
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் என எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு டைரிகுறிப்பின் காதலோடு. டைரி எழுத இப்பொழுதெல்லாம் யாருக்கும் நேரமோ, மனமோ இருப்பதில்லை. கணினியில் நாள் பூராவும் உட்கார்ந்து பழகி விட்டபின் படிக்கும் பழக்கம் குறைந்து போனமாதிரி எழுதும் பழக்கமும் குறைந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தில் தன் மனதில் தோன்றியதை மிக எளிமையாக இறக்கி வைக்க முடிகிறது. அவற்றுள் சில மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெறுவதும் உண்மைதான். பெரும்பாலும் குப்பைகள் தான் பதிவேற்றபடுகிறது என்றாலும் நம் எல்லோரின் மனங்களும் குப்பைகளால் நிரம்பியது தான் என்பதை யார் மறுக்க கூடும். பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் கூட முதலில் மறுதலிக்கப்பட்டு பின் எல்லோராலும் கொண்டாடப்பட்ட சம்பவங்கள் இறந்தகாலங்களில் நிறைய உண்டு.
பாராட்டுதலுக்காகவோ, அங்கீகரிபிற்கோ எல்லோரும் ஏங்கிக்கொண்டு தானிருகின்றனர். மிகசிலர் தான் பின்னூட்ட வலைகளில் சிக்கி கொள்ளாமல் பதிவிடுவதை வெறும் டைரி குறிப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். இலக்கிய சர்ச்சை என்பது தமிழிற்கு மிக மிக பழைய சமாசாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் சர்ச்சை என்பது கன்றுகுட்டிக்கு காயடிப்பது போன்றது தான். தங்களின் மேதாவி தனத்தை காட்டி கொள்ள அழையா விருந்தாளிகளாக சில பதிவர்கள் பின்னூட்டமிடுவதும், தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பதும் வேதனையளிக்கிறது. இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ள ரத்தம் குடிக்க எல்லா நரிகளும் கூடி கூத்தடிப்பதும் சகஜமாகிவிட்டது.
திறமைக்கு மதிபளிக்க இது ஒபாமா பூமியல்ல. நாமும் அமெரிக்கர்களல்ல என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நீங்கள் கொம்பு சீவிக்கொள்ள உங்கள் முன் பதிவோடு போட்டியிடுங்கள் அல்லது குறைந்த பட்சம் உங்களைவிட பெரிய எழுத்தாளர்களோடு. மேல் மாடியில் நின்று கொண்டு எச்சிலை காறி உமிழ்வது நாகரீகமல்ல. மேல் மாடி என்பது எல்லோருக்கும் எப்போதும் சாச்வதமானதும் அல்ல.
தானாக சேர்த்த கூட்டமோ, எதை கொடுத்து சேர்த்த கூட்டமோ எழுத்தின் தரத்தை தீர்மானிப்பது பின்னூட்டங்கள் மட்டுமல்ல. ஒருபதிவர் (பெயர் தேவையில்லை) தன் படைப்பு தமிழ்மண விருதிற்கு தேர்ந்தேடுக்கபட்டது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். காரணம் தாம் அதிகம் உழைத்து பார்த்து பார்த்து செதுக்கிய தன் முந்தய படைப்புகள் எல்லாம் விருதிற்காக கூட தேர்ந்தெடுக்காமல் புறகணிக்க பட்டிருக்கையில், வெறும் நகைசுவைக்காக புனையப்பட்ட படைப்பு விருது பெறுவதில் அவருக்கே உடன்பாடு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருந்தார்.
ஒரு படைப்பின் அங்கீகாரம் என்பது கூடி நிற்போரின் கைதட்டகளில் மட்டுமல்ல. எழுதியவனின் ஆத்ம திருப்தியிலும் இருக்கிறது. உங்கள் விமர்சனம் ஒரு கைகுலுக்குதளோடு இருந்தால் மட்டுமே படைப்பவனின் ஆத்மா நிறையும். புதிய படைப்புகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறும்.
