Friday, December 25, 2009

இவர்கள் சாமியார்கள் அல்ல..!

குறி சொல்லி வியாபாரிகள்...!!!

தினசரி பத்திரிகைகளில் சமீப காலமாக இடம்பெறும் செய்திகளில் மறக்காமல் இடம் பெறுவது சாமியார்களை பற்றிய வண்டவாளங்கள் தான். பல மோசடி வழக்குகளில் இருந்து கொலை, பாலியல் வழக்குகள் வரை சாமியார்களின் பெயர்கள் அடிபடுவது சகஜமாகி விட்டது.

ஆனால், இவ்வளவு நடந்தும் மக்களிடம் விழிப்புணர்ச்சி என்பது அறவே கிடையாது என்பதாகத்தான் இம்மாதிரியான போலி சாமியார்களின் மடம் மற்றும் ஆசிரம வாசல்களில் நிறையும் கூட்டம் நினைவுபடுத்துகிறது.

மிக நீண்ட நெடிய வரலாறு கொண்ட புனிதமான ஒரு மதத்திற்கு இவர்களால் மட்டுமல்ல இவர்களை நம்பி ஏமாறும் சாமான்ய மனிதனும் ஒரு காரணமாக இருக்கிறான். உண்மையான ஆன்மிக தேடலோடு திரிகின்றவனுக்கு அவனின் உண்மை தன்மையே சரியான வழிகாட்டியாக அமையும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் சாமானியனின் தேடுதல் என்பது பொருளாதார மற்றும் தன்னிறைவு சார்ந்த விஷயமாக இருக்கும் பொழுது ஏமாறுதலும், ஏமாற்றுதலும் தவிர்கமுடியாதது தான்.

குறி சொல்வது, தாயத்து மந்திரிப்பது, பில்லி, சூனியம் வைப்பது, எடுப்பது எல்லலாமே ஒரு குறிப்பிட்ட நபர்களின் வியாபார தந்திரம். ஒரு டீ கடை, மளிகை கடை மாதிரி இதுவும் ஒரு வியாபாரம் தான். ஆனால் ஒரு வித்தியாசம் இங்கு வியாபார பொருட்களாக இவர்கள் கடை விரிப்பது நிறைய பொய்கள், சில சாமி படங்கள், (குங்குமம், விபூதி, எலுமிச்சை இன்னபிறவும் உண்டு..) இவர்கள் எல்லோரும் வியாபாரிகளே தவிர சாமியார்கள் இல்லை. இவர்களை நம்பி ஏமாறுவது என்பது (கற்பை இழப்பது உட்பட) நமது பேராசையும், அறியாமையும் தான்.

உண்மையான சித்தனோ, ஓர் மகாணோ ஒரு போதும் இங்கு குறி சொல்லப்படும் என்ற விளம்பர பலகையின் கீழ் அமர்ந்து ஆசி வழங்க போவதில்லை. நீங்கள் வைக்கும் தட்சனைக்கும், சில நூறு ரூபாய்களுக்கும் ஆன்மிக ரகசியங்களை உங்கள் காதில் ஓதிவிட முடியாது.

அவர்கள் சொல்வதெல்லாம் பலிகிறது என்பதோ..நடக்கிறது என்பதோ..எல்லாமே காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை தான். இதற்க்கு பெரிய படிப்பெல்லாம் தேவையே இல்லை. கொஞ்சம் முககுறிப்பும், மனித சைகலஜியும் தெரிந்தால் போதும். இவை யாருக்கும்
அனுபவத்திலேயே வந்துவிடும். ஏய்த்து பிழைப்பவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்.

தனது எட்டாவது வயதில் ரயிலேறி திருவண்ணாமலை வந்து, கையில் இருந்த சொற்ப
நாணயங்களையும் குளத்தில் விட்டெறிந்து விட்டு தபசில் ஆழ்ந்த பகவான் ரமணர் கடைசி வரை காசை தொட்டேதேயில்லை. சேஷாத்திரி சாமிகளோ, விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார் போன்ற மஹான்கள் பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை.


