காதல் தினத்தன்று இந்த பதிவு வருவது மிக யதேச்சையானது தான். ஆனால் மிக பொருத்தமானதும் கூட. நீங்கள் ஒரு இளம்பெண்குழந்தைக்கு தந்தையா...? நீங்கள் ஒரு காதலரா..? மேற்கொண்டு படியுங்கள். நீங்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
என் குடும்ப நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத தூண்டியது. பெற்றோர்களே ஜாக்கிரதை என்றும், பெண்குழந்தைகளே உஷார் என்றும் காத்த தோன்றினாலும் என்ன செய்ய இது இங்கே தினம் தினம் அரங்கேறும் ஒரு சோகம். காலத்தின் மறுக்க முடியாத யதார்த்தம். நாகரீக மோகத்திற்கு நாம் கொடுத்துகொண்டிருக்கும் விலை.
18 வயது பெண் குழந்தை. பார்த்து பார்த்து பெற்றோராலும், உறவினர்களாலும் கொண்டடி வளர்க்கப்பட்ட குழந்தை இன்று ஒரு வாலிபனோடு ஓடி போய்விட்டாள். பெற்றவர்களை விட, உறவுகளை விட, படிப்பை விட அவளுக்கு காதல் பெரிதாகி போன காரணம் என்ன என்று புரியாமல் நடைபிணமாக போய்விட்டனர் பெற்றோர்கள். அவர்களுக்கு தெரியாது இத்தனைக்கும் காரணம் அவர்களின் வளர்ப்பும் தானென்று. எத்தனை சமாதானம் சொன்னாலும், காரண காரியங்களை அடுக்கினாலும் நடந்தது நடந்தது தான். அவள் திரும்பி வர போவததுமில்லை. வர விரும்பவுமில்லை. ஆனால் அவர்களின் இந்த அனுபவம் கோடான கோடி பெற்றோருக்கு தெரிய வேண்டும்...இளம்பெண்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.
இந்த அப்பனுகளே இப்படித்தாண்ட..எப்ப பார்த்தாலும் நை நை நைன்னு...!!
பெரிசு தொல்லை தாங்கலை...!!
உனக்கென்ன தெரியும் இதைபத்தியெல்லாம்...
இது ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் கேட்கும் வார்தைகள் தான். கல்லூரி போகும் பெண்ணோ, பையனோ இருந்தால் கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் இந்த வசனங்கள் கேட்கும். தேவையற்ற கட்டுப்படும் சரி வரம்பு மீறிய சுதந்திரமும் சரி தவறான வளர்ப்பு தான். அளவுக்கதிகமான செல்லம், கேட்கும் போதெல்லாம் செலவிற்கு பணம் இவையெல்லாம் உங்கள் மகனோ மகளோ தவறான வழிக்கு தள்ளபடுவதர்க்கு போதுமான சூழ்நிலைகளை நீங்களே ஏற்படுத்திகொடுப்பதற்க்கு சமம்.
அவள் பிறந்ததிலிருந்தே செல்லமாக வளர்க்கப்பட்டவள். பெற்றவர்கள் ஒன்றும் டாட்ட பிர்லா இல்லையென்றாலும் அவள் கேட்டதெல்லாம் கிடைத்தது. தங்களை வருத்தி கொண்டாவது பெற்றோர்கள் அவளின் ஆசையை பூர்த்தி செய்தார்கள். உறவினர்களும் அப்படியே. அவள் ஒரு தேவதையாக வளர்ந்தாள். கல்லூரியில் எத்தனையோ கனவுகளுடன் அடியெடுத்து வைத்த அன்றைய தினம் அவளின் தகப்பனுக்கு அப்படியொரு பூரிப்பு. ஆனால் ஒரு கேடுகெட்ட கிழம், அவளின் பாட்டியின் வார்த்தையில் வந்தது அவளுக்கான சனி.
