Thursday, February 11, 2010

களத்துமேட்டில் ஒரு கருப்பு இட்லி...!!களத்து மேட்டில் எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பு இட்லியகாத்தான் பார்த்ததும் நினைக்க தூண்டியது. அளவு மட்டும் கொஞ்சம் பெரிது. பெரிது என்றால் இரண்டு பேர் உட்காரக்கூடிய அளவு இருக்கும்.

குட்டைகாலன் தான் முதல்ல பார்த்து, பயந்து அரக்க பரக்க ஓடி வந்து பண்ணைக்கு தகவல் சொல்லியிருந்தான் .

"காலம்பர வெளிக்கு ஒதுங்க வந்தேன். என்னமோ கருப்ப கிடக்கேன்னு தொட்டேன், கைய சுட்டுபுடுச்சு ஆத்தா, இங்க பாரேன்.." புதிதாக வரும் ஒவ்வொருவரிடமும் சொல்லிகொண்டிருந்தான். இதையே கேட்டு கேட்டு காதில் ரத்தம் வர தொடங்கியது...ஏலே சித்த நிறுத்துடா...சும்மா லோ லோ - ன்னுகிட்டு.

மணியகாருக்கு தகவல் போயாச்சா...பண்ணை உரத்த குரலில் கூடியிருந்தவர்களை பார்த்து கேட்டார். தகவல் சொல்லியாசுங்க, அவரும் போலிசுக்கு தகவல் சொல்லி அப்படியே கூட்டியாரக்கு போயிருக்கிராருங்க...சொல்ல சொல்லவே ஜீப்பின் ஹாரன் சத்தம் கேட்டது.

வெறும் 100 தலைக்கட்டு உள்ள சாதாரண கிராமம் இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் இங்கு தான்.

எம்ஜியாரு தான் இங்க முத முதல்ல வந்தாரு. தண்ணி குழா எல்லாம் அவரு போட்டது தான். இப்ப யார் யாரெல்லாமோ வரபோராவுகலாம் ஊரே தடா புடலாக இருந்தது. பண்ணைக்கு இருப்பு கொள்ளவில்லை. இரண்டு நாளாக வரும் போனிற்கு பதில் சொல்லி நாவே வறண்டு போய்விட்டது.

அவர்கள் வாழும் கிராமத்தின் தோற்றமே மாறிபோய்விட்டதில் மணியகாரர் ராமசாமி கவுண்டருக்கு ரொம்பவே வருத்தம். எப்போதும் ஒரு அமைதியான தோற்றத்தை கொண்டிருக்கும் கிராமம் இந்த இரண்டு நான்கு நாட்களாக அல்லோல பட்டுகொண்டிருக்கிறது. பெரிய பெரிய கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. புதிய புதிய முகங்கள். யாருக்கும் மரியாதை தெரியவில்லை. பூட்சு போட்டுகிட்டு தான் எல்லா பக்கமும் போறானுங்க... கையில் ஒரு முழத்துக்கு சிகரெட் வேற...அவரின் தோட்டத்துக்கு மத்தியில் தான் அந்த சனியன் வந்து உட்கார்ந்திருக்கு...அவரால் கூட அந்த பக்கம் போக முடியவில்லை. கிராமத்து ஆள் யாரும் அந்த பக்கம் வரகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவரின் மூத்த மகன் சுரேஷ் மட்டும் அவர்களுக்கு உதவியாக அங்கே வைத்து கொண்டார்கள். பட்டினத்துக்கு படிக்க அனுபினதுக்கு இது தான் கண்ட பலன். அவர்கள் கூட சேர்ந்து எங்கே பையன் கெட்டுவிடுவானோ என்று பயம் வேறு. அவன் அப்போ அப்போ வந்து தகவல் சொன்னால் தான் உண்டு.

மஞ்சகாடு அறுவைக்கு தயார நிக்குது...அங்கனே போக முடியல.." ரொம்ப சலித்துகொண்டாள் கவுண்டச்சி. என்னபுள்ள பன்றது...கெடக்கட்டும் விடு..நஷ்டஈடு தந்திடுவாங்கலாமில்ல. கவுண்டர் சமதானபடுதிகொண்டார். சுரேஷ் தான் வந்து தகவல் சொல்லி இருந்தான். சுத்துபாட்டு ஒரு கிலோமீட்டர் அவங்க கண்ட்ரோல்ல எடுத்துக்குவான்கலாம். நஷ்டத்தை ஈடு கட்டிருவான்கலாம். அங்கனே யாரும் வரக்கூடாதாம்.

