Thursday, March 4, 2010

யார் ஞானி...? தொடர் பதிவு

ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்டால் ஆன்மிகம் செத்துபோயவிடும். மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது இங்கே ஏதோ ஒன்னு இருக்கு என்ற சம்சயம் எல்லோருக்கும் வருவதுண்டு. கடவுளை குறித்த தேடலுக்கு சரியான வழிகாட்டி அமைவது மிக முக்கியம். இல்லையென்றால் நித்ய போன்ற போலிகளிடம் நம்பி ஏமாறவேண்டியது தான்.

உண்மையான ஒரு சித்தனோ, ஞானியோ, சந்யாசியோ, சாதுவோ எப்படி இருப்பார்கள் என்பது குறித்து ஒரு தொடர் பதிவு போட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அது மட்டுமல்ல தாசியிடம் படுத்தவனின் தரசான்றிதழ் குறித்து மூன்று நாட்களாக படித்து படித்து மண்டையெல்லாம் படுக்கையறை காட்சிகளும், சரியான நேரத்தில் விளக்கை அனைத்து விட்டாளே சண்டாளி என்று கொந்தளித்த பல நண்பர்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய இந்த தொடர்பதிவு.

உங்கள் அனுபவத்தில் ஏதாவது ஒரு உண்மையான சாதுவை கண்டிருகிறீர்களா... அவர்களின் குணாதிசயம் என்ன...ஒரு ஞானி எப்படி இருப்பார் என்பது குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன..?

இதோ என் எண்ணங்கள்..யார் ஞானி...?

1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல.
2 . தன்னை தேடி யாரும் வருவதையோ, தன்னை சுற்றி கூட்டம் சேருவதையோ எப்போதும் இவர்கள் விரும்புவதில்லை.
3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்.
4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள்.
5 . பொன்னோ, பொருளோ, ஆசிரம நிதியோ எதுவும் அவனக்கு தேவையில்லை. அவன் வாய் திறந்து கேட்கவும் மாட்டான். நீங்கள் அன்பு மிகுதியால் கொடுக்க கூடியதை கூட கை நீட்டி வாங்க வெட்கபடுவார். வேண்டாம் என்று சொன்னால் எங்கே உங்கள் மனது வேதனை படுமோ என்று அவர் துடிப்பார். அவனே உண்மையான ஞானி.
6 . இப்போது சொல்கிறேன் யோகம், தியானம் எல்லாம் உண்மையான தேடுதலோடு இருப்பவர்களுக்கு தானாகவே அமையும். அத்தகையோரை தேடி குருக்கள் வருவார்கள். அவர்களை மேல்நிலைக்கு கொண்டு செல்ல.
7 . ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். எந்த விருப்பு வெறுப்பில்லாமல் வாழும் ஞானிகளை புகழ்ந்து, துதிபாடி
அவர்களை ஒரு வியாபார பொருளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
8 . தியானம் கற்றுகொடுக்க காசு வாங்குபன் நல்ல கதியை அடைவதில்லை.
9 . பூசை புனஸ்காரங்களிலும், ஹோம மந்திரங்களிலும் இறைவனை அடையவே முடியாது. சத்தியமான மனதில் உதிக்கும் எண்ணங்கள் பலிக்கும். 10 . மூன்று வேலை நெய்யும் பாலும், பழுமுமாக தின்று கொழுத்து, ஓரடி உயர பஞ்சு மெத்தையில், சுகமான ஏசியில் படுத்துறங்கி பாருங்கள். உங்கள் முகத்திலும் ஒரு தேஜஸ் தெரியும். ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது.

தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து உங்கள் எண்ணங்களை இங்கு பதிவு செய்யுங்கள். உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு பயன்படலாம்.

ரிஷபன்
சைவகொத்துபரோட்டா
SUREஷ்
பலாபட்டரை சங்கர்
மங்குனி அமைச்சர்
பிரியமுடன் வசந்த்
வெள்ளிநில சர்புதீன்
வேலன் அண்ணாச்சி
யுவகிருஷ்ணா
பித்தனின் வாக்கு
ஜோதிஜி
பழமைபேசி
ஐயா ஜெயராஜன்
தோழி பவி
பெயர் விடுபட்ட எல்லா நண்பர்களுக்கும்.

24 comments:

 1. தங்களின் தொடர் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அவ்வவ்........ என்னையும் கோதாவுல இறக்கி விட்டுடீங்களே..........
  ரைட்டு, முயற்சி செய்கிறேன் :))

  ReplyDelete
 3. நன்றி சைகோபு
  நன்றி சங்கர்

  ReplyDelete
 4. எழுதிடுவோம் தல ரொம்ப பிடிச்ச டாபிக்

  ReplyDelete
 5. நன்றி வசந்த் கலக்குங்க...