கொல்லிமலை, சதுரகிரி, ரங்கமலை போன்ற மலை வாசஸ்தலங்களில் இன்றும் எத்தனையோ சித்தர்கள் வசிக்க கூடும். ஆனால் அவர்களை காட்சி பொருளாக்கி, தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ள எப்போதும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும் என்பதால் தான் அவர்களை பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. சக மனிதருக்கு பயனாக இல்லாமல் மலை குகைகளில் தியானம் செய்பவர்களால் மனித இனத்திற்கு என்ன நன்மை என்று நம்மில் பலருக்கு கேள்வி உண்டு. ஆனால் இப்போதும், இந்த வேகமான அறிவியல் உலகிலும்
யோக கலை, ஆன்மிகம், தியானம், சித்தர்கள் என்பது குறித்தெல்லாம் மக்கள் மனதில் கேள்வி எழுப்புவது தான் அவர்கள் பணி என்பதோடு அவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். அவர்கள் தபஸின் வலிமையினால் தான் இங்கு ஆன்மிகம் இன்னமும் உயிர் வாழ்கிறது. உண்மையான தேடுதலோடு வெளிவரும் லட்சத்தில் ஒருவருக்கு அவர்கள் தேடிபோய் தரிசனம் தந்து, ஒரு சித்தனை தயார் செய்கிறார்கள். இந்த பூமி வாழ அவர்கள் தான் காரணம்.

7 comments:

 1. //தனது எட்டாவது வயதில் ரயிலேறி திருவண்ணாமலை வந்து, கையில் இருந்த சொற்ப
  நாணயங்களையும் குளத்தில் விட்டெறிந்து விட்டு தபசில் ஆழ்ந்த பகவான் ரமணர் கடைசி வரை காசை தொட்டேதேயில்லை. //ஆனா மண்டையைப் போடும்போது, ஆஸ்ரமச் சொத்துக்கள் தன்னுடைய அண்ணன் மகனுக்குத்தான் போய்ச் சேரவேண்டுமென மாற்றி வைத்தான். சாமியார் என்ற முறையில் ஈட்டிய பணம் பொதுச் சொத்துஅதை சொந்தக்காரர்களுக்கு கொடுக்கலாகாது என்று இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப் பட்டது. கோர்டில் இவன் என்ன சொன்னான் தெரியுமா? "நான் சாமியார் என்று எங்கே சொன்னேன்?" உண்மையிலேயே காசின் மீது பற்றற்றவன்தான் இவன்!

  ReplyDelete
 2. அய்யா ஜெயதேவ் அவர்களே...
  ரமணரின் மேல் மிகுந்த பற்று வைத்திருப்பவர்கள் ஏராளம்.
  அவரின் சுயத்தன்மை அப்பழுக்கற்றது. உங்களின் இந்த கருத்துக்கு ஆதாரம்
  இருந்தால் வெளிப்படுத்துங்கள். ஆதாரம் இல்லாமல் இது போன்ற கருத்துகளை
  வெளியிடாதீர்கள்

  ReplyDelete
 3. பகவான் ரமணரும் பக்த கோடிகள் வழங்கிய காணிக்கைகள் மூலம் கோடீசுவரராக உயர்ந்து விட்டார். பகவானிடம் பணம் சேரச் சேர அவரது தாயார், தம்பி எல்லாம் ரமணரின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்கள்!

  ஒரு கட்டத்தில் முற்றும் துறந்த முனிவரான பகவான் ரமணரிஷிக்கு கோடிக்கணக்கில் தன்னிடம் குவிந்த சொத்துக்களை யாருக்கு வழங்குவது என்ற கவலை பிறந்துவிட்டது.

  அனாதைச் சிறுவனாக ஆதரிப்பார் யாருமின்றி, ஆப் டிராயர் சிறுவனாக மலைக்குகையில் அடைக்கலம் புகுந்த தன்னை கோடீசுவரனாக்கிய மக்களுக்கே எழுதி வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை பகவானுக்கு!

