Saturday, January 30, 2010

கொம்பு முளைத்த சில பதிவர்கள்...பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் என எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு டைரிகுறிப்பின் காதலோடு. டைரி எழுத இப்பொழுதெல்லாம் யாருக்கும் நேரமோ, மனமோ இருப்பதில்லை. கணினியில் நாள் பூராவும் உட்கார்ந்து பழகி விட்டபின் படிக்கும் பழக்கம் குறைந்து போனமாதிரி எழுதும் பழக்கமும் குறைந்து கொண்டிருக்கிறது. வலைத்தளத்தில் தன் மனதில் தோன்றியதை மிக எளிமையாக இறக்கி வைக்க முடிகிறது. அவற்றுள் சில மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெறுவதும் உண்மைதான். பெரும்பாலும் குப்பைகள் தான் பதிவேற்றபடுகிறது என்றாலும் நம் எல்லோரின் மனங்களும் குப்பைகளால் நிரம்பியது தான் என்பதை யார் மறுக்க கூடும். பெரிய எழுத்தாளர்களின் எழுத்துகள் கூட முதலில் மறுதலிக்கப்பட்டு பின் எல்லோராலும் கொண்டாடப்பட்ட சம்பவங்கள் இறந்தகாலங்களில் நிறைய உண்டு.

பாராட்டுதலுக்காகவோ, அங்கீகரிபிற்கோ எல்லோரும் ஏங்கிக்கொண்டு தானிருகின்றனர். மிகசிலர் தான் பின்னூட்ட வலைகளில் சிக்கி கொள்ளாமல் பதிவிடுவதை வெறும் டைரி குறிப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். இலக்கிய சர்ச்சை என்பது தமிழிற்கு மிக மிக பழைய சமாசாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் சர்ச்சை என்பது கன்றுகுட்டிக்கு காயடிப்பது போன்றது தான். தங்களின் மேதாவி தனத்தை காட்டி கொள்ள அழையா விருந்தாளிகளாக சில பதிவர்கள் பின்னூட்டமிடுவதும், தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பதும் வேதனையளிக்கிறது. இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ள ரத்தம் குடிக்க எல்லா நரிகளும் கூடி கூத்தடிப்பதும் சகஜமாகிவிட்டது.

திறமைக்கு மதிபளிக்க இது ஒபாமா பூமியல்ல. நாமும் அமெரிக்கர்களல்ல என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் நீங்கள் கொம்பு சீவிக்கொள்ள உங்கள் முன் பதிவோடு போட்டியிடுங்கள் அல்லது குறைந்த பட்சம் உங்களைவிட பெரிய எழுத்தாளர்களோடு. மேல் மாடியில் நின்று கொண்டு எச்சிலை காறி உமிழ்வது நாகரீகமல்ல. மேல் மாடி என்பது எல்லோருக்கும் எப்போதும் சாச்வதமானதும் அல்ல.

தானாக சேர்த்த கூட்டமோ, எதை கொடுத்து சேர்த்த கூட்டமோ எழுத்தின் தரத்தை தீர்மானிப்பது பின்னூட்டங்கள் மட்டுமல்ல. ஒருபதிவர் (பெயர் தேவையில்லை) தன் படைப்பு தமிழ்மண விருதிற்கு தேர்ந்தேடுக்கபட்டது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். காரணம் தாம் அதிகம் உழைத்து பார்த்து பார்த்து செதுக்கிய தன் முந்தய படைப்புகள் எல்லாம் விருதிற்காக கூட தேர்ந்தெடுக்காமல் புறகணிக்க பட்டிருக்கையில், வெறும் நகைசுவைக்காக புனையப்பட்ட படைப்பு விருது பெறுவதில் அவருக்கே உடன்பாடு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருந்தார்.

ஒரு படைப்பின் அங்கீகாரம் என்பது கூடி நிற்போரின் கைதட்டகளில் மட்டுமல்ல. எழுதியவனின் ஆத்ம திருப்தியிலும் இருக்கிறது. உங்கள் விமர்சனம் ஒரு கைகுலுக்குதளோடு இருந்தால் மட்டுமே படைப்பவனின் ஆத்மா நிறையும். புதிய படைப்புகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறும்.

28 comments:

 1. (கடந்த சில நாட்களாக) எல்லா முக்கிய பதிவர்களின் பதிவுகளை படித்தால் , இப்படிதான் எழுத தோன்றும்.

  ReplyDelete
 2. அது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும்... நாமும் இது போன்று எழுதி நம் அங்கலாய்ப்பை இறக்கியும் வைத்துக் கொள்வோம்... பின், அவைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகியும் விடுவோம்...