பணப்புழக்கம் இந்த நாட்களில் தாரளமாக இருந்தது. ஊரில் இருந்த ஒரே மளிகைக்கடைக்கு ஜெனியின் அப்பா சுப்பையா டேவிட் தான் முதலாளி. சுப்பையா தான் அவர் பெயர். சென்னையிலிருந்து வந்திருந்த கத்தோலிக்க பாதிரியாரால் மதம் மாறி டேவிட் என்று வைத்து கொண்டார். அந்த பெயருக்கும் அவருக்கும் எந்த தொடர்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. பின் அவரே சுப்பையா டேவிட் மளிகை என்று கடைக்கும் மதம் மாற்றம் செய்து ஞானஸ்தானம் செய்வித்து விட்டார். ஜெனியும் இப்போது அங்கு தான் விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருந்தாள். ஜெனி அருகிலிருந்த டவுனுக்கு சென்று 12 - வது வரை படித்திருந்தால். 17 வயதின் செழுமையுடனும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் இருப்பவள். ஏனோ துரு துரு என்றிருக்கும் சுரேஷும் ஜெனியும் மாணிக்கம் பிள்ளைக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் கிராமத்தை பற்றி இரண்டு பேரும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார்கள்.

நடக்க போகும் விபரீதம் யாருக்கும் புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------
ஒரு மலரின் நறுமணம் தீடிரென்று தன்னை தாண்டி செல்வதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் அது எந்த மலரின் நறுமணம் என்று வகைபடுத்த முடியவில்லை.

ரோஜா...இல்லையில்லை மல்லிகை - சுரேஷ்
நோ நோ இட்ஸ் ஜாஸ்மின் என்றாள் ஜெனி. தாமரை மாதிரி இருக்கு என்றார் மாணிக்கம்.

எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து வந்தது என்று ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். அது ஒரு 20க்கு 20 அடி அளவுள்ள அறை. வருவதற்கு ஒரு வழி தான். ஒரே குழப்பமாக இருந்தது. இரண்டு நாட்களாகவே குழம்பி கொண்டுதான் இருந்தார்கள். அதற்க்கு காரணம் இருந்தது.

நல்லாம்பாளையம் கிராமத்தில் வந்திறங்கிய பறக்கும் தட்டு பல பேரின் தூக்கத்தை கெடுத்ததோடில்லாமல், யோசித்து யோசித்து மண்டை காய வைத்து கொண்டிருந்தது. விடை தான் கிடைத்த பாடில்லை.

வந்திரங்கியிருப்பது பறக்கும் தட்டு தான். - எங்கிருந்து வந்தார்கள்...?
யாரும் வெளியே இறங்கி வந்தார்களா..? வந்திருந்தால் எங்கே போனார்கள்...? மண்ணில் வந்திறங்கி இரண்டு நாள் ஆகியும் அதை தொட முடியவில்லை, தொட்டால் பயங்கரமாக சுடுகிறது. இரண்டடி தொலைவில் நின்று தான் பார்க்கமுடிகிறது. அருகில் நெருங்க முடியவில்லை. அப்படியென்ன ஒரு மெக்கானிசம் இது..? வந்தவர்களின் நோக்கமென்ன...? தானியங்கி விமானம் போன்றதா இல்லை ஆட்கள் அல்லது உயிரினங்கள் ஏதாவது வந்திருக்குமா..எண்ணற்ற கேள்விகள்... யாருக்கு பதில் தான் தெரியவில்லை.


அவசரமாக ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டம். மாவட்ட காவல்துறை அதிகாரி முதல் உள்துறை அமைச்சர் முதல் கொண்டு இறுகிய முகங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். சில வெள்ளைகார முகங்களும் அடக்கம். மந்திரி தான் பேச்சை துவக்கினார். தெளிவான ஆங்கிலத்தில் அமைதியாக பேசினாலும், அவர் கோபத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் விசாரணையிலும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியிலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் நம்மை இந்த விஷயத்தில் எதிர்நோக்கி இருக்கிறது. பிரதமரும் இரெண்டொரு நாளின் வரக்கூடும் என எதிர்பார்கிறேன். சொல்லுங்கள் அந்த வஸ்துவின் நிலை குறித்து உங்கள் கருத்தென்ன..அது பறக்கும் தட்டு என்பதும், அதில் அயல்கிரக உயிரினங்கள் வந்திருக்க கூடும் என்பது உண்மை தானா. ஏன் அதன் அருகில் நெருங்க முடியவில்லை...?