  ஊரார், உலகத்தார் கொட்டிக் கொடுத்த கோடி கோடி ரூபாய் சொத்துக்களை எல்லாம் பகவான் ரமணர் தனது தம்பி வாசுதேவன் பெயருக்கே உயில் எழுதி வைத்தார்.

  இந்தச் செய்தி வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பகவான் - பொதுச் சொத்தை_ குடும்பச் சொத்தாக ஆக்கி தம்பிக்கு உயில் எழுதி வைத்ததை எதிர்த்து ஒரு வழக்கு போடப்பட்டது.

  அந்த வழக்கினையொட்டி_ பகவான் ரமணர் ஒரு வாக்கு மூலம் கொடுத்தார். அது என்ன?

  நான் சன்னியாசம் வாங்க வில்லை. அதனால் நான் சன்னியாசி அல்ல! நான் குடும்பஸ்தன்தான்! நான் எனது சொத்துக்களை உயில் எழுதியது எவ்விதத்திலும் தவறல்ல என்பதே அந்த வாக்குமூலம்!
  http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6427.html

  ReplyDelete
 4. பெரியாரின் சமகாலத்தில் திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன் ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமணமகரிஷி என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.

  அரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத்தந்தார்கள். அந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா? தனது தம்பியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துவிட்டுப்போனார்.
  http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_4628.html

  ReplyDelete
 5. அதன் பிறகு மரத்துக்கடியில் கோவணம் கட்டினார். சொத்து சேர்ந்தது. நம்முடைய நாட்டிலே சொத்து சேர்ப்பதற்கு சுலபமான வழி சாமியார் ஆவது.

  திருவண்ணாமலையில் ரமணரிஷி ஆசிரமம் நடத்தினார். சொத்துகள் ஏராளம் குவிந்தன. அதன் பிறகு அவனுடைய சொந்தக்காரர் ஒவ்வொருவராக வந்தார்கள். இந்த ரமண ரிஷி பார்ப்பனரிடம் பெருமாள் சாமி என்ற பர்ப்பனரல்லாத சீடரை வெளியே போ என்று சொன்னார். அவர் வழக்குப் போட்டு இன்னமும் வழக்கு நடக்கிறது. ரமணரிஷி வழக்க 35, 40 வருடமாக நடக்கிறது. இந்த சொத்துகள் பூராவுமே என்னுடைய சொந்த சொத்து. அதனால் என்னுடைய குடும்பத்திற்கு என் தம்பிக்கு என்று சொன்னார். நான் உயில் எழுதி வைத்துவிட்டேன்.
  http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_2533.html

  ReplyDelete
 6. ரமணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவதற்கு உதவிகரமாக இருந்தவர் இவர்.

  நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரிஷி-யினுடைய சீடர் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்.

  ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

  ரமண ரிஷி செல்வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்னுடைய தாயாரை வரவழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவழைத்தார். சொத்துகளை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

  நீங்கள் பகவான் ரமணரிஷி. நீங்களே பகவான் ஆயிட்டீங்களே சொத்துகளை எப்படி உங்களுடைய குடும்பத்திடம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷியிடம்.

  ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு
  வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

  ரமண ரிஷியின் மர்மங்கள் என்ற தலைப்பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1934, 1935ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கு வந்தது.

  இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷியின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

  நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

  வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்போனார். நீதிபதியும் செத்துப்போனார். வழக்கு மட்டும் உயிரோடு இருக்கிறது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

  http://thamizhoviya.blogspot.com/2010/01/blog-post_27.html

  ReplyDelete
 7. இது உண்மையாக இருந்தால் நான் வெட்கபடுகிறேன் என் பதிவிற்காக.இந்த வார்த்தைகளை அவரிடம் இருந்து நான் ஒருபோதும் எதிர்பார்க்க வில்லை.

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...