  ReplyDelete
 3. கொம்பு முளைத்த சில பதிவர்கள் என்பதைவிட பல பதிவர்கள் என்பதே சரி!

  ReplyDelete
 4. ஒரு படைப்பின் அங்கீகாரம் என்பது கூடி நிற்போரின் கைதட்டல்களில் மட்டுமல்ல. எழுதியவனின் ஆத்ம திருப்தியிலும் இருக்கிறது.

  மனப்பூர்வமாய் உடன்படுகிறேன்..

  ReplyDelete
 5. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கருத்துக்கள்.

  ReplyDelete
 6. நல்லா சொல்லி இருக்கீங்க அன்பரே..! தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 7. உண்மைய சொன்னதற்கு பாராட்டுக்கள்.....

  ReplyDelete
 8. நாலு பேர் நல்லவிதமாக விமரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதும் போது தான் கெட்ட விமரிசனங்களை எதிர் கொள்ள முடியாமல் போகும். எதிர்ப்பார்ப்பு இல்லா விட்டால் ஏமாற்றங்கள் இருக்காது...

  நம் படைப்புகளை அவர்கள் விமரிசித்து கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பதினால் தான் அவர்களுக்கு கொம்பே முளைக்கிறது என்பதை நினைவிலிறுத்துங்கள்... :-)

  ReplyDelete
 9. நல்ல அலசல்..

  தலைக்கணம் தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்கிறோம்... நன்றி...

  ReplyDelete
 10. தளத்தின் வடிவமைப்பு, எழுத்துரு, குறிப்பாக சொல்ல வந்த நோக்கத்தின் சுருக்கம் அத்தனையும் சிறப்பாக இருந்தது. அத்துடன் தேர்ந்தெடுத்த படங்கள் வணிக ரீதியாக உள்ள பத்திரிக்கைக்கு இணையாக சிறப்பாக இருந்தது. உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. காரணம் பின்னூட்டம் தந்த அத்தனை பேர்களும் உங்களுக்கு, ஆக்கத்திற்கு சிறப்பான மரியாதை தந்துள்ளார்கள்.

  மீறி வரும்.
  மிதந்து வரும்.
  ஒதுங்கி விடும்.

  ReplyDelete
 11. நன்றி சர்புதீன்
  நன்றி சாந்தி லட்சுமணன்
  நன்றி பழமைபேசி

  "கண்டுகொள்ளாமல் இருக்க பழகியும் விடுவோம்"

  உண்மை தான். ஓயாமல் கொட்டிகொண்டே இருந்தால் நாம் தான் ஒரு இடத்தில தேங்கிபோயவிடுவோம். காலம் யாருக்காகவும் காத்திருக்க போவதில்லை.

  ReplyDelete
 12. நன்றி மாயாவி

  \\கொம்பு முளைத்த சில பதிவர்கள் என்பதைவிட பல பதிவர்கள் என்பதே சரி//
  சில பதிவர்கள் என பதிவிட்டது அந்த பல பதிவர்கள் காயம்படகூடாது என்பதால்தான்.

  நன்றி ரிஷபன்
  நன்றி துபாய் ராஜா
  நன்றி சுப.நற்குணன்

  ReplyDelete
 13. நன்றி அண்ணாமலையான்
  நன்றி மாயன்
  நன்றி சாமகோடங்கி

  நன்றி ஜோதிஜி
  \\ மீறி வரும்.
  மிதந்து வரும்.
  ஒதுங்கி விடும்.\\

  மிக நன்று மிக நன்று

  ReplyDelete
 14. நண்பரே! நல்ல வேளை, இந்தக் கொம்புகள் நமக்கு முளைக்கவில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டு, உங்களது தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நமது வலைப்பதிவு நமது எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும் என்கிற பொன்விதியை மட்டும் தொடர்ந்து பின்பற்றுங்கள்! யார் எதை அதிகம் வாசிக்கிறார்கள் என்று ஆய்வு செய்து, அவர்களைக் கவர எழுதுகிற பதிவர்கள் செய்வது குறித்துக் கவலையின்றி, உங்களது உள்ளத்திலிருந்து உண்மையாய் கிளம்புகிற பீறிடல்களை மாத்திரம் எழுதுங்கள்! ஆதங்கத்தை வெளிப்படுத்த, நாகரீகமாக எழுதுகிற துணிவு உள்ளவர் நீங்கள் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சான்று. தொடரட்டும் உங்கள் பணி. நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. எழுதுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறது. அதை மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவைத் தந்தால் அது நம்மைப் பொறுத்தவரை நல்ல பதிவு.

  பின்னூட்ட எண்ணிக்கைகளுக்கும் நல்ல பதிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை.