அவளின் அழகும், பேச்சும் எல்லோருக்கும் பிடிக்கும், அவளை கொத்திக்கொண்டு போக எத்தனையோ சொந்தங்கள் தயாராக இருந்தன. தன் மகள் வயிற்று பேரனுக்கு தான் அவளை மணமுடித்து தரவேண்டும் என்று பாட்டி உறுதியுடன் இருந்தாள். கல்விகனவுகளோடு இருந்தவள் நெஞ்சில் காதல் கனவுகளை நஞ்சென விதைத்தால் பாட்டி. ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி கொண்டு எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் ஆளான அவனை இவளால் தான் திருத்த முடியும் என்று அந்த பிஞ்சு மனதில் வஞ்சகமாக வாளை சுழற்றினாள். தன்னால் தான் ஒரு இளைஞன் வாழ்வு வளம் பெறுமா...?
யோசித்தாள்...யோசித்தாள்...அவளது வயது அப்படி.
திரைப்படங்கள் அவளை நம்ப வைத்தன...அவள் காதலில் விழுந்தாள்.
நட்புகள் அவளை உசுபேற்றின..? அவள் கதாநயகியானாள்..
ஊருக்கு பொறுக்கியானவன் அவளுக்கு நண்பனான்..!! அவள் காதலியானாள்
தாயிற்கும் தகப்பனுக்கும் விஷயம் தெரிந்ததும் வானுக்கும் பூமிக்கும் குதித்தார்கள். தன் தாய் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்றறிந்து பெற்றவளின் உறவை முறித்தான் தகப்பன். அது அவன் முதல் தவறு. கல்லூரிக்கு தானே கொண்டுபோய் விட்டு கூட்டி வர தொடங்கினான் அது இரண்டாவது தவறு. செலவிற்கு அஞ்சு பைசா கூட தரக்கூடாது என்று கட்டைளையிட்டான். மூன்றாவது தவறு. ஆசை ஆசையாய், பார்த்து பார்த்து மகள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றை செய்து விட்டாளே என்ற கவலையில் தண்ணி அடிக்க தொடங்கினான். அது அவனின் பெரும் தவறு.
எந்த மாதிரியான சூழ்நிலையில் பெற்றவர்களுக்கு மகளின் காதல் தெரியவந்தது என்பதை நான் விளக்க விரும்பவில்லை. காரணம் என் நண்பரின் மரியாதை கருதி தான். அவர் நல்லவர். நடுத்தர வர்க்கத்தின் கடினமான உழைப்பாளி, தன் குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருந்த ஒரு சராசரி யதார்த்த மனிதர். அவரின் அறிவிற்கும், வளர்ப்பிற்கும் அவர் செய்தது சரி, அவரால் அவ்வளவு தான் சிந்திக்க முடியும். ஆனால் காலம் வேறொரு முடிவை எடுத்திருந்தது அவருக்கு தெரியாமலே போனது.
பெற்றவளின் உறவை முறித்ததால் அவள் வழி உறவுகள் எதிரியாயின. என்ன பொல்லாத தப்பு பண்ணிட்டாள், முறைபையன் தானே..வேற எவனுக்கு கட்டி கொடுத்தாரான்னு பார்த்தறேன். தகப்பனை வீழ்த்த சூழ்ச்சிகள் அரங்கேறின.. முதல் தவறின் பயன்.
காலையும் மாலையும் தந்தை உடன் வருவது திடீரென அவளுக்கு சுமையாயின. நான் இனி தவறு செய்யமாட்டேன் என்னை நம்புங்கள் என்று மகள் கதறியதை தகப்பன் பொருபடுத்தவில்லை. கல்லூரி முடித்து உன்னை நல்லவன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பது எனது கடமை. இனி என்னோடு தான் நீ வரவேண்டும் என்று சொல்லிவிட்டான். தன் மேல் ஒரு துரும்பு பட்டால் கூட தங்க முடியாத அப்பா, தனக்காக எதையும் செய்யும் அப்பா இன்று தன் மேல் நம்பிக்கை இல்லாமல் கூடவே வருவது அவளுக்கு எதிர்ப்புணர்ச்சியை தூண்டியது. அப்பன் வில்லனாகி போனான். அவனின் இரண்டாவது தவறின் பயன்.
இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக காதலர்களுக்கு பெற்றவர்களை ஏமாற்றவது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதை வெகு விமரிசையாக சினிமாக்கள் சொல்லி தந்து விடுகின்றன. அதுவும் தொலைக்காட்சி வழி ஒரு பைசா செலவில்லாமல் வீட்டிற்குள்ளேய..அவள் பொய் சொல்லி கல்லூரி விட்டு வெளிய வந்தாள். காத்திருந்த காதலனுடன் ஊர் சுற்றினாள். தன்னை நம்பாத தகப்பனுக்கு அவளை பொறுத்தவரை இது ஒரு நல்ல பாடம். பாட்டியின் தயவில் அவனிடம் காசு புழங்கியது. அவள் அவனுக்காக செலவழித்தான். அவள் வாழ்க்கையையும். இது தகப்பன் செய்த மூன்றாம் தவறின் விளைவு.
இதுவரை தன் வாழ்வில் முன்மாதிரியான ஒரு தந்தை இன்று எதிரியானார். அவர் ஒன்றும் மது வாசனை அறிந்திராத நல்லவர் இல்லை. எப்போதாவது காதும் காதும் வைத்த மாதிரி குடித்துவிட்டு பிள்ளைகள் உறங்கிய பின் வீட்டிற்கு வருவார். அவர் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவர் மது அருந்துவது. இன்று எல்லாம் மாறிபோயவிட்டது. பகலில் கூட அவர் தண்ணி அடித்துவிட்டு வருவார். ஒரு பத்திரிகை செய்தியோ, தொலைக்கட்சியில் வரும் ஒரு காதல் வசனமோ கூட அவரை உணர்ச்சி வசப்பட வைத்தது. தன் மகள் தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ, அவளின் எதிர்காலம் இருண்டு என்னாகுமோ.. என்ற கவலையில் கிட்டத்தட்ட மன நோயாளியானர். இந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் மதுவே அவருக்கு பக்க துணையாக இருந்தது. தன்னை மறந்துவிட குடிப்பார். தன்னை நினைத்தும் குடிப்பார்.
அக்கம் பக்கம் இதுவே பேச்சாகி போக, அவர் எதன் பொருட்டு குடிக்கிறார் என்பது மறந்து அந்த 18 வயது பெண் குழந்தை அப்பனை வெறுக்க தொடங்கியது. அவள் காதலனும் ஒரு குடிகாரன் தான் ஆனால் அவனை மன்னித்து விட தயாரானாள். தன் பொருட்டு அவன் திருந்திவிடுவான் என்று நினைத்தாள். அவனை நம்பினாள். ஆனால் அப்பனை அவள் மன்னிக்க தயாரில்லை. இது மனித மனத்தின் வினோதம். வாழ்வின் சுவராசியமும் இது தான். பிடித்தமானவர்கள் எது செய்தாலும் இனிக்கும்.
ஒரு சாரயக்கடை திண்ணையில் தான் அந்த தேவைதையின் வாழ்க்கையில் புயலை கிளப்பிய செய்தியொன்று அவள் அப்பனின் காதுகளை வந்தடைந்தது. அது அவனோடு எங்கயோ வண்டியில் சென்றதை பார்த்தாய் ஒரு செய்தி. ஊரார் பேசும் அளவிற்கு அவளின் நடத்தை ஆகிவிட்டதே என்ற ஆத்திரத்துடன் தன்னிலை மறந்து குடித்தான். அவள் ரத்தத்தையும் குடித்து விடும் வெறியுடன் வீடு நோக்கி நடந்தான். அவனின் வேகம் கண்டு, கோபம் உணர்ந்து வீட்டிற்கு செய்தி பறந்தது. அவள் அசரவில்லை. தாயார் துடித்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனை தடுக்கவும் முடியவில்லை. அவன் அடித்து துவைத்தான். கொன்று விட துடித்தான். அக்கம்பக்கம் தடுத்தது. உறவுகள் அவனை ஆசுவாசபடுத்த வந்தது. வார்த்தைகள் இரைந்தன...நாற்றத்தில் உணவெடுக்கும் காகங்கள் கூட கதை பொத்திக்கொண்டு பறந்தன..வார்த்தைகள் நாறின. காட்சிகள் மாறின. கொல்லைபுறமாக கட்டிய துணியோடு அவள் அவன் வீடு நோக்கி பறந்தாள். அப்பனை காரி உமிழ்ந்தாள்.
போதை தெளிந்ததும் விஷயமறிந்து கதறி துடித்தான். எது நடக்க கூடாது என்று அல்லும் பகலும் தன்னை வருத்தினானோ அது நடந்துவிட்டது. அதுவும் தன்னாலேயே முடிந்து விட்டது தெரிந்து நடைபிணம் ஆனான்.
இது நடந்து ஒரு மாதத்திற்கு பின் தான் நான் அவரை சந்தித்து விஷயமறிந்தேன். இதை நாலு பேருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்க்க்காகதான் இந்த பதிவு. அது மட்டுமல்ல ஒரு தகப்பனாக அவர் மனநிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. நான் ஒரு 3 வயது பெண் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் இன்னும் ஒரு சில விசயத்தை காதலர்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.
சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது...உங்கள் மனைவி உங்களிடம் தான் முதலில் காட்ட சொன்னார் என்று அந்த வெள்ளுடை நர்ஸ் ஒரு ரோஜா குவியலாக கொண்டு வந்து காட்டியபொழுது மணி இரவு பதினொன்று இருபது... அந்த முதல் நிமிடம் என்னும் ஏற்படுத்திய பரவசம் எந்த வார்த்தைகளாலும் கொண்டு நிறைத்து விட முடியாது. வள்ளுவனும் வார்த்தையின்றி திணறும் இடம் அது.
முதல் சிரிப்பு, முதல் வார்த்தை, அந்த பால்மண வாசம், கோடி கொடுத்தாலும் கிடைத்துவிடாத அந்த எச்சிலின் சுவை, சொல்ல ஆயிரம் அனுபவங்கள். அந்த செல்ல குழந்தையின் மல ஜாலங்கள் கூட முகம் சுளிக்க வைத்ததில்லை. பார்த்து பார்த்து அந்த குழந்தையை நாங்கள் வளர்கிறோம். நான் மட்டுமல்ல எல்லா பெற்றோரும் தான். கல்லூரி படிக்கும் போது, ஏன் கல்யாணத்திற்கு முன்பு வரை கூட சில விஷயங்களில் என் பெற்றோரை நான் கடிந்திருக்கிறேன். ஆனால் என்றைக்கு நான் ஒரு தகப்பன் ஆனேனோ, எந்த குழந்தைக்காக என் உயிரை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேனோ...அப்படித்தானே என் தகப்பனும், தாயும் தன் உதிரம் கொட்டி என்னை வளர்த்திருப்பார்கள். நானாவது ஒரு கௌரவமான வேளையில், நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். என் தாயும் தகப்பனும் மழையிலும், வெயிலிலும் வியாபாரம் செய்தல்லவா என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று நினைத்த நாள் முதல் என் தகப்பன் எனக்கு தெய்வமாகி போனான். அவர்களை இன்று நினைக்காத நாளில்லை.
காதலிகளே..காதலர்களே.. காதலின் வெற்றி எது..? திருமணமா...? இல்லை. காதலின் வெற்றி என்பது கௌரமான வாழ்க்கை. அதுவும் பெற்றவர்களுடன், உறவுகளுடன், சமூகத்துடன் இணைந்த ஒரு இனிமையான அனுபவம். காதலின் வெற்றி வெறும் உடற்சேர்க்கை மட்டுமல்ல. உங்கள் காதலியை பெற்றவர்களுக்கும் கௌரவத்தை, ஒரு சமூக அந்தஸ்தை கொடுப்பது தான். அவர்களின் இருபது வருட கனவு அந்த பெண் குழந்தை, அதை தட்டி பறிக்கையில் ஏற்படும் பதட்டம் ஒரு சில வேண்டாத சம்பவங்களை ஏற்படுத்திவிடும். அவர்களை புரிந்து கொள்ளுங்கள். உங்களை பக்குவமாய் புரிய வையுங்கள். எல்லாம் சுபமாகும்.
அன்புடன்
எல்லா பெண் குழந்தைகளும் நலமுடன் வாழ மனாதர பிரார்த்திக்கும் ஒரு தகப்பன்.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
:) entry
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteமாங்கு மாங்குன்னு எழுதி ஒன்னும் பிரயோசனமில்லை.
ReplyDelete