டு வந்தது, அவர் ஒவ்வொன்றாக ரொட்டியை பிய்த்து எரிந்தது..எல்லாம் ஞாபகம் இருக்கிறது...ஆனால் இரண்டு நிமிடத்தில் எப்படி எல்லாம் மாயமாகும்...அவரிடம் மீண்டும் அதே நக்கல் சிரிப்பு...இம்முறை எனக்கு பயம் வந்துவிட்டது. அங்கிருந்து மீண்டும் கிராஸ் செய்து பேங்கிற்குள் சென்றுவிட்டேன். ஆனால் மனம் மீண்டும் மீண்டும் அவரிடமே சென்றது. ஒருவேளை சூனியகரனாக இருப்பானோ..அப்படிஎன்றால் ஏன் பிச்சைக்கார வேஷம்..

அதிசயம் 3

பேங்க் வேலையை முடித்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன்...கண் அனிச்சையாக அந்த பக்கத்தை நோட்டமிட்டது. அங்கு யாரும் இல்லை. மரத்தடியே இருந்த அந்த கிழிந்த பை, தங்கு கட்டை எதுவும் காணோம். அப்படியொரு பிச்சைகாரன் இருந்ததற்கான அடையாளத்தையே அங்கு காண முடியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் அந்த மரத்தடிக்கு சென்றேன். ஒரு வித்தியாசத்தையும் என்னால் உணர முடியவில்லை. அந்த சாக்கடைக்குள் எட்டி பார்த்தேன்.. அத்தனை எலிகள் இதனுள் வசிக்கின்றதா..நம்ப முடியவில்லை. அருகில் இருந்த பெட்டி கடையில் சென்று இங்கே ஒரு பிட்சைக்கார பெரியவர் இருந்தாரே.. எங்கே போனார் தெரியுமா..? கடைக்காரன் சொன்னதை கேட்டு மயக்கம் வராத குறை தான் போங்கள்...பிச்சைகாரனா அப்படி யாரும் இங்கே இல்லையே...எப்ப பார்த்திங்க..என்றான்.

Friday, January 1, 2010

இனி கடவுளென்று ஒன்றுமில்லை...!!

ஆலமரதடியே பெரும் கூட்டம். சாரி சாரியாக வந்த வண்ணம் இருந்தன எறும்புகள். வரும் போதே ஒன்றோடு ஒன்று எதையோ முனுமுனுத்தபடி வந்து கொண்டிருந்தன. கூட்டத்திடையே தங்களின் நீண்ட கால நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில் தனி தனியாக கூடத்திலிருந்து விலகி சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன... நல விசாரிப்புகள்... குடும்ப அறிமுகங்கள் ஒரு பக்கம்.

குட்டி எறும்புகள் சில வரிசையிலிருந்து விலகி செல்ல, வயதானவர்கள் அவர்களை பிடித்து தங்களின் குல பழக்கத்தை கை விடகூடாது என்று பாடம் எடுத்தார்கள். வரிசை போய்க்கொண்டே இருந்தது..

கூட்டத்திடையே சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன...கடவுளின் கோபம் பற்றி...இந்த கூட்டம் எதற்காக கூட்டபட்டிருக்கும் என்பதை பற்றி...
நான்கு திசைகளில் இருந்தும் கூட்டம் வந்தவாறு இருந்தது..



தலை பெருத்து, நீண்ட உடலுடன் அசைந்து வந்த தலைமை எறும்பை பார்க்க பயங்கரமாக இருந்தது...சில குட்டி எறும்புகள் பயத்தில் அங்கும் இங்கும் அல்லடி கொண்டிருந்தன..

நாலா புறமும் நோக்கியபின் மெல்ல பேச ஆரம்பித்தது தலைமை எறும்பு. இன்று ஒரு முக்கியமான நாள். பல்லாயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் நம் இனத்தவரில் யாரும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியதில்லை. மிக மிக அவசர அவசியமான கூட்டம் இது.
நாம் இதுவரை கடவுளாக நினைத்திருந்த, நம்மை விட நூறு முதல் இரநூறு மடங்கு பெரிதான ஒரு ஜந்து கடவுள் இல்லையென்று உறுதியாக தமது நீண்ட கால தபஸின் பயனால் தாம் அறிந்ததாக தலைமை குரு தெரிவித்திருக்கிறார்..

ஆஆஆ....அபசாரம். கடவுளை மறுத்து பேசுவது.., தவறு..அப்படி இருக்க முடியாது...எறும்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கூச்சலிட ஆரம்பித்தது...



பின்னக்காலை உந்தி நேராக எழுந்த தலைமை எறும்பு அமைதியா இருக்கும்படி கர்ஜித்தது..

முட்டாள்களே...யோசித்து பாருங்கள்...

காடு, மரம், நதி, விளைச்சல் எல்லாம் அவனால் தோன்றி அவனாலேயே அளிக்கபடுகிறது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் இன்று என்ன ஆயிற்று...எல்லாம் அவனாலேய அழிக்கபடுகிறது. நம்மை விட வேகமாக அவைகள் பெருகி கொண்டிருக்கின்றன. அதனாலேய நம் வளங்கள் எல்லாம் அழிக்கபடுகிறது. அவைகளின் பேராசையால் நம் இனமே அழிந்து விடும் போல் தெரிகிறது. ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி சென்ற பல வித்தியாசமான உயிரினகள் நம் இளைய தலைமுறை பார்த்தது கிடையாது...