  அந்தப் பின்னூட்டங்கள் வாசகருக்கும் பதிவிட்டவருக்கும் உள்ள நட்பை வளர்க்கும் கருவி.

  ReplyDelete
 16. நல்ல பதிவு, நல்ல பின்னூட்டங்கள். :))

  வாழ்த்துக்கள்.:)

  ReplyDelete
 17. //தங்களின் மேதாவி தனத்தை காட்டி கொள்ள அழையா விருந்தாளிகளாக சில பதிவர்கள் பின்னூட்டமிடுவதும், தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பதும் வேதனையளிக்கிறது//

  இது எனக்கு புரியவில்லை.

  அழையா விருந்தாளிகள் என்றால்..?

  பின்னூட்டமிடுவர்கள் அழைக்கப்பட்டவராக மட்டும்தான் இருக்க்வேண்டுமா? இது என்ன திருமண நிகழ்வா அழைப்பிதழ் கொடுப்பதற்கு? பின்னர் வந்தவர்கள் வாழ்த்த மட்டும்தான் செய்வார்கள் இல்லையா? அதுதானே அழைப்பிதழ்கள் கொடுப்பவரின் நோக்கம்?

  பதிவர் அழைக்கப்பட்டு இடப்படும் பின்னூட்டங்கள் இடுகையைப் புகழமட்டும்தான் செய்யும். இடுகையில் குறையிருப்பின் எவரே சொல்ல்வியலும்.

  அழையாமல் வந்து இடும் பின்னூட்டக்காரர்கள் தனக்கு என்ன படுகிறதோ அதைத்தானே சொல்லுவர்? இட்டவருக்கு அது பிடிக்கவில்லையென்றால், அது மேதாவித்தனமா?

  பதிவுகளையும், ஏன் பதிவர்களையும் விமர்சிப்பது உங்களுக்கு ஏன் வேதன தருகிறது?

  பதிவர்கள் அனவரும் புனிதர்களா? அவர்கள் எத்தனைபேர் சாதி, மதப் பிணக்குகளைக் குறிவைத்து எழுதுகின்றனர்? இப்படிப்பட்ட பதிவர்களை விமர்சனம் பண்ணக்கூடாது என்பது உங்கள் வாதமா?

  எதற்கும் எல்லையுண்டு. அப்படியென்றால், பின்னூட்டமிடுபவர் காழ்ப்புணர்ச்சியில் இட்டாலே, காரணமின்றி தரைக்குறைவாக எழுதினாலோதான், உங்கள் கருத்து சரி. மற்றபடி ஒரே மட்டையில் எல்லாவற்றையும் ஒரே சாயம் இடுவது பதிவர்களின், பதிவுகளின் அயோக்கியத்தனத்துக்கு வெண்சாமரம் வீசுவதாகும்.

  ReplyDelete
 18. //நீங்கள் கொம்பு சீவிக்கொள்ள உங்கள் முன் பதிவோடு போட்டியிடுங்கள் அல்லது குறைந்த பட்சம் உங்களைவிட பெரிய எழுத்தாளர்களோடு. மேல் மாடியில் நின்று கொண்டு எச்சிலை காறி உமிழ்வது நாகரீகமல்ல. மேல் மாடி என்பது எல்லோருக்கும் எப்போதும் சாச்வதமானதும் அல்ல.//

  இது எனக்கு சரியாகப் புரியவில்லை.

  இணையம் ஒரு பொதுவிடம். அறிவாளிக்கு மட்டும். பெரிய எழுத்தாளருக்கு மட்டும். என்றெல்லாம் கிடையா.

  உங்கள் இடுகையின் தொடக்கத்தில் ஏறக்குறைய இதைச்சுட்டிக்காட்டி விட்டு, இடையிலே, இவருக்குத்தான், அவருக்குத்தான் என்று முள்வேலியிடுகிறீர்கள்.

  மேல்மாடி, கீழ்மாடி என்று இணைய்த்தில் இல்லை. அஃது உங்கள் கற்பனை.

  சமதளமே. இது ஒரு Hyde park. நாமெல்லாரும் soap box oratorsதான்.

  இப்படி நினைவில் கொண்டு சுதந்திரமே இணையதளத்தில் அடிப்படைக்கொள்கை. அதைக் காப்போம்.

  அழையா விருந்தாளிகள் போல் என்பது அச்சுதந்திரத்தைக் கோடாளியில் வெட்டுவதாகும்.

  ReplyDelete
 19. // அந்தப் பின்னூட்டங்கள் வாசகருக்கும் பதிவிட்டவருக்கும் உள்ள நட்பை வளர்க்கும் கருவி.//

  துளசி கோபால்,

  நட்பை வளர்க்கும் கருவியாக உங்கள் பதிவை பயன்படுத்த விரும்பினால், அதை உங்கள் பதிவின் முகப்பிலேயே போட்டுவிடவேண்டும்.

