Friday, January 8, 2010

வாழ்ந்து பழகு. இல்லையா போய் சாவு.!

சில விஷயங்களை எவ்வளவு பேசினாலும் ஊசி முனையளவு கூட மாற்றம் பெற்று விட போவதில்லை. அதுவே ஒரு சிலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாக இருந்து விட்டால் அந்த கடவுளே வந்து கைவிட சொன்னாலும் எதை கொடுத்து கடவுளை சரிகட்ட முடியும் என்று தான் பார்ப்பார்கள். நம்ம கடவுள்களும் கோபுரத்தின் சைஸை பொறுத்து உண்டியல்களை வைத்து கொண்டிருப்பது இவர்களுக்கு சௌகர்யமாகிவிட்டது.

அரசியல், சினிமா, சீட்டு கம்பனி, விபசாரம், அப்பறம் காவல் துறை (இன்றய தேதியில் பணம் கொழிக்கும் துறைகளில் முக்கியமானது) இந்த பதிவு முழுவதையுமே பட்டியலிட்டாலும் தீராது...சரி விஷயத்துக்கு வருவோம்.. நேற்று யதேச்சையாக கடைதெரு பக்கம் போனேன் மனைவியோடு தான். (ஷாப்பிங்காம்..)

ஒரு துணிக்கடையில் குழந்தைக்கு டிரஸ் வாங்கலாமென்று உள்ளே நுழைந்தோம். வழக்கம் போல் துணைவி துணியை பார்க்க...நம் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. அப்போதுதான் இந்த பதிவின் கதாநாயகியை கண்கள் கண்டது... அவளுக்கு வயதொன்னவோ பத்திற்குள் தான் இருக்கும். பிறந்த நாளுக்கு துணி எடுக்க வந்திருப்பார்கள் போலிருக்கிறது அம்மாவும் மகளும். கூடவே மகளின் தோழிகளாக இருவர்..(ஒரே ப்ளாட்டாக இருக்கலாம்)

விஷயம் இது தான். நாங்கள் உள் நுழைவதற்கு 1 மணி நேரம் முன்பிருந்தே அவர்கள் துணியை தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. அந்த குழந்தையோ அந்த துணி தான் வேண்டுமென்று ஒரே அடம். என்னவென்று காதை அங்கே கொடுத்தப்ப தான் தெரிந்தது விஷயம். அந்த குழந்தைக்கு, அதாவது 10 வயது பெண் குழந்தைக்கு ஆதவன் படத்தில் நயன்தார அணிந்துவரும் ஒரு மிடி வேண்டுமாம். (மிடியோ, ப்ராக்கோ) கடைக்காரரும், அந்த அம்மாவும் என்ன சொல்லியும் கேட்கவில்லை. வேறு எதை கொடுத்தும் டபாய்க்க முடியவில்லை...

இதனால் அறியபடுவது யாதெனில் என்றெல்லாம் எழுதினால் அடிக்க வந்துவிடுவீர்கள் என்று தெரியும். கொஞ்சம் காரசாரமாக பேசுவோமா..

சினிமாவில் தலைவிரித்து ஆடும் ஆபாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆடையின் அளவு குறைய குறைய வக்கிர எண்ணங்கள் இளைஞர்கள் முதல் பெரிசுகள் வரை அரிக்க ஆரம்பித்துவிட்டது. 3 வயது 4 வயது குழந்தைகளிடம் கூட இவர்களின் பாலியல் வக்கிரங்களை தீர்த்து கொள்ள நேர்கிறது..நாளுக்கு நாள் மனிதம் செத்து போய் மிருகம் வாழவும் வளரவும் ஆரம்பித்து விட்டது...

என்ன செய்து கொண்டிருக்கின்றன இந்த மாதர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் எல்லாம். வரதட்சணை கொடுமையா வரிந்து கட்டிக்கொண்டு கணவனையும், மாமியாரையும் கைது செய்ய போர்க்கொடி உயர்த்துவார்கள். தங்களின் சௌகர்யத்துக்காக ஆடம்பர வாழ்க்கைகாக உடம்பை வெள்ளிச்சமிட்டு காட்டும் நடிகைகளும் தாங்கள் ஒரு பெண் என்பதை நினைத்து பார்ப்பதில்லை.

ஆடம்பர பங்களா, கார், ஏவிய வேலைக்கு வேலையாள், பச்சை நோட்டு கட்டுகள் நிரம்பிய பெட்டியின் முன் சமூக கோட்பாடுகள் காற்றில் பறந்து விடுகின்றன..இவர்கள் எல்லோருக்கும் தங்கள் பங்கை நியாயபடுத்த ஒரு நல்ல வாசகம் வேறு கிடைத்துவிட்டது..."கலையை கலையாக பார்க்காமல் காம கண்ணோட்டத்தோடு பார்கிறவர்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்பது" கலைக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் மட்டுமே நிரம்பிய சமுதாயம் அல்ல இது என்பது நிதர்சனம். வித்தியாசம் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில் மிகவும் குறைவு என்பது தான் நிஜமும் கூட.

பெருகி வரும் வன்முறை காட்சிகளால் தான் பள்ளியில் படிக்கும் சிரார்கள் கூட பழிவாங்கும் உணர்வோடு வளர்கிறார்கள்.. ஒரு துறையின் வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தின் வீழ்ச்சியாக மாறிவிட கூடாது. வெற்றி பெரும் குதிரை மீது தான் எல்லோரும் பணம் கட்டுகிறார்கள் என்பதும், ஓடுகிற படத்தை தான் எடுக்க முடியும் என்பதும் சுயநல வாதம். ஆபாசம் + அததீத கவர்ச்சி + ரத்தம் சொட்டும் வீச்சரிவாள் தான் வெற்றிக்கான பார்முலாவாக இருக்கிறது.. நல்ல கதையம்த்தோடு எப்போதாவது தான் படங்கள் வருகிறது...அப்போது அதையெல்லாம் Trend Set - ஆக ஆக்கமுடியாதவர்கள் அல்லது அத்தகைய திறமையை வளர்த்துக்கொள்ள திராணி இல்லாதவர்கள் தான் மிக எளிதாக யாராலும் காப்பி அடிக்க முடிகிற மசாலா படங்களுக்கு Trend Set படம் என்று சொல்லி வன்முறையையும், காமத்தையும் மாங்கு மாங்கு என்று எடுக்கிறார்கள்.

சினிமாவால் ஆட்சியே மாறிய கதை தமிழர்கள் நன்கு அறிவார்கள். எனவே தான் சொல்கிறேன் சினிமா என்பது மிக பெரிய ஊடகம்.. மக்களை எளிதில் ஈர்க்ககூடிய, உணர்வேற்ற கூடிய சக்தி வாய்ந்த சினிமா என்பது. இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி. உங்களின் கல்லா பெட்டியை மட்டும் நிரப்பிக்கொள்ளும் நோக்கத்தோடு படமெடுக்காதிர்கள். இங்கு தான் நீங்களும் வாழ்கிறீர்கள். உங்கள் சந்ததியும் இங்கு தான் வாழ போகிறது..

"அட போடா...இவரு பெரிய புடுங்கி...காசை பார்க்கிற வரைக்கும் தான் எல்லா தத்துவமும்...." "மரத்தை நடுங்க, மரத்தை நடுங்க" ன்னு தான் கவர்மெண்டு சொல்லுது..இப்ப செம்மொழி மாநாட்டுக்காக திருச்சி ரோட்ல இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டி ரோடு பெரிசு பண்ணலுயா... அது மாதிரி தான் இதுவும். இங்க எதுவும் மாறாது.. எல்லாம் இப்படிதான் இருக்கும்.. சகிச்சிக்கிட்டு வாழ்ந்து பழகு. இல்லையா போய் சாவு.!

மேல இருக்கிற பேரா என் மனசாட்சி சொன்னது...இந்த பதிவை எழுதும் போது எனக்குள் எழுந்த ஆவேசம் அடங்கி போய்விட்டது.. காலம் காலமாக நம்மால் இதை தானே செய்ய முடிகிறது...

இந்த பதிவுக்கு என்ன படம் போடலாம் என்று யோசித்தேன்...நல்ல மாடர்ன் ஆர்ட் ஓன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது..ரத்தத்தின் பினனனியில்..ஆடை குறைந்த பெண்ணின் நிழலுருவம்..வீச்சரிவாள் ஓரத்தில்..

"போடா மயிறு..நயன் படம் போடாமே..." நல்ல வாயில வருது..

மீண்டும் என் மனசாட்சி தான்...

நான் என்ன செய்ய....நான் இப்ப என்ன செய்ய..(உருண்டை விழிகள் மிரட்ட மாதவன் தம்பி படத்தில் கத்துவாரே..)

Wednesday, January 6, 2010

செவிசாய்க்க யாருமில்லை....

சில்க்கு சட்டை, மைனர் செயின்,
டை கட்டிய வெள்ளை சட்டை,
பட்டைபோட்ட காவி வேட்டி,
எல்லாம் நகர்கிறது...வேகவேகமாய்

சிவப்புக்கு நிதானித்து
வேகமாய் நகரும் வாகனங்கள்

உயிர் வலிக்க
மன்றாடிவிட்டேன்..
செவிசாய்க்க யாருமில்லை....
பசிக்கிறது
சோறு கிடைக்குமா....

Saturday, January 2, 2010

அடபாவிகளா..அப்பட்டமான காப்பி

தமிழகத்தின் பிரதான சேனலுக்கு கொஞ்ச நாளாக கற்பனை வறட்சி ஏற்பட்டுவிட்டது போல்
தெரிகிறது...ஒரு காலத்தில் முன்னோடியாக இருந்தவர்கள் இன்று எதைவேண்டுமானாலும்
காப்பி அடிக்க தாயரகிவிட்டார்கள் போல் தெரிகிறது.

டீலா நோ டீலா - அவர்களின் அப்பட்டமான காப்பி என்று நேற்று தான் தெரிந்தது. நேற்று இரவு ஸ்டார் மூவிஸில் (Meet the Spartans ) படம் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு காட்சி தான் டீலா நோ டீலா.

அப்பட்டமாக font முதல் அந்த பெண்கள், அவர்களின் உடை, அதே பெட்டி, அதே நிற backround இவ்வளவு வறட்சியாக போய்விட்டது தமிழனின் கற்பனை திறன். காப்பி அடித்தீர்கள் சரி அந்த Font லெட்டர் முதல் அப்படியேவா....!! வியாபார தந்திரம் நிறைந்த சன் டிவிக்கு இது ஒரு பெரிய இழுக்கு தான். அது சரி யானைக்கும் அடி சறுக்கும்..

எழுத்தாளன் கோடிஸ்வரனாக முடியுமா...

சாருவின் வலைதளத்தில் அவரது புத்தகத்திற்கு அவரே விளம்பரம் தருகிறார். விலையோ ரூ.௦௦1000 நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க ஆகும் செலவு தான். அருமையான இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயன் பெற வேண்டுமென்று.

ஒரு எழுத்தாளராக, தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளராக அறியப்பட்ட சாரு நிவேதிதாவின் நிலையே இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது...

50 வருட பாரம்பரியம் கொண்ட வார இதழ்களே இன்று நடிகைகளின் கலர் போடோக்களை நம்பி தான் ஓடிகொண்டிருக்கிறது..6 லட்சமோ, 3 லட்சமோ பிரதிகளை முடிவு செய்வது முன் பக்க நடிகையின் உடையளவு தான். (சில நடுப்பக்க பத்திரிக்கைகளும் உண்டு)

தமிழனின் ரசனையை என்னவென்று சொல்வது...

பெரியார், காமராசர் பற்றிய படங்கள் வந்தவுடன் பெவிலியன் திரும்புகின்றன..காமராசர் படம்
ஓடிய தியேட்டரில் என்னுடன் சேர்த்து ஒரு 100 பேர் தான் இருந்தனர்.. ஆனால் அருந்ததி புகழ் அனுஷ்காவின் தெலுங்கு படம் (டப் செய்யபடமாலேய..) கூட்டம் அலை மோத ஓடுகிறது..

தமிழனுக்கு காசு முக்கியமில்லை கவர்ச்சி தான்..

தமிழ் எழுத்தாளன் காசு பார்க்க ஒன்று தான் வழி...

மேல்மட்டதிலிருப்பவர்களை பற்றிய வண்டவாளங்களை கிசுகிசு எழுத வேண்டும். நடிகைகளின் அந்தரங்ககளை பட்டியலிடவேண்டும்... குறைந்த பட்சம் தரமான உங்கள்
படைப்புக்கு ரஜினியோ கமலோ முன்னுரை வழங்க வேண்டும்...அதை டபுள் டம்மி போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுக்க ஓட்டினால் உங்கள் புத்தகம் குறைந்தது ஒரு 25000 விற்பதற்கு வாய்ப்புண்டு....

மற்றபடி எழுதி கோடிஸ்வரனவது என்பது....குதிரைகொம்பு தான்.

விஜய் அன்டனி சரித்திர சாதனை...!

நேற்று தமிழ் சானலில் வேட்டைக்காரன் படம் பற்றி விஜய் மற்றும் நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் பேட்டி இடம் பெற்று இருந்தது.

விஜய் அன்டனியிடம் கேட்கப்பட்ட கேள்வி
"நான் அடிச்ச தாங்கமாட்டே..." பாடல் உருவாகிய விதம் குறித்து...?

பாடல் கம்போசிங்கிற்க்கு உட்காரும் போதே வித்யாசமாக எதாவது செய்ய நினைத்தோம்..
அதனால் ந.முத்துகுமாரிடம் பாடல் எழுதி தருமாறு சொல்லிவிட்டு பாடல் வரிகள் வந்தபின்
அதற்கு மெட்டு அமைத்தோம். எங்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல பலன்
கிடைத்தது.

தமிழ் கூறும் நல்லுலகமே உனக்கே வெளிச்சம்...பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து
இது வரை யாருமே செய்யாத சரித்திர சாதனை செய்த விஜய் அண்டனியின் முயற்சியை
வாழ்த்துவோம்....

Friday, January 1, 2010

இனி கடவுளென்று ஒன்றுமில்லை...!!

ஆலமரதடியே பெரும் கூட்டம். சாரி சாரியாக வந்த வண்ணம் இருந்தன எறும்புகள். வரும் போதே ஒன்றோடு ஒன்று எதையோ முனுமுனுத்தபடி வந்து கொண்டிருந்தன. கூட்டத்திடையே தங்களின் நீண்ட கால நண்பனை சந்தித்த மகிழ்ச்சியில் தனி தனியாக கூடத்திலிருந்து விலகி சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன... நல விசாரிப்புகள்... குடும்ப அறிமுகங்கள் ஒரு பக்கம்.

குட்டி எறும்புகள் சில வரிசையிலிருந்து விலகி செல்ல, வயதானவர்கள் அவர்களை பிடித்து தங்களின் குல பழக்கத்தை கை விடகூடாது என்று பாடம் எடுத்தார்கள். வரிசை போய்க்கொண்டே இருந்தது..

கூட்டத்திடையே சில எறும்புகள் பேசிகொண்டிருந்தன...கடவுளின் கோபம் பற்றி...இந்த கூட்டம் எதற்காக கூட்டபட்டிருக்கும் என்பதை பற்றி...
நான்கு திசைகளில் இருந்தும் கூட்டம் வந்தவாறு இருந்தது..



தலை பெருத்து, நீண்ட உடலுடன் அசைந்து வந்த தலைமை எறும்பை பார்க்க பயங்கரமாக இருந்தது...சில குட்டி எறும்புகள் பயத்தில் அங்கும் இங்கும் அல்லடி கொண்டிருந்தன..

நாலா புறமும் நோக்கியபின் மெல்ல பேச ஆரம்பித்தது தலைமை எறும்பு. இன்று ஒரு முக்கியமான நாள். பல்லாயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் நம் இனத்தவரில் யாரும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியதில்லை. மிக மிக அவசர அவசியமான கூட்டம் இது.
நாம் இதுவரை கடவுளாக நினைத்திருந்த, நம்மை விட நூறு முதல் இரநூறு மடங்கு பெரிதான ஒரு ஜந்து கடவுள் இல்லையென்று உறுதியாக தமது நீண்ட கால தபஸின் பயனால் தாம் அறிந்ததாக தலைமை குரு தெரிவித்திருக்கிறார்..

ஆஆஆ....அபசாரம். கடவுளை மறுத்து பேசுவது.., தவறு..அப்படி இருக்க முடியாது...எறும்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கூச்சலிட ஆரம்பித்தது...



பின்னக்காலை உந்தி நேராக எழுந்த தலைமை எறும்பு அமைதியா இருக்கும்படி கர்ஜித்தது..

முட்டாள்களே...யோசித்து பாருங்கள்...

காடு, மரம், நதி, விளைச்சல் எல்லாம் அவனால் தோன்றி அவனாலேயே அளிக்கபடுகிறது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் இன்று என்ன ஆயிற்று...எல்லாம் அவனாலேய அழிக்கபடுகிறது. நம்மை விட வேகமாக அவைகள் பெருகி கொண்டிருக்கின்றன. அதனாலேய நம் வளங்கள் எல்லாம் அழிக்கபடுகிறது. அவைகளின் பேராசையால் நம் இனமே அழிந்து விடும் போல் தெரிகிறது. ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி சென்ற பல வித்தியாசமான உயிரினகள் நம் இளைய தலைமுறை பார்த்தது கிடையாது...

எல்லாம் யாரால்...

"கடவுளை முழுவதுமாக அளந்தவர் யாருமில்லை. யாரவது முயற்சித்தால் ராட்சசன் கைகள் அழித்திடும் நம்மை, அவன் எல்லை இல்லாதவன்" - இப்படி சொல்லி நம் முன்னோர்கள் ஏமாற்றி விட்டார்கள். அந்த ஜந்துவிற்கு மேலெல்லாம் உணர்வுகள் உண்டாம். உணவிருக்கும் இடத்தை நாம் காற்றின் உதவி கொண்டு வாசனையால் அறிவது போல. அதனால் நாம் மேலே ஏறும் பொழுது அவைகள் நம்மை கொன்று விட முயற்சிகின்றன..வேறு எந்த தனிப்பட்ட சக்தியும் அதற்கில்லை.

எறும்புகள் ஒன்றையொன்று நோக்கி திரு திருவென முழித்தன.

அவரகளால் நம்பமுடியவில்லை. நம்பமலூம் இருக்கமுடியவில்லை. இதுவரை சொல்லபட்டு, உண்மையென்ரு நம்ப்பட்டு வந்தவிஷயங்கள் பொய்யென்று ஆனபின் ஒரு மிக பெரிய ஏமாற்றுதலுக்கு தாங்கள் உள்ளனதாக அவைகள் நம்பின.

சொல்வது நமது தலைவரல்லவா...இது பொய்யாக இருக்காது. இனி நமக்கென்று யாருமில்லை. எல்லோர் மனதிலும் பயம் சூழ்ந்தது. ஒரு வெறுமையை உணர்ந்த்தன. உலகமே இருண்டு போய் விட்ட்தாய் பதற தொடங்கின.

காற்றில் சருகுகளாய் கலையதொடங்கின.

காலையில் கண் விழித்ததும் சிதறி கிடக்கும் நம் உணவு நமக்காக இறைவன் படைத்த்தல்ல. அவை அந்த ஜந்துகள் உண்டது போக மிச்சம். அதன் வாயிலிருந்தும் கையிலிருந்தும் தெறித்து விழுந்தவை. கணீரென்ற தலைவனின் குரல் கேட்டு நின்று திரும்பின...எரும்புகளின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவைகளின் கைபட்டும், காலடியிலும் சிக்கி தான் நம் முன்னோர்கள் பலர் உயிரை இழந்திருகின்றனர். கடவுளின் கோபம் என்றும் சாபம் என்றும் பல தலைமுறைகாளக ஏமாற்றபட்டிருக்கிறோம். நம் கூடுகள் தீடிர் தீடிரென்று அழிக்கப்பட்டது அவைகளின் சுயநலத்திற்காக. ஆனால் நாமோ அழிக்கவே முடியாத கூடுகள் கடவுளால் நமக்காக உருவாக்கபடுகிறது என்று ஏமாந்துவிட்டிருக்கிறோம்.

நீண்ட தவத்திலிருந்த குரு நிஷ்ட கலைந்து, தான் கண்டதை அக்னி குழம்புகளாய் கக்கி கொண்டிருந்தார். நிதர்ஷ்ன்ங்களை தாங்கி கொள்ளமுடியாமல் போதும் போதும் என்று குமுறின. இனி யார் நம்மை காப்பார்...இந்த உலகில் கடவுளே இல்லையா...கடவுள் உண்டென்றால் அது எங்கிருக்கிறது..?

கரடுமுரடான பாறை இடுக்குகளிலிருந்தும், சூரிய ஒளியே தெரியாத காடுகளிலிருந்தும் நம்மை காத்தது கடவுள் இல்லை. அந்த ஜந்துகளின் சூழ்ச்சிக்கு நாம் இறையாகி விட்டோம்...

கண்களை துடைத்துக்கொண்டு மெதுவாக கேட்டன...

இனி நாம் செய்ய வேண்டியது என்ன...

கண்ணை மூடிய மூத்த எரும்பு...நீண்ட மொளணத்திற்க்கு பின், உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது...அந்த ஜந்துகள் பெருகிவிட்டன..இந்த பூமியே அவைகளின் கட்டுக்குள் போய்விட்டது போல் தெரிகிறது. நாம் நாமாக வாழ்வோம். அதை தவிர நம்மால் செய்வதற்க்கு ஒன்றுமில்லை... இனி கடவுளென்று ஒன்றுமில்லை. அப்படியே கடவுள் என்று ஒன்று இருந்தால் அவன் நம் வடிவில் வரட்டும்.. நம் மொழியில் பேசட்டும்..

யுக யுகமாக, காலம் காலமாக நமப்பட்டு வந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து போனபின் ஏற்படும் வெறுமை ரொம்ப கொடுமை...செத்த பிணங்களாய் எரும்புகள் நகர்ந்தன..

காலம் எப்போதும் போல் வேகமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது....

அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

தமிழ் இலக்கியவதிகள் சில பேருக்குள் கருத்து மோதல்கள், சர்ச்சைகள் கொடி கட்டி பறக்கிறது என்பது தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் இணையதள பதிவுகளை படித்தாலே தெரிந்து விடும்.

யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை. அவரவர்கென்று எப்போதும் சுய மதிப்பீடுகள் இருக்கும். தான் தான் சரி என்று ஆரம்பிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம்.

பர்தா விஷயத்தில் இருந்து மனுஷ்ய புத்திரன் ஜெயமோகன் விவகாரம் வரை ஒரு நிமிடத்தில் சரி செய்து விடக்கூடிய விஷயம் தான். ஆனால் தொடர்ந்து வளர்ந்து வரும் சர்ச்சைகள், பிரச்சனைகளை மறுத்து தங்களை முன்னிறுத்தி கொள்ள மேற்கொள்பவை.

ஏதாவது ஒரு நிமிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன நமது கண்ணோட்டத்திலும், செயல்களிலும். விலகி போனவர்கள் திரும்பி வரக்கூடும். திரும்பி வரும்பொழுது...காயங்களுக்கு மருந்திடலாம். அசிங்ககளுக்கு என்ன மருந்திட முடியும்....

சாருவின் ஆன்மிக பக்கங்கள் மிக பெரிய ஆச்சர்யம்... சாருவை நேரிடையாக எனக்கு பரிச்சயமில்லை. ஆனால் அவரின் எழுத்துக்களின் நிதர்சனம் கண்டு பல சமயம் ஆச்சர்யபட்டிருகிறேன்...இப்படி கூட பட்டவர்த்தனமாக எழுத முடியுமா என்று. நித்யாவின் தரிசனத்திற்கு பிறகு அவருள் சில ஆச்சர்யமான மாற்றங்களை உணர முடிகிறது. அவை அவரின் எழுத்துகளிலும் பிரதிபலிக்கலாம்...

Thursday, December 31, 2009

இன்று ஒரு பொய் கண்ணில் படவில்லை. .

எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

வழக்கம் போல இன்னுமொரு புத்தாண்டு பிறந்து விட்டது. கலாச்சார சீரழிவு என்று கூச்சல் ஒரு பக்கம் இருந்தாலும் வழக்கம் போல் எல்லாமே நடந்தேறி விட்டது. வாழ்த்துகளை பெற்றும் கொடுத்தும் பழக்கபட்டாகி விட்டது. நான் யாருக்கும் வாழ்த்துகளை சொல்ல வில்லை என்ற மன உருத்தல்களிளிருந்து தப்பியாயிற்று.

வாழ்த்துகளை வெறுமே வாழ்த்தும் வார்த்தைகளாக எடுத்துகொண்டு நன்றி சொல்லி
விலகி கொள்ளவேண்டியது தான். பதிலுக்கு வாழ்த்து சொன்னாலும் சரிதான். வாழ்த்து சொன்னவன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் வருடத்தின் முதல் நாளே சோர்ந்து போய் உட்கார்ந்து விட நேரிடும்.

