Friday, January 15, 2010

அவதார் - ஒரு புதிய பார்வை...!!

சினிமா பார்ப்பதை நான் விரும்புவதில்லை. காரணம் 2 மணி நேரம் ஒரே இடத்தில உட்கார்ந்து அந்த இழவை பார்க்கும் பொறுமை இல்லை. அதை விட முக்கிய காரணம். குடும்பம். மனைவியை தனியே விட்டு சினிமா பார்க்க விரும்பவில்லை. மனைவிக்கு சினிமா பிடிக்கும் தான். ஆனால் ஒன்றரை வயது குழந்தையை கையில் வைத்து கொண்டு படம் பார்ப்பது என்பது பக்கத்து சீட்டுகாரனின் பொறுமைக்கு வேலை வைக்கும் விஷயம் என்பதால் சினிமா பார்பதையே விட்டாகிவிட்டது. மட்டுமில்லாமல் இப்போது வெளிவரும் படங்களின் தரம் இரண்டாம் ஷோ ஆரம்பிபதற்குள் கிழித்து தொங்கவிட படுகிறது பதிவுகளில். அதை நான் வேறு பார்த்து அவஸ்தை படவேண்டுமா...!!

ஆனால் நேற்று படம் பார்க்கவேண்டிய ஒரு நிர்பந்தம். மனைவி குழந்தைகள் வீட்டில் இல்லை. சேலம் போய் அழைத்து வரவேண்டும். ஒரு இரண்டு மூன்று மணி நேரம் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவதார் ஓடிகொண்டிருந்த தியேட்டருக்குள் நுழைந்தேன்.ஒரு படைப்பு அது எழுத்தோ, நாடகமோ, இசையோ, திரைப்படமோ, எதுவாக இருந்தாலும் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் ஒரு சில மணி நேரங்களுக்காவது அதன் அழுத்தத்தில் இருந்து, பின் விடுபட நேருமானால் அது சிறந்த படைப்பு என்பது என் தனிப்பட்ட கருத்து. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு படம் பார்த்த திருப்தி.

பல மணி நேரம் அந்த படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. விமரிசனத்திற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் அதன் பிரம்மாண்டம், காட்சி படுத்திய விதம், அயல் கிரகம் குறித்த மனித சிந்தனைக்கு எவ்வளவு எட்டுமோ அத்தனையும் படத்தில் கொண்டு வந்திருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. மனிதன் அயல்கிரகத்தில் காலடி எடுத்துவைக்க இன்னும் குறைந்தது ஒரு 500 வருடங்கள் ஆவது ஆகும். கதையில் சொல்லப்பட்ட அன்டோரா கிரகம் என்பது மிக மிக தொலைவு இன்றைய விஞ்ஞான அறிவை பொறுத்த வரையில். அப்படியானால் இன்னும் 500 வருடங்கள் போன பின்னும் மனிதன் திருந்தவே மாட்டனா..? ஈராக்கின் பெட்ரோலுக்காக அமெரிக்கன் அத்து மீறி நுழைந்து ஒரு தேசத்தின் முகவரியை கிழித்து தொங்கவிட்ட குணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கிறது..இந்த படத்தின் கதை கருவும்.. கதாநாயகன் ஒரு சீனில் சொல்லும் வசனம் " உங்களுக்கு தேவை பட்டது கிடைக்கணும் என்பதற்காக அவர்கள் தங்கள் தேசத்தை இழக்கனுமா...அதை அவர்களை அழித்துதான் பெறனுமா.." வெடித்து கிளம்பும் அவனின் கோபம் அவன் ஒரு நொண்டி என்பதற்காக பரிகசிக்க படுகிறது..

நாம் எதற்காக இவ்வளவு வேகமாய் வளர்கிறோம்..ஒரு எல்லையில் துன்பமே இல்லாத ஒரு நிலையை மனித சமுதாயம் கண்டு விடும் என்ற நம்பிக்கையில் தானே...? அப்பறம் எதற்கு அடுத்தவன் பொக்கிஷம்.. அடுத்தவன் பொக்கிஷம் நமக்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனித இயல்பாக இருக்குமென்றால் மனிதன் வளரவே போவதில்லை என்று தான் அர்த்தம். வளரவே முடியாத ஒரு சீக்கு பிடித்த சமுதாயத்தில் நானும் ஒரு அங்கம் என்பதே நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது...

இந்த படத்தில் நான் விரும்பாத ஒரே விஷயம் 500 (அ) 1000 வருடங்களுக்கு பின் நடக்க போகும் ஒரு கதை களத்தில், இன்றைய மனிதர்களின் கற்பனை எல்லைக்குள் தான் எல்லாமே அடங்கி போயிருக்கிறது. கதை களம் கூட புதுமை என்று சொல்வதற்கில்லை. காட்சி படுத்திய விதம் மட்டுமே புதுமை.

சில சாம்பிள்கள்:

1 . மனித உருவத்திற்கும் செயலுக்கும் 95 சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கிறது அயல்கிரக வாசிகளின் தோற்றமும் செயலும்.

2 . விலங்குகளின் தோற்றமும் செயலும் அப்படியே.

3 . அன்டோரா வாசிகள் தங்களது கூந்தல் வழியாக பறவை, மரங்களின் மனதை அறிகிறார்கள். அது கிட்டத்தட்ட ஒரு கூடல். இரு மனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலின் வெளிப்பாடு. இது புதியது. ஆனால் கதாநாயகனும், கதாநாயகியும் ஒரு தடவை கூட இம்மாதிரி தங்களுக்குள் மனதளவில் இணைவதில்லை. இருவரின் உடல் கலப்பு ஏற்படுவதாக சொல்லப்பட்ட காட்சிக்கு முன்பாகவாவது இம்மாதிரி ஒரு சீனை வைத்திருக்கலாம். ஆனால் இக்கால மனிதர்களை போல் உதட்டை கவ்வுவது மனதை நெருடுகிறது...

4. வில், அம்பு, ஈட்டி இதை தாண்டி வேறு எதையாவது சிந்தித்திருக்கலாம். அயல்கிரவாசிகளின் ஆயுதமாக.

மற்றபடி இந்த படம் சொல்லி சென்றிருக்கும் விஷயம் இன்னும் பல வருடங்கள் அலச படப்போகும் ஆராய்ச்சிக்கான பாலபாடம். இயக்குனர் காமரூனுக்கு ஒரு ராயல் சல்யுட்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...!!!

No comments:

Post a Comment

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...