60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர் எழுந்தார். காதோரம் ஒரு சில நரை முடிகளை தவிர அரைவட்ட நிலவை கவிழ்த்தது போல் இருந்தது அவரின் "பள பள" தலை. மாணிக்கம் பிள்ளையின் சொந்த ஊர் சென்னை. வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான்.
"செவ்வாயில் மனிதனின் காலடி" என்ற அவரின் ஆராய்சிக்காக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பட்டவர். பழுத்த விஞ்ஞானி, கணீரென்ற குரலில் அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார்.

சார்...நடந்த, நடக்கின்ற, நடக்கபோகின்ற எந்த ஒரு விஷயமும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. ஒரு மிகபெரும் அசம்பாவிதமும் நடக்கலாம். எதுவும் நடக்காமலும் போகலாம். பறக்கும் தட்டை நெருங்க தகுதியான எந்த ஒரு கவச உடையோ, கருவியோ கூட நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதே மனித அறிவின் இயலாமையை, அறியாமையை உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன். அதில் இருந்து வெளியாகும் வெப்பம் மிக அதிகம், இரண்டடி வரை தள்ளி நிற்க வேண்டிய நிலைமை. அப்படியே நெருங்கினாலும் அதை திறக்கவோ, கழட்டி ஆய்வு நடத்தவோ முடியும் என்று தோன்றவில்லை.

எங்களுக்கு கிடைத்த சில குறிப்புகள் என்ன என்பதை இஸ்ரேலில் இருந்து வந்திருக்கும் ஸ்டீவ் ராபர்ட்சன் உங்களுக்கு விளக்குவார்.

நெடு நெடுவென்று ஆறரை அடி வளர்ந்திருந்த வெண்ணிற தாடியுடன், பளீர் என்ற புன்னகையுடன் எல்லோருக்கும் காலை வணக்கத்தை சொல்லி ஆரம்பித்தார் ஸ்டீவ்.

அது வந்து இறங்கி நான்கு நாட்கள் ஆகிவிட்டது. எந்த ரேடாரிலும் பதிவானதாக தகவல் இல்லை. யாரும் நெருங்கமுடியாத அளவிற்கு அதிலிருந்து வெப்பம் வெளியாகிறது. ஆனால் அதன் கீழிருக்கும் செடிகள் கருகவில்லை. அதன் மேல் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள் அவர்கள் கிரகத்திலிருந்து தகவல்களை பெறுவதற்காக இருக்கலாம். அல்லது அதிலிருந்து வெளிய வந்தவர்களுக்கு அதிலிருந்து தகவல் செல்வதோ பெறுவதோ நடக்கலாம். எல்லாம் உத்தேசம்தான். கிராமத்தின் எல்லா பக்கத்திலும் ஆட்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு சிறு அசைவையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். சடிலைட் மூலமாகவும் கண்காணிக்கபடுகிறது. இதுவரை எந்த ஒரு சிறு வித்தியாசமான சம்பவமும் நடந்ததாக தெரியவில்லை.

கோர்வையாக அவர் பேசி நிறுத்தியதும் ஒரு அமைதி நிலவியது. சட்டென்று ஒரு நறுமணத்தை அங்கிருந்த எல்லோரும் உணர தொடங்கினர். எந்த மலரின் வாசனஎன்று உணர முடியவில்லை. ஒரு கலவையாக இருந்தது. ஒருவரையொருவர் முகத்தை பார்த்து கொண்டு ஏதோ...ஸ்மெல் என்று ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பிள்ளை "சைலென்ட்" என்று அலறினார். கூர்மையாக கவனிக்க தொடங்கினார்.

இன்று இரண்டாம் முறையாக இந்த வாசனையை உணர்கிறேன். எந்த முகாந்திரமும் இல்லாமல் வரும் வாசனை. ஒருவேளை அவைகள் இங்கு நடமாட கூடும். மாணிக்கம் சொல்லி நிறுத்தியதும் எல்லோர் முகத்திலும் ஒரு கணம் பயம் வந்து போனது.

-------------------------------------------------------------------------------------

எஷ்னோ..எஷ்னோ..நாம சரியாய் லேன்ட் பண்ணிவிட்டோமா... டார்கெட் இது தானே. .நிச்சயம் இது தான்...நாம் சரியாய் வந்து விட்டோம் தநோயக்.

பூமியின் கால கணக்குப்படி நமக்கு சரியாய் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நாம் வந்த வேலை முடிய வேண்டும். யாரும் டிஸ்கை (பறக்கும் தட்டு ) நெருங்க முடியாதபடி fire alarm ஆன் செய்துவிடு. எல்லா சாம்பிள்களையும் கலக்ட் பண்ணவேண்டும். பட்டியலை சரி பாதியாக பிரித்து ஒரு பகுதியை நீ வைத்து கொள். அதன்படி பொருட்களை சேகரி. மீதி என் பொறுப்பு.

சரியாக 5000 மீட்டர் வரை நீ போகலாம். அதற்கு பின் உன் தொடர்பு அறுந்துபோகும். ஜாக்கிரதை...டிஸ்கின் தொடர்ப்பு போய்விட்டால் உன் உருவம் மனிதாகளின் கண்ணுக்கு தெரிந்து விடும்.

இரண்டு உருவங்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கி அந்த கிராமத்தின் இரு வேறு திசைகளை நோக்கி நடக்க தொடங்கியது. ஆனால் யார் கண்ணிலும் அது படவில்லை. அவை தங்களை தாண்டி செல்லும் போது ஒருவித மலரின் வாசனையை மனிதர்கள் உணர்ந்தார்கள். அதற்கு காரணம் தெரியவில்லை.

இரண்டு உருவங்களும் மனித உடலமைப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஒரு உருளையை போல் இருந்தது. அந்த உருளையிலிருந்து எண்ணற்ற கை போன்ற, கால் போன்ற அமைப்புகள் வெளியே நீட்டிகொண்டிருந்தது. அவை தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது. மனிதன் ஒரு காபி கோப்பையை எப்படி கை நீட்டி எடுகின்றானோ அது போல். ஆனால் ஒரு வித்யாசம். மனிதனுக்கு கை நிரந்தரமாக தொங்கி கொண்டிருக்கிறது. இந்த உருவங்கள் வேண்டும் போது அதை உபயோகபடுதிகொண்டன. தேவை இல்லாத போது அவைகளை உள்ளிழுத்து கொண்டது. அவை தரையில் உருண்டன...நின்றபடியும் அவைகளால் நடக்க முடிந்தது. உருளையின் உச்சியில் மனித தலையை போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் முடியோ, கண், காத்து, மூக்கு எதையும் காணமுடியவில்லை. உச்சியின் மத்தியில் ஒரு சிறிய பல்பை போன்று தெரிந்தது. ஒருவேளை அது கண்ணாக இருக்கலாம். நான்கு அடி வரை உயரம் இருந்தது. ஆனால் தேவைபட்டால் அவற்றால் உயரமாக முடியும் போல் தெரிந்தது. அவைகளின் குரல் மிக மெதுவாக ஒரு தாள லயத்தில் இருந்தது. ஒன்றின் பெயர் எஷ்னோ, மற்றொன்று தநோயக்.

அவற்றின் உருவம் மனித கண்களுக்கு புலப்படவில்லை.

-------------------------------------------------------------------------------------

காலை முதலே சுரேஷிற்கு எதோ விபரீதம் நடக்க போவதாக புரிந்தது. விஞ்ஞானிகளுக்கான கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க பட்டதாக தெரியவில்லை. நமது விஞ்ஞான அறிவிற்கும் மேற்பட்ட ஏதோவொன்று, நம்மை ஆளுமை செய்ய தயாராகிவிட்டதன் அறிகுறி என்று எல்லோரும் பேசி கொண்டார்கள். எப்படி அதன் தாக்குதல் இருக்கும் என்றும், அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில் ஒரே குழப்பம் தான் நிலவியது. கோவையிலிருந்து எந்நேரமும் இராணுவம் வரல்லம் என்றும் எதற்கும் தயாராக இருக்கும்படி இந்திய இராணுவம் அறிவுருத்தபட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.

மதியம் 03 :00 மணி.

மதிய உணவை முடித்துவிட்டு ஆராயசிகூடதிற்கு சென்று கொண்டிருந்தான். சுற்றிலும் கரும்பும் மற்றொருபுறம் வாழையும் பயிரிட்டிருந்தார்கள். காற்றின் அசைவினால் ஏற்பட்ட சலசலப்பை தவிர எந்தவொரு ஓசையும் இல்லை. ஒற்றை நாரையொன்று வடக்காக கத்திக்கொண்டு சென்றது. காலையில் உணர்ந்த அதே வாசனை காற்றில் உணரமுடிந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தான். மனதை ஒருமுகபடுதி ஏதாவது அருகில் தென்படுகிறதா என்று பார்த்தான்.

தனக்கு மிக அருகில் ஏதோவொன்று நிற்பதாக உணரமுடிந்தது...ஆனால் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. இதயம் வேகமாக அடித்துகொண்டது. இதய படபடப்பு வெளியே கேட்கதொடங்கியது.

திடீரென்று நெற்றியில் மின்சாரம் தாக்கியதை உணர்ந்தான். அம்மா...என்றலரளோடு மயங்கி சரிந்தான்...

மதியம் 05 : 00 மணி

இரண்டு மணி நேரமாக சுரேஷை காணவில்லை என்றதும் மாணிக்கம் பிள்ளை முதல்முறையாக விபரீதத்தை உணர்ந்தார். ஒருவேளை வீட்டில் இருப்பானோ..? ஆளனுப்பி விசாரிக்க முடிவு செய்தார். நம்மாட்களை அனுப்பி விசாரிக்க செய்தால் ஒருவேளை கிராமத்தார் பதற்றமடைய கூடும். யாரை அனுப்பலாம்...சட்டென்று ஜெனியின் ஞாபகம் வந்தது. ஆம்...அவள் தான் சரியான ஆள்.

ஜெனி..உனக்கொரு அவசர வேலை. சுரேஷ் மதிய உணவிற்கு சென்றவன் இன்னும் வரவில்லை. கொஞ்சம் அழைத்து வருகிறாயா...அவசரம். ஓகே...சார். ஒரு வேளை தூங்கியிருந்தாலும் இருப்பார். நான் போய் அழைத்து வருகிறேன்.

புள்ளிமானாய் விரைந்தாள் ஜெனி.

வரப்பில் நடந்து வந்தவள் மாலை நேர வெயில் பட்டு, தொலைவில் ஏதோவொன்று மின்னுவதை கண்டு அங்கே ஓடினாள். குனிந்து எடுத்தவள் இது..சுரேஷ் சார் வாட்ச் ஆச்சே...ஒருவேளை இந்த வழிய போகும்போது தவற விட்டாரோ..? எடுத்து மடியில் சொருகுகி கொண்டு ஒரு அடி எடுத்துவைக்க தொடங்கியவள் ஒரு கணம் நின்றாள்...அதே மணம்...இது என்று யோசிக்க...தன்னை யாரோ இழுப்பது தெரிந்தது..கையை உதறிக்கொண்டு ஒரு அடி பின் நகர்ந்தாள்...யாரும் தென்படவில்லை. மனப்ரந்தியா..இல்லை தான் இழுக்கப்பட்டது உண்மையா... லேபிற்கே போய் விடலாமா..? மாணிக்கம் சார்க்கு தகவல் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே நெற்றியில் சூடாக ஏதோ பட்டது போல் இருந்தது..கையை கொண்டு தேய்க்கும் வினாடி நேரத்திற்குள் மயங்கி விழுந்தாள்.

(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...)

5 comments:

 1. நல்லா விறு விறுப்பா இருக்கு..

  ReplyDelete
 2. அடுத்த பதிவு எப்போ.

  ReplyDelete
 3. நன்றி அண்ணாமலையான்

  நன்றி கொத்துபுரோட்டா

  அடுத்தபதிவு விரைவில் தருகிறேன்....

  ReplyDelete
 4. சரியான இடத்துல தொடரும் போட்டுட்டீங்களே..

  ReplyDelete
 5. விரைவில் இதன் அடுத்த பகுதி வரும் நண்பரே

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...