நான் பெற்ற முதல் வாழ்த்திலிருந்து போன நிமிடம் வந்த வாழ்த்து வரை வெறும் சொற்கோர்வையகதான் இருந்தது... தினசரிகளில் அரசியல் தலைவர்களின்
வாழ்த்துக்கள் எதுவும் காணோம்...சந்தோசமாக இருக்கிறது. இன்று ஒரு பொய் கண்ணில் படவில்லை.

Wednesday, December 30, 2009

மரணம் குறித்து..

ஏனோ மரணம் குறித்து ஒரு கவிதை எழுத தோன்றியது...பொதுவாக கவிதை படிப்பது எழுதுவது என்பது என்னை பொறுத்தவரை முடிந்து போன சமாச்சாரமாகவே இருந்தது. இங்கு பெரும்பாலோனோர் கவிஞர்கள் ஆவதே காதல் வயப்பட்ட பின்பு தான். என் காதல் என்னை விட்டு போன பின் கவிதையும் கூடவே போய்விட்டது.

பரண் மேலிருக்கும்
பழுப்பு பெட்டிக்குள்
கத்தை கத்தையாய்...
அவள்
பார்த்தது..
சிரித்தது...
பழகிய பதிவுகள் எல்லாம்
பத்திரமாகத்தான் இருக்கிறது
கல்லறைக்குள் தூங்கும்
பிரேதங்களாய்.....

மரணம் பற்றி எழுத நினைத்து மனம் எங்கெங்கோ அலைகிறது...ஒரு வேலை அவளை பிரிந்தது தான் என்னை பாதித்த முதல் மரணமாக கூட இருக்கலாம்.. மரணம் விட கொடியது கூடி களித்த காதலி பிரிவது..பிரிய நேர்வது....

எனக்கு மரணம் குறித்து பயம் இல்லையென்று நண்பர்கள் வட்டத்தில் சவடால் அடித்ததுண்டு... ஆனால் மரணத்தின் வாசல் வரை சென்று வந்த சில சம்பவங்கள் மரணத்தின் முன் எல்லோரும் கோழைகள் தான் என்பதை உணர்த்தியது... உண்மையிலேய தற்கொலைகள் கோழைதனமல்ல என்பது மரணத்தின் நெருக்கத்தை உணர்தவனுக்கு தான் தெரியும்.

மரணம்
மகா மௌனம்...

இழவு வீட்டு வாசலில்
ஒரு சில கண்ணீர்த்துளிகள் தான்
மரணித்தவனுக்கானவை...

இந்த கணக்கின் வகுத்தலில்
மட்டும்
மீதி வருவதே இல்லை.

Tuesday, December 29, 2009

பெருமழை பெய்த ஒரு நாளில்

பெருமழை பெய்த ஒரு நாளில்
ஒதுங்க இடம் தேடி தலை தூக்க
அதே நிலையில் நீயும்...

கண்கள் சந்தித்த அந்த நொடியில்
நீயும் நானும் ஓன்று தான்
நிலைமையில்....

சாலையோர டீக்கடையில்
பத்தோடு பதினொன்றாய் நானொதுங்க...
பேன்சி ஸ்டோர் வாசலில்
உனக்கு ஒரு இடம்...
உள்ளே வந்து நில்லம்மா...
கூடவே கரிசன வார்த்தைகள்..

சார்...சூடா..டீ வடை, போண்டா சார்..
அரை டிரவுசர் பையனின்
அன்பு தொல்லை...
தலை நரைத்த பெருசு
விட்ட பீடி புகை...
ஒதுங்கி நின்ற போதும்
பான்டை நனைத்த சாரல்...

இத்தனை கொடுமையிலும்
இனிமையாய் கழிந்தது பொழுது..
நொடிகொரு முறை
எனை நோக்கிய
உன் விழியின் சிரிப்பும்...
இதழின் சுழிப்பும்...

மழை நின்றது...
மின்னலென மறைந்தாய்..

மீண்டும் ஒரு
பெரு மழைக்காய் காத்திருக்கிறேன்....
உன் பெயர் கூட தெரியாது..

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...