  ஏனெனில், உங்கள் பதிவு ஒரு பொது விடயம் - எ.டு. இட ஒதுக்கீட்டுக் கொள்கை - போன்றவற்றை எடுத்துப்பேசும்போது, அங்கு உங்கள் கருத்துக்கு எதிர்கருத்துகள் ஏராளம் வரும். சிலர் உணர்ச்சி வசப்பட்டே எழுதுவர். அவர்களெல்லாம். உங்கள் முகப்பு எச்சரிக்கை கண்டு ஓடிவிடுவர்.

  உங்கள் நணபர்கள் அங்கு வந்து பின்னூட்டம் இட்டு உங்களைக் குதூகலப்படுத்த உங்கள் நட்பு வட்டம் நிலைத்து உங்கள் பதிவின் நோக்கம் நிறையும்.

  ReplyDelete
 20. இடுகையில் குறையிருப்பின் அதை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். அது இடுகையின் தவறாக கொல்லப்பட வேண்டுமேயொழிய படைப்பாளியின் தவறாக கொண்டு அருவருக்கத்தக்க விமர்சனங்களை பின்னூட்டமிடுவது, தங்கள் வலைதளங்களில் விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை நண்பரே.

  வலைதளங்களில் படிப்பதற்கு சுதந்திரம் உண்டே தவிர, படைப்பவனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தேவையில்லை என்பது என் கருத்து. விமர்சித்தால் அழையா விருந்தாளிகள் என்று தான் அழைக்கமுடியும். மற்றபடி கூட்டம் சேர்த்து கொண்டு பின்னூட்டங்கள் பெருவதிலேல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

  உணர்ச்சிவயப்பட்டு தான் உங்கள் விமர்சனம் அமையும் என்று ஒப்புகொண்டதிற்கு நன்றி. என் வேண்டுகோளும் அது தான். உணர்ச்சிவயப்பட்டு விமர்சனம் எழுதும் முன் ஒரு நிமிடம் உங்கள் விமர்சனம் அடுத்தவரை காயபடுதாதவாறு பார்த்துகொள்ளுங்கள் என்பது தான்.

  நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தை பதிவில் இட்டதற்கு காரணம் எல்லா பதிவர்களும் உங்கள் கருத்தை உணர வேண்டும் என்பதற்கு தான். மற்றபடி விளம்பரத்திற்கு அல்ல.

  ReplyDelete
 21. /எழுதுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறது. அதை மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவைத் தந்தால் அது நம்மைப் பொறுத்தவரை நல்ல பதிவு./
  எனக்கும் இபபடித்தான் தோன்றுகிறது!

  ReplyDelete
 22. ஆகா! இப்ப உங்களையும் ரவுடியாக்கிட்டாங்களா?!

  ReplyDelete
 23. இதெல்லாம் அரசியல்ல சாதரனமப்ப்பா...

  ReplyDelete
 24. நீங்கள் சொன்னது உண்மைதான். அதோடு எங்களைப்போன்ற புலம்பெயர்ந்து (அதாங்க வெளிநாட்டில் வாழ்கின்ற, வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஜென்மங்கள்) வாழ்கின்றவர்களின் பதிவுகளையும் பாருங்கள் இந்திய மக்களே. தணிக்கை இல்லாமல் (பயப்படாதீங்க சென்சாரதான் தணிக்கையின்னு எழுதிப்புட்டேன்) இலங்கை நிலவரத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் அல்லவா...

  ReplyDelete
 25. உங்கள் உணர்ச்சியின் வெளிப்பாடே எனது பதிவு. ஆனால் இங்கு எதையும் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை.
  வெற்றி பெற மாற்று உபாயம் தான் தேட வேண்டும்.

  ReplyDelete
 26. //மீண்டும் வாசித்துப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவைத் தந்தால் அது நம்மைப் பொறுத்தவரை நல்ல பதிவு.//

  இதுதான் உண்மை.
  ஆனாலும் பின்னூட்ட மாயையை யாரை விட்டது?
  எல்லாம் குரூப்பிஸம்.அது அவரவர் இஷ்டம்.
  பொதுவில் வந்துட்டா விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.
  வேண்டாம்னு நினைச்சா கமெண்ட் ஆப்ஷனே வைக்கக் கூடாது.
  மத்தவங்களுக்கு கொம்பு முளைக்குதுன்னு பாக்காதீங்க.
  முடிஞ்சா நாமளும் வளர்த்திக்குவோம்.

  ReplyDelete
 27. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான பதிவு...

  வாழ்துக்கள்

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails