Thursday, December 31, 2009

இன்று ஒரு பொய் கண்ணில் படவில்லை. .

எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

வழக்கம் போல இன்னுமொரு புத்தாண்டு பிறந்து விட்டது. கலாச்சார சீரழிவு என்று கூச்சல் ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கம் போல் எல்லாமே நடந்தேறி விட்டது. வாழ்த்துகளை பெற்றும் கொடுத்தும் பழக்கபட்டாகி விட்டது. நான் யாருக்கும் வாழ்த்துகளை சொல்ல வில்லை என்ற மன உருத்தல்களிளிருந்து தப்பியாயிற்று.

வாழ்த்துகளை வெறுமே வாழ்த்தும் வார்த்தைகளாக எடுத்துகொண்டு நன்றி சொல்லி
விலகி கொள்ளவேண்டியது தான். பதிலுக்கு வாழ்த்து சொன்னாலும் சரிதான். வாழ்த்து சொன்னவன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் வருடத்தின் முதல் நாளே சோர்ந்து போய் உட்கார்ந்து விட நேரிடும்.

நான் பெற்ற முதல் வாழ்த்திலிருந்து போன நிமிடம் வந்த வாழ்த்து வரை வெறும் சொற்கோர்வையகதான் இருந்தது... தினசரிகளில் அரசியல் தலைவர்களின்
வாழ்த்துக்கள் எதுவும் காணோம்...சந்தோசமாக இருக்கிறது. இன்று ஒரு பொய் கண்ணில் படவில்லை.

Wednesday, December 30, 2009

மரணம் குறித்து..

ஏனோ மரணம் குறித்து ஒரு கவிதை எழுத தோன்றியது...பொதுவாக கவிதை படிப்பது எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன சமாச்சாரமாகவே இருந்தது. இங்கு பெரும்பாலோனோர் கவிஞர்கள் ஆவதே காதல் வயப்பட்ட பின்பு தான். என் காதல் என்னை விட்டு போன பின் கவிதையும் கூடவே போய்விட்டது.

பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்.....

மரணம் பற்றி எழுத நினைத்து மனம் எங்கெங்கோ அலைகிறது...ஒரு வேலை அவளை பிரிந்தது தான் என்னை பாதித்த முதல் மரணமாக கூட இருக்கலாம்.. மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..பிரிய நேர்வது....

எனக்கு மரணம் குறித்து பயம் இல்லையென்று நண்பர்கள் வட்டத்தில் சவடால் அடித்ததுண்டு... ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த சில சம்பவங்கள் மரணத்தின் முன் எல்லோரும் கோழைகள் தான் என்பதை உணர்த்தியது... உண்மையிலேய தற்கொலைகள் கோழைதனமல்ல என்பது மரணத்தின் நெருக்கத்தை உணர்தவனுக்கு தான் தெரியும்.

மரணம்
மகா மௌனம்...

இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...

இந்த கணக்கின் வகுத்தலில்
மட்டும்
மீதி வருவதே இல்லை.

Tuesday, December 29, 2009

பெருமழை பெய்த ஒரு நாளில்

பெருமழை பெய்த ஒரு நாளில்
ஒதுங்க இடம் தேடி தலை தூக்க
அதே நிலையில் நீயும்...

கண்கள் சந்தித்த அந்த நொடியில்
நீயும் நானும் ஓன்று தான்
நிலைமையில்....

சாலையோர டீக்கடையில்
பத்தோடு பதினொன்றாய் நானொதுங்க...
பேன்சி ஸ்டோர் வாசலில்
உனக்கு ஒரு இடம்...
உள்ளே வந்து நில்லம்மா...
கூடவே கரிசன வார்த்தைகள்..

சார்...சூடா..டீ வடை, போண்டா சார்..
அரை டிரவுசர் பையனின்
அன்பு தொல்லை...
தலை நரைத்த பெருசு
விட்ட பீடி புகை...
ஒதுங்கி நின்ற போதும்
பான்டை நனைத்த சாரல்...

இத்தனை கொடுமையிலும்
இனிமையாய் கழிந்தது பொழுது..
நொடிகொரு முறை
எனை நோக்கிய
உன் விழியின் சிரிப்பும்...
இதழின் சுழிப்பும்...

மழை நின்றது...
மின்னலென மறைந்தாய்..

மீண்டும் ஒரு
பெரு மழைக்காய் காத்திருக்கிறேன்....
உன் பெயர் கூட தெரியாது..

Monday, December 28, 2009

தீட்சை அவசியமா...

கட்டுரையின் தன்மை கருதி மீண்டும் பதிவிடுகிறேன்.


நேற்று நண்பரின் அழைப்பின் பேரில் ஓர் ஆன்மீக வகுப்பிற்கு சென்றிருந்தேன்.
வடலூர் மகான் இராமலிங்க அடிகளாரின் வழி வந்த அடிகளார் கூட்டம் அது.
ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தான் கூட்டத்தை வழி நடத்தினார்கள்.


அவர் பெயர் குரு அன்னை நாகம்மை. மிக மிக எளிமையான தோற்றம். இயல்பான பேச்சு. நடைமுறை வாழ்வில் குரு என்று சொல்லிக்கொண்டு அலைகின்ற பல நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

எப்போதும் ஒரு கூட்டம் அவரை ஒட்டிக்கொண்டு மற்றவர்களை அண்டவிடாமல் பார்த்துகொண்டிருக்கும். ஆனால் இங்கு எந்த ஒரு குருவுக்கு உண்டான பகட்டான ஆடம்பரமோ, ஆர்பாட்டமோ இல்லாமல் மிக எளிமையாக எல்லோரோடும் உரையாடி கொண்டிருந்தார்.
இறைவனை காணலாம் என்ற கொள்கையை முன்னிறுத்தி நெருப்பு தத்துவத்தில் தங்கள் உடலையே தங்கமாக புடம் போடும் தீட்சையை குரு அன்னை வழங்கி கொண்டிருந்தார். அப்போது தீட்சை குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பிய ஒருவரை குறித்து அம்மா சொன்னது...என்னை பெரிதும் யோசிக்க வைத்தது. அதனாலேய இந்த பதிவு.

அந்த கேள்வி இது தான்...

எத்தனையோ சித்தர்கள் வந்து போய்விட்டார்கள்..எத்தனையோ குருமார்கள் வந்து போய்விட்டார்கள்... அவர்கள் எல்லோரும் தீட்சை பெற்றவர்களா..என்ன..? நாம் ஏன் தீட்சை எடுக்க வேண்டும்..? தீட்சை எடுக்காமலேயே அவர்கள் எல்லாம் ஞானத்தை பெறவில்லையா...?குரு அன்னை ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனார். அம்புகளாய் துளைத்த கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தோம்...அப்போது அன்னை கேள்வி கேட்டவரை நோக்கி நீ ஒரு பிச்சைகாரனப்பா.. அதனால் தான் என்றார்.
இப்போது கேள்வி கேட்டவர் திகைத்து போனார். தொடர்ந்த அன்னை...இருபது முப்பது வருடங்களாக அரும்பாடுபட்டு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயே அது யாருக்காக...என்றார்.

அது அது என் வாரிசுகளுக்காக என்றார் அவர்...

சரி நீ சேர்த்ததை எல்லாம் அப்படியே விட்டு விட்டு போய்விடுவாயா..இல்லை முறைப்படி
யார் யார்க்கு என்ன சேரவேண்டும் என்று பிரித்து கொடுத்துவிட்டு செல்வாயா.. என்றார் அன்னை.

கண்டிப்பாக உயில் எழுதி வைத்துவிடுவேன் என்றார்..நீ எழுதி வைக்கும் உயில் போன்றது தான் இந்த தீட்சையும். யாரார்க்கு கிடைக்க வேண்டுமோ
அவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். கோடான கோடி ஆண்டுகளாக காட்டிலும் மலையிலும் திரிந்து கடுமையான தபசிலிருந்து தாங்கள் கண்டு கொண்ட அற்புத புதையலை, ஆன்மிக ரகசியத்தை எல்லோர்க்கும் கடை விரித்து விட முடியாது... அதற்கென்று சில நியமங்களை சித்தர்கள் அருளி சென்று இருக்கிறார்கள்..பல ஜென்மங்களாக தேடி தெரிந்துகொண்ட ஞான கருவூலத்தை படி படியாகத்தான் உன்னுள் செலுத்த முடியும்.யாரும் சித்தனகலாம்..எல்லோரும் புத்தனகலாம்...ஆனால் எந்த ஒரு சித்தனோ, புத்தனோ அதை எளிதில் கண்டார்களா என்ன..? உன் வாரிசு எப்படி உன்னை போல் கஷ்டப்படகூடாது என்று நீ சொத்து சேர்த்து வைக்கிறாயோ... அதைப்போலத்தான் காட்டிலும் மலையிலும் திரிந்து கடுமையான தபசிலிருந்து தாங்கள் கண்டு கொண்ட அற்புத புதையலை, ஆன்மிக ரகசியத்தை அதற்கென்று சில நியமன்களோடு சித்தர்கள் அருளி சென்று இருக்கிறார்கள்..


பல ஜென்மங்களாக தேடி தெரிந்துகொண்ட ஞான கருவூலத்தை பூமியில் உதிக்கும் உயிர்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும், மானிட பிறவியின் நோக்கமே அது தான் என்பதால் தான் தங்களின் நம்பிக்கைக்கு உரிய சீடர்களிடம் அந்த பணியை தொடர்ந்து செய்ய பணிக்கிறார்கள்... என்றார்.
ஆன்மிக தேடுதலோடு மலை மலையாக, கோவில் கோவிலாக ஒரு பிச்சைகாரனாய் ஏறி இறங்கும் எத்தனையோ அன்பர்களை வழிநடத்தி மெய்யான மெய்பொருளை அவருள் கண்டுகொள்ள செய்வது தான் ஒரு குருவின் பணி என்று முடித்தார்.


உண்மை தானே

Friday, December 25, 2009

இவர்கள் சாமியார்கள் அல்ல..!

குறி சொல்லி வியாபாரிகள்...!!!

தினசரி பத்திரிகைகளில் சமீப காலமாக இடம்பெறும் செய்திகளில் மறக்காமல் இடம் பெறுவது சாமியார்களை பற்றிய வண்டவாளங்கள் தான். பல மோசடி வழக்குகளில் இருந்து கொலை, பாலியல் வழக்குகள் வரை சாமியார்களின் பெயர்கள் அடிபடுவது சகஜமாகி விட்டது.

ஆனால், இவ்வளவு நடந்தும் மக்களிடம் விழிப்புணர்ச்சி என்பது அறவே கிடையாது என்பதாகத்தான் இம்மாதிரியான போலி சாமியார்களின் மடம் மற்றும் ஆசிரம வாசல்களில் நிறையும் கூட்டம் நினைவுபடுத்துகிறது.

மிக நீண்ட நெடிய வரலாறு கொண்ட புனிதமான ஒரு மதத்திற்கு இவர்களால் மட்டுமல்ல இவர்களை நம்பி ஏமாறும் சாமான்ய மனிதனும் ஒரு காரணமாக இருக்கிறான். உண்மையான ஆன்மிக தேடலோடு திரிகின்றவனுக்கு அவனின் உண்மை தன்மையே சரியான வழிகாட்டியாக அமையும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் சாமானியனின் தேடுதல் என்பது பொருளாதார மற்றும் தன்னிறைவு சார்ந்த விஷயமாக இருக்கும் பொழுது ஏமாறுதலும், ஏமாற்றுதலும் தவிர்கமுடியாதது தான்.

குறி சொல்வது, தாயத்து மந்திரிப்பது, பில்லி, சூனியம் வைப்பது, எடுப்பது எல்லலாமே ஒரு குறிப்பிட்ட நபர்களின் வியாபார தந்திரம். ஒரு டீ கடை, மளிகை கடை மாதிரி இதுவும் ஒரு வியாபாரம் தான். ஆனால் ஒரு வித்தியாசம் இங்கு வியாபார பொருட்களாக இவர்கள் கடை விரிப்பது நிறைய பொய்கள், சில சாமி படங்கள், (குங்குமம், விபூதி, எலுமிச்சை இன்னபிறவும் உண்டு..) இவர்கள் எல்லோரும் வியாபாரிகளே தவிர சாமியார்கள் இல்லை. இவர்களை நம்பி ஏமாறுவது என்பது (கற்பை இழப்பது உட்பட) நமது பேராசையும், அறியாமையும் தான்.

உண்மையான சித்தனோ, ஓர் மகாணோ ஒரு போதும் இங்கு குறி சொல்லப்படும் என்ற விளம்பர பலகையின் கீழ் அமர்ந்து ஆசி வழங்க போவதில்லை. நீங்கள் வைக்கும் தட்சனைக்கும், சில நூறு ரூபாய்களுக்கும் ஆன்மிக ரகசியங்களை உங்கள் காதில் ஓதிவிட முடியாது.

அவர்கள் சொல்வதெல்லாம் பலிகிறது என்பதோ..நடக்கிறது என்பதோ..எல்லாமே காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை தான். இதற்க்கு பெரிய படிப்பெல்லாம் தேவையே இல்லை. கொஞ்சம் முககுறிப்பும், மனித சைகலஜியும் தெரிந்தால் போதும். இவை யாருக்கும்
அனுபவத்திலேயே வந்துவிடும். ஏய்த்து பிழைப்பவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்.

தனது எட்டாவது வயதில் ரயிலேறி திருவண்ணாமலை வந்து, கையில் இருந்த சொற்ப
நாணயங்களையும் குளத்தில் விட்டெறிந்து விட்டு தபசில் ஆழ்ந்த பகவான் ரமணர் கடைசி வரை காசை தொட்டேதேயில்லை. சேஷாத்திரி சாமிகளோ, விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் போன்ற மஹான்கள் பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை.


கொல்லிமலை, சதுரகிரி, ரங்கமலை போன்ற மலை வாசஸ்தலங்களில் இன்றும் எத்தனையோ சித்தர்கள் வசிக்க கூடும். ஆனால் அவர்களை காட்சி பொருளாக்கி, தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ள எப்போதும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும் என்பதால் தான் அவர்களை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. சக மனிதருக்கு பயனாக இல்லாமல் மலை குகைகளில் தியானம் செய்பவர்களால் மனித இனத்திற்கு என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு கேள்வி உண்டு. ஆனால் இப்போதும், இந்த வேகமான அறிவியல் உலகிலும்
யோக கலை, ஆன்மிகம், தியானம், சித்தர்கள் என்பது குறித்தெல்லாம் மக்கள் மனதில் கேள்வி எழுப்புவது தான் அவர்கள் பணி என்பதோடு அவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். அவர்கள் தபஸின் வலிமையினால் தான் இங்கு ஆன்மிகம் இன்னமும் உயிர் வாழ்கிறது. உண்மையான தேடுதலோடு வெளிவரும் லட்சத்தில் ஒருவருக்கு அவர்கள் தேடிபோய் தரிசனம் தந்து, ஒரு சித்தனை தயார் செய்கிறார்கள். இந்த பூமி வாழ அவர்கள் தான் காரணம்.

Saturday, December 19, 2009

முந்தய தலைமுறை; நேர்மையின் குரல்

ஒரு 65 வயது பெரியவரை சந்திக்க நேர்ந்தது. Ex மிலிடரி. பரந்த அறிவு. தொடாத subject இல்லை. நேரம் போனதே தெரியவில்லை. போன தலைமுறை வரை இருந்த systamatic life style இன்று இல்லை. just dont care policy தான். இவரை போன்ற பெரியவர்கள் போன பின் நாம் என்ன செய்ய போகிறோம்...நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவரின் எல்லா அறிவையும் ஒரே நாளின் நம் தலையில் வந்து உட்கார வைத்து விட முடியாது தான். ஆனால் அவரிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் கூட அவர்களால் எப்படி நேர்மையாக வாழ முடிகிறது என்பது ஆச்சர்யம். " என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிற பொழுது..நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு திருப்தியா இருக்கு. கடவுள் எனக்கு கொடுத்த எல்லாவற்றுக்கும் ஒரு royal salyute ". என்ற பொழுது இன்று எத்தனை பேரால் குற்ற உணர்ச்சி இல்லாமல் தங்களின் வாழ்க்கையை திரும்பி பார்க்க முடிகிறது என்று கேட்க தோன்றியது. தலை முதல் வால் வரை எங்கும் பொய், லஞ்சம், ஏமாற்று. வாழ லாயகற்று போய்விட்டது இந்த புண்ணிய தேசம்.

ஆன்மிகத்தில் நம் முன்னோர்கள் சொல்லி சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கும்
அறிவியல் விளக்கம் கொடுத்தார். just amazing ...! (இதை பற்றி தனியாக விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன்) கொஞ்சம் லேட்டாக பிறந்து விட்டதற்காக வருத்தப்பட்டேன். நான் இந்த நூற்றாண்டுக்கான ஆள் இல்லை என்றே தோன்றுகிறது.

இறுதியாக தொலைபேசி அழைப்பு வந்து எல்லாம் கெட்டு விட்டது. உடனடியாக கிளம்பு வேண்டிருந்ததால் மீண்டும் ஒரு முறை சந்திக்க விருப்பம் தெரிவித்து விட்டு கிளம்பி விட்டேன். ஆனால் அவரின் குரல் இன்னமும் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஒரு நேர்மையான மனிதரின் குரலுக்கு இருக்கும் சக்தி அது தான்.

Friday, December 18, 2009

ஒரு காலேஜ் தேவதையின் டைரிக் குறிப்பு

நேற்று ஒரு கதை படிக்க நேர்ந்தது. நண்பரின் bloggil
மனது ஏனோ வலித்தது. அபியும் நானும் படம் பார்த்து
இரவு பூரா அழுதவன் நான். இந்த கதையும் மனதை வலிக்க செய்தது.

ஒரு காலேஜ் தேவதையின் டைரிக் குறிப்பு. தேதி முக்கியமில்லை.

காலேஜ் ஃபர்ஸ்ட் டே இன்னைக்கு.

ரெம்பப் பேமஸான காலேஜ். இடம் கிடைக்கிறதே பெரிசு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க மனசு நோகம நடந்துக்கணும். அவங்களுக்கு பேரும் புகழும் வாங்கித்தர்ற மாதிரி நடந்துக்கணும்.

ஐ லவ் மை மாம் அண்ட் டாட். தெ ஆர் சிம்ப்லி க்ரேட்.

காலேஜ் சேந்ததுக்கப்புறமா நேரமே இல்லை. அதான் எழுதலை. ஐ லைக் காலேஜ். ஸ்கூல் மாதிரி இல்லாம ஜாலியா இருக்கு. ஸ்கூல்ல எல்லாருக்கும் பயப்படணும். இங்க அப்படி இல்ல. ஜஸ்ட் டோண்ட் கேர். பசங்கதான் பாவம். பொண்ணுகளை இம்ப்ரெஸ் பண்ண ரொம்ப கஷ்டபடறாங்க...

இந்த லலிதா ரெம்ப மோசம். நான் ஸ்ரீராமுக்கு ரூட் விடுறேன்னு கலாட்டா பண்ணுறா. ம்ம்... நானாவது அப்படியெல்லாம் செய்யுறதாவது. ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் அவ்வளவுதான். நான் யாரையும் லவ் பண்ண மாட்டேம்ப்பா. அப்பா படுற சிரமம் தெரியும். அம்ம படுற கஷ்டம் அதை விட அதிகம். எப்படித்தான் வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் மேனேஜ் பண்ணுறாங்களோ?

இன்னைக்கு ஒரு இண்டரெஸ்டிங்கான விஷயம் நடந்தது. ஸ்ரீராமும் நானும் காபி ஷாப் போனோம். ஸ்ரீராம் நல்ல பையன். தெளிவா இருக்கான். நல்ல கோல்ஸ் எல்லாம் வச்சிருக்கான். காதல் கீதல்ல எல்லாம் அவனுக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்னை மாதிரியே. வீ ஆர் ஃப்ரண்ட்ஸ். ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.

எல்லொரும் அன்ன ரெம்ப ஓட்டுராங்கப்பா. நான் ஸ்ரீராமோட சேர்ந்து சுத்துறது காதலாம். வேற எதுவுமில்லையாம். என்னாலயே நம்ப முடியல அவஙக சொல்லுறது. ஸ்ரீராமக் கேட்டா.. நிறுத்தாம சிரிக்கிறான். எங்க ஃப்ரன்ட்ஷிப்ப புரிஞ்சுக்க, நம்ப முடியாத அளவுக்கு எல்லொரும் இருக்காங்க. சுத்த மோசம். எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்

ஸ்ரீராம் இன்னைக்குப் ப்ரபோஸ் பண்ணுனான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஃப்ரண்ட்ஸா இருப்போம்னுதானே பழகுனான்.அப்புறமென்ன? எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு ஆனா லவ்வெல்லாம் பண்ணமாட்டேன். எனக்குப் படிக்கணும். பெரிய ஆள வரணும்...

வா.. செல்லம் வாவா... செல்லம் பாட்டு எனக்கு ரெம்பப் பிடிக்குது. ஏனோ தெரியலை..

ஸ்ரீராமப் பார்க்க பாவமா இருக்கு பழைய கலகலப்பு இல்லை அவங்கிட்ட. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். எல்லோரும் நான்தான் காரணம்ங்கிறாங்க. நான் என்ன பண்ணினேன். ப்ரண்ட்ஸ்னு சொல்லித்தானே பழகுனோம்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க.

ஒரு வேளை நான்தான் தப்பு பண்ணீட்டேனோ? டேய்.... ஸ்ரீராம் சாரிடா.

ஒரு ஃப்ரண்ட் என்னால கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல. அதனாலும் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஸ்ரீராம் இப்பத்தான் பழைய ஸ்ரீராமா இருக்கான்.எனக்கு இப்பத்தான் நிம்மதி. என்னால ஒருத்தன் கஷ்டப் படுறத தாங்கிக்க முடியல.

ஆனாலும் இந்த ஸ்ரீராம் மோசம். பிரண்ட்ஸா இருந்தப்ப்ப இந்த சேட்டை எல்லாம் எங்க வச்சிருந்தான்னு தெரியலை? கொஞ்சம் வரம்பு மீறித்தான் பழ்குறான். ஆனால் அது தான் பிடிச்சிருக்கு.. எனக்கு என்ன ஆச்சு.. டேய் ஸ்ரீராம், நாயே, பேயே, பன்னிக்குட்டி, புஜ்ஜிகுட்டி செல்லம். எப்படிடா என்னை இப்படி மாத்துனே? ஐ லவ் யு ஸ்ரீராம். யூ ஆர் சிம்ப்லி க்ரேட்.

கதையின் முடிவை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்...
அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படிவேண்டுமானாலும் மாறி போகலாம். சுகமோ..துக்கமோ..அது அவளை மட்டும் பாதிப்பதில்லை.

குற்றம் காலத்தின் மீதோ, சமுக சூழலின் மீதோ, பெற்றோரின் மீதோ, இதனால் தான் என கை காட்டிவிட்டு ஒதுங்கிவிடுவது மிக எளிது... எல்லோர் வீட்டிலும் பெண் குழந்தைகள் உண்டே....கதையின் முடிவை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள்...

சின்ன அறிமுகம்

என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

பெயர்: சுரேஷ்
வயது: 35
படிப்பு: ரொம்ப கொஞ்சம்

அனுபவம்: படிப்பை முடித்த கையோடு வேலைக்கு போய் 15 வருடங்கள் ஓடிவிட்டது. வித விதமான அனுபவங்கள். பத்து புத்தகம் போட்டாலும் தீராத, ரசனையான விஷயங்கள் நிறைய உண்டு. முடியும் போது இங்கே எழுத உத்தேசம்.

காதலிகள்: நிறைய உண்டு. நினைத்தாலே நெஞ்சம் கணக்கும் உறவுகள். கனவுகளை சுமந்தபடி திரிந்த, so what பருவம்...யதார்த்த வாழ்வின் சுமை அறியாத வயதில்

மனைவி: ஒன்றே ஒன்று தான் (போதுமடா சாமி)
குழந்தை: கடவுளின் ஆசி ( ஒரு குட்டி தேவதை)

தொழில்: பத்திரிக்கை நடத்துவது.
கோவை இமேஜெஸ் என்ற வார பத்திரிக்கையை நடத்தி வருகிறேன்.
பத்திரிக்கையை கோவை இமேஜெஸ் இணையத்தில் பார்க்கலாம்

Thursday, December 17, 2009

நாமென்ன பாரதிகளா

வேலை செய்ய யாரும் தயாரில்லை ஆனால் வருமானம் மட்டும் வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் யாருமே உழைப்பதற்கு தயாரில்லை. படித்து விட்டு வேலை தேடுவோரின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது. ஆனால் வேலை கிடைத்தாலும் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணமோ நேர்மையோ இருப்பதில்லை.

எண்ணத்தில் நேர்மை இல்லாத இளைய சமுதாயம் கண்டிப்பாக ஓட்டுக்கு பணம்
வங்கதான் செய்யும். கலாமின் கனவுகள் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. கனவு மெய்ப்பட நாமென்ன பாரதிகளா..

Wednesday, December 16, 2009

கன்னி முயற்சி

இது எனது கன்னி முயற்சி.
தோன்றுகிறதை எல்லாம் எழதலாம் என்று உத்தேசம்.
எப்போதாவது சில நல்ல படைப்புகள் வந்து விழும் என்ற
அசட்டு நம்பிக்கை.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...