  ReplyDelete
 6. அழைப்புக்கு மிக்க நன்றி
  ஆனா தப்பா எடுத்துகாதிங்க எனக்கு "ஞானி" இவர்களை பற்றி எதுவுமே தெரியாது .

  எனக்கு முத்து என்று நண்பர் ஒருவர் இருக்கிறார் . அவரை நான் "முத்தண்ணா" என்று அழைப்பேன் .இதவரை அவர மாதிரி ஒரு கேரக்டர நான் வேறு யார் கிட்டயும் பார்த்ததில்லை . சாப்ட்வேர் ஆளு பெரிய்ய கம்பெனில பெரிய பொறுப்பில் இருக்கிறார். போன் பண்ணி எப்படினா இருக்கிங்கன்னு கேட்டா உடனே "சந்தோசமா இருக்கேன்னு" டக்குனு பதில் சொல்வார் , அத கேட்டவுடனே நமக்கும் அந்த "சந்தோசம்" வந்திடும் , எந்த விசயத்துக்கும் கோபப்படமாட்டார் , யார் மனதையும் புன் படுத்த மாட்டார் , யாரையும் திட்ட மாட்டார் , நம்ம யாரையாவது திட்டினா கூட விடமாட்டார், எல்லோருக்கு ஓடி ஓடி உதவி பன்னுவார், அவரு கூட இருந்தா மனசுக்கு சந்தோசமா இருக்கும். ஏன்னே தெரியல நீங்க ஞானி பற்றி கேட்டவுடன் எனக்கு டக்குன்னு அவர் நியாபகம்தான் வந்தது.

  ReplyDelete
 7. நன்றி அமைச்சரே...
  \\எந்த விசயத்துக்கும் கோபப்படமாட்டார் , யார் மனதையும் புன் படுத்த மாட்டார் , யாரையும் திட்ட மாட்டார் , நம்ம யாரையாவது திட்டினா கூட விடமாட்டார், எல்லோருக்கு ஓடி ஓடி உதவி பன்னுவார், அவரு கூட இருந்தா மனசுக்கு சந்தோசமா இருக்கும். ஏன்னே தெரியல நீங்க ஞானி பற்றி கேட்டவுடன் எனக்கு டக்குன்னு அவர் நியாபகம்தான் வந்தது.\\

  அவர் கூட ஞானி தான் சொல்லபோனால்

  ReplyDelete
 8. அடியேனுக்கு எழுத மிகவும் விருப்பம், ஆனால் இந்த விசயத்தை எழுத
  பிறப்பால் முஸ்லிமான என்னால் முடியாது., காரணம் நான் சொல்லி பிறர் புரியவேண்டியதில்லை !
  மற்றபடி அவசியமான பதிவு
  ( மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் மனிதர்களால் சாமியாக முடியாது, ஒரு வேளை அவர்கள் அற்புதங்கள் நிஜமாகவே செய்தார்கள் என்றாலும்.,!
  அலெக்சாண்டர் பிளமிங்கை தொலைவா செய்கிறோம்?!!

  ReplyDelete
 9. பதிவுலகம் மதத்திற்கு அப்பாற்பட்டது என நினைத்தேன். அது பார்தா மேட்டரோடு முடிந்து விட்டது. நீங்கள் விலக நினைப்பது புரிகிறது. பின்னூட்டத்திற்கு நன்றி.

  மீண்டும் வாங்க.

  ஆமாம் உங்க நண்பர் செந்தழல் ரவி நலமா..?

  ReplyDelete
 10. உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு பயன்படலாம்.

  அழைப்புக்கு நன்றி.. ஒரு சன்யாசியை சுற்றி இருப்பவர்களில் 99 % பேர் ஏமாற்றுகாரர்கள் தான். நிஜம்தான்.. ஆனால் அவர்களை ஏன் அந்த சன்யாசி விட்டு வைத்திருக்கிறார்.. பிறகு அவருக்காக மடம் கட்டி சொத்து சேர்க்கவும் செய்து விடுகிறார் என்பதில் எனக்குக் குழப்பம்.. இன்றைய சூழலில் என்னைப் பொறுத்தவரை ஆண்டவனுக்கும் எனக்கும் இடையே யாரும் வேண்டாம்.. அவராகப் பார்த்து எனக்கு என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்யட்டும்.. இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லை. சக மனிதரை நேசிப்பது மட்டும் என் விருப்பமாய்..

  ReplyDelete
 11. //1 . உண்மையான ஒரு ஞானி தன் நிலை குறித்தோ, தான் இருப்பு குறித்தோ எப்போதும் கவலைபடுபவனல்ல//
  அப்பிடினா என்னங்க. பைத்தியங்கள் போலவா?

  //3 . லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார். //
  இல்லறம் நல்லறம் இல்லீங்களா?

  //4 . எல்லாம் வல்ல இறையை முன்னிலை படுத்தாமல், தானே இறைவன் அவதாரம் என்பவனை தைரியமாக செருப்பால் அடியுங்கள். அவன் நிச்சயம் பொம்பள பொறுக்கியாகவோ, கொலைக்கு அஞ்சாத படுபாதகனாகவோ தானிருப்பான். திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் அவர்கள் தன்னை கடைசிவரை ஒரு பிச்சைகாரன் என்று தான் சொல்வார். அந்த பிரமாண்டமான ஆசிரமம் எல்லாம் அவர் விரும்பியதல்ல. அப்படியே ரமணரும். மிக மிக எளியவர்களாக கடைசி வரை வாழ்ந்து காட்டியவர்கள். //
  பெரியார், கார்ல் சேகன் போன்றவர்களை ஞானி என்று சொல்ல முடியாதா.

  ரமணரைப் பற்றிய இந்த விடயங்களைப் படித்துள்ளீர்களா?
  http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_2533.html

  //ஆனால் ஒரு உண்மையான ஞானி வருகையில் வீசும் திருநீறு வாசம் கண்டிப்பாக உங்களிடம் இருக்காது. //
  இன்னும் சாமியார்கள் மீதான பிரேமை அகலவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

  ReplyDelete
 12. நன்றி ரிஷிபன்
  1 சதவிகித பக்தர்களுக்காக தான் 99 சதவிகித ஏமாற்றுகாரர்களை அருகில் இருந்தும் தவிர்க்க முடிவதில்லை.
  நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை என்றொரு குறள் உண்டு. அது போலதான்.

  நன்றி பழமைபேசி

  ReplyDelete
 13. நன்றி குலவுசனபிரியன்

  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இது தொடர்பதிவு என்பதால் யார் ஞானி என்பது குறித்து உங்கள் அனுபவத்தையும் அபிப்ராயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். பகவான் ரமணர் வழக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து தெரியபடுத்தவும்.

  ReplyDelete
 14. "லௌகீக சுகங்களில் நாட்டம் கொண்டவர்கள் ஒருக்காலும் சுத்த சன்யாசிகளாக இருக்க முடியாது. லௌகீகத்தில் உள்ளவர்களை தன்னருகில் வைத்துகொள்வதை கூட எந்த ஞானியும் விரும்பமாட்டார்"
  நல்ல அனுபவம் மிக்க கட்டுரை.

  ReplyDelete
 15. உங்கள் அக்கறைக்கு நன்றி ஜீவன். நீங்கள் செலவழித்துள்ள ( எழுத்தை மட்டும் சற்று மேலே மாற்றிவிடுங்கள்) பயன் உள்ள சிந்தனைகளுக்கு நன்றி. தாமதமாக வந்தாலும் தரமான உங்கள் மொத்த எண்ணங்கள் வியக்க வைக்கிறது. நான் புலி வாலை பிடித்துள்ளேன். புரியும் என்று நம்புகிறேன்.

  இங்கு எல்லாமே விமர்சனப் பார்வைதான். நீங்கள் சொல்லியுள்ள ஒரு கருத்து கூட மேம்போக்கு அல்ல. முழுமையாக உணர்ந்தவர்கள் தான் இவ்வாறு எழுத முடியும்?

  இப்போது காஞ்சி மடத்தில் பெரியவராக இருந்தவர் இறைவனடி சேர்ந்தவர் நீங்கள் சொன்னபடியே நிதி ஆதாரம் உள்ளே வரத் தொடங்கும் போது அத்தனையும் இங்கு தேவையில்லை. திசை மாறிப் போய்விடும் என்று தடுத்தவர். ஆனால் அவரையும் மீறி வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. முடிவு இப்போது நீங்கள் தெரிந்தது தான்.

  வாழ்ந்தவர்கள் எவருமே கட உள் என்றவர்கள் தான். வெளியே இல்லை. உனக்குள் இருப்பதை உணர் என்றவர்கள். எவர் எவரோ செய்கின்ற புரியாத விசயங்கள் அத்தனையும் மொத்தத்தையும் ஆட்டத்தை தொடங்கியதில் இருந்தே தொடங்க வைத்துக்கொண்டுருக்கிறது.

  தமிழ் ஓவியா சொன்னது உண்மையாகவே இருந்து விட்டு போகட்டும். ரமணர் அவர் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு புரியாத ஒரு கேள்வியை கேலியாக எடுத்துக்கொள்ளாமல் அவர் இடுகையாக புரிந்துணர்வை உருவாக்குவாரா?

  மிகச் சிறந்த தலைவர் தந்தை பெரியார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை. உண்மையிலேயே அவர் தோன்றியிருக்காவிட்டால் இன்னமும் மக்கள் நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் வித்யாசம் தெரியாமல் வேறு பாதையில் தான் போய்க்கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் இந்த அளவிற்கு அவர் திரட்டிய சொத்துக்கள், மகா கஞ்சபிரபுவாக இருந்து கடைசி வரை உத்தமராக வாழ்ந்தவரின் கருத்துக்கள், புத்தகங்கள் அத்தனையும் ஏன் இன்று வரைக்கும் தமிழ்நாடு அரசு மூலம் பொதுச் சொத்து ஆக்கவும், மக்கள் அணைவருக்கும் சென்று சேரும் அளவிற்கு மிக குறைந்த விலையில் வெளியிடவும் முயற்சி எடுக்க மறுப்பது ஏன்,

  விடுதலை செய்தித்தாள் கூட 3 ரூபாய். அறக்கட்டளை சொத்து மூலம் இதை குறைக்கமுடியாதா? தலைவராக இருப்பவரின் மகன் தான் இன்று வாரிசாக முன் நிறுத்தப்படுகிறார்?

  இந்து சாமியார்களின் அறக்கட்டளை மோசாடிகளை தைரியமாக உரைப்பவர்கள் இவர்களின் அறக்கட்டளை குறித்து அதன் வருமானம் வெள்ளை அறிக்கை வருடந்தோறும் வெளி வருகிறதா? மக்கள் சொத்து தானே?

  மதம் என்பது தவறு என்பவர்கள் மதம் சார்ந்த விசயங்களை பெரியார் திடலில் நடத்த அனுமதிப்பது ஏன்.

  கருத்து சுதந்திரம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை தான் ரபி பெர்ணார்ட் பேட்டியில் சொல்கிறார்?

  தீதும் நன்றும் பிறர் தர வரா? மக்கள் தான் தங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அறிவுறுத்துவர்கள் தகுதியாக இல்லாத பட்சத்தில் மக்கள் எவரும் மாற வேண்டும் என்று நிணைப்பதை விட அந்த எண்ணம் கூட வருமா என்பது ஆச்சரியமே?

  திக மேல் எனக்கும் மதிப்புண்டு. இது காழ்ப்புணர்ச்சியால் எழுதப்பட்டது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  வாய்ப்புக்கு நன்றி ஜீவன்.

  ReplyDelete
 16. நன்றி கூடை
  நன்றி ஜோதிஜி

  மிக நீண்ட தெளிவான விளக்கம். சம்பந்த்தபட்டவர்கள் பதில் தருவார்களா என தெரியவில்லை. யாரின் பதிலுக்காகவும் அனுபவங்கள் காத்திருக்க போவதில்லை. சரி, தவறு என்று காலம் போய்கொண்டே இருக்கிறது.
  வாழ்கையில் யாரவது ஒருவருக்காவது நம் இருப்பு சந்தோசம் தந்தால் அதுவே நாம் வாழ்வதற்க்கான அடையாளம்.

  ReplyDelete
 17. பைசா தான் மேட்டரே ,எல்லாத்துக்கும் ...

  ReplyDelete
 18. வாழ ஆரம்பிக்க பணம் தேவைபடுகிறது முடிவை அதுவே தேர்ந்தேடுத்துவிடுகிறது

  ReplyDelete
 19. நீங்கள் அழைத்த "யார் ஞானி" என்ற இந்த தொடர் பதிவை எழுதி இருக்கிறேன்,
  வந்து படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பரே.

  ReplyDelete
 20. யாரின் பதிலுக்காகவும் அனுபவங்கள் காத்திருக்க போவதில்லை. சரி, தவறு என்று காலம் போய்கொண்டே இருக்கிறது.
  வாழ்கையில் யாரவது ஒருவருக்காவது நம் இருப்பு சந்தோசம் தந்தால் அதுவே நாம் வாழ்வதற்க்கான அடையாளம்.

  அற்புதம் ஜீவன்

  ReplyDelete
 21. நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!!
  நான் மறையக் கற்றவனே ஞானி!

  ReplyDelete
 22. நன்றி சைகொபு.
  கனமான ஒரு விஷயத்தை மிக இலகுவாக அதே சமத்தில் தேர்ந்த வார்த்தை கோர்வைகளுடனும் சொல்லியதற்கு. மீண்டும் பிரிதொரு நாளில் இணைவோம்.

  நன்றி ஜோதிஜி

  முனைவர் நறுக்கு தெரித்தார் போல் இரண்டு வரிகளில் அற்புதமான கருத்தை சொல்லிவிட்டீர்கள் நன்றி குணசீலன்.

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...