எல்லாம் யாரால்...

"கடவுளை முழுவதுமாக அளந்தவர் யாருமில்லை. யாரவது முயற்சித்தால் ராட்சசன் கைகள் அழித்திடும் நம்மை, அவன் எல்லை இல்லாதவன்" - இப்படி சொல்லி நம் முன்னோர்கள் ஏமாற்றி விட்டார்கள். அந்த ஜந்துவிற்கு மேலெல்லாம் உணர்வுகள் உண்டாம். உணவிருக்கும் இடத்தை நாம் காற்றின் உதவி கொண்டு வாசனையால் அறிவது போல. அதனால் நாம் மேலே ஏறும் பொழுது அவைகள் நம்மை கொன்று விட முயற்சிகின்றன..வேறு எந்த தனிப்பட்ட சக்தியும் அதற்கில்லை.

எறும்புகள் ஒன்றையொன்று நோக்கி திரு திருவென முழித்தன.

அவரகளால் நம்பமுடியவில்லை. நம்பமலூம் இருக்கமுடியவில்லை. இதுவரை சொல்லபட்டு, உண்மையென்ரு நம்ப்பட்டு வந்தவிஷயங்கள் பொய்யென்று ஆனபின் ஒரு மிக பெரிய ஏமாற்றுதலுக்கு தாங்கள் உள்ளனதாக அவைகள் நம்பின.

சொல்வது நமது தலைவரல்லவா...இது பொய்யாக இருக்காது. இனி நமக்கென்று யாருமில்லை. எல்லோர் மனதிலும் பயம் சூழ்ந்தது. ஒரு வெறுமையை உணர்ந்த்தன. உலகமே இருண்டு போய் விட்ட்தாய் பதற தொடங்கின.

காற்றில் சருகுகளாய் கலையதொடங்கின.

காலையில் கண் விழித்ததும் சிதறி கிடக்கும் நம் உணவு நமக்காக இறைவன் படைத்த்தல்ல. அவை அந்த ஜந்துகள் உண்டது போக மிச்சம். அதன் வாயிலிருந்தும் கையிலிருந்தும் தெறித்து விழுந்தவை. கணீரென்ற தலைவனின் குரல் கேட்டு நின்று திரும்பின...எரும்புகளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவைகளின் கைபட்டும், காலடியிலும் சிக்கி தான் நம் முன்னோர்கள் பலர் உயிரை இழந்திருகின்றனர். கடவுளின் கோபம் என்றும் சாபம் என்றும் பல தலைமுறைகாளக ஏமாற்றபட்டிருக்கிறோம். நம் கூடுகள் தீடிர் தீடிரென்று அழிக்கப்பட்டது அவைகளின் சுயநலத்திற்காக. ஆனால் நாமோ அழிக்கவே முடியாத கூடுகள் கடவுளால் நமக்காக உருவாக்கபடுகிறது என்று ஏமாந்துவிட்டிருக்கிறோம்.

நீண்ட தவத்திலிருந்த குரு நிஷ்ட கலைந்து, தான் கண்டதை அக்னி குழம்புகளாய் கக்கி கொண்டிருந்தார். நிதர்ஷ்ன்ங்களை தாங்கி கொள்ளமுடியாமல் போதும் போதும் என்று குமுறின. இனி யார் நம்மை காப்பார்...இந்த உலகில் கடவுளே இல்லையா...கடவுள் உண்டென்றால் அது எங்கிருக்கிறது..?

கரடுமுரடான பாறை இடுக்குகளிலிருந்தும், சூரிய ஒளியே தெரியாத காடுகளிலிருந்தும் நம்மை காத்தது கடவுள் இல்லை. அந்த ஜந்துகளின் சூழ்ச்சிக்கு நாம் இறையாகி விட்டோம்...

கண்களை துடைத்துக்கொண்டு மெதுவாக கேட்டன...

இனி நாம் செய்ய வேண்டியது என்ன...

கண்ணை மூடிய மூத்த எரும்பு...நீண்ட மொளணத்திற்க்கு பின், உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது...அந்த ஜந்துகள் பெருகிவிட்டன..இந்த பூமியே அவைகளின் கட்டுக்குள் போய்விட்டது போல் தெரிகிறது. நாம் நாமாக வாழ்வோம். அதை தவிர நம்மால் செய்வதற்க்கு ஒன்றுமில்லை... இனி கடவுளென்று ஒன்றுமில்லை. அப்படியே கடவுள் என்று ஒன்று இருந்தால் அவன் நம் வடிவில் வரட்டும்.. நம் மொழியில் பேசட்டும்..

யுக யுகமாக, காலம் காலமாக நமப்பட்டு வந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து போனபின் ஏற்படும் வெறுமை ரொம்ப கொடுமை...செத்த பிணங்களாய் எரும்புகள் நகர்ந்தன..

காலம் எப்போதும் போல் வேகமